2 நிமிட வாசிப்பு

இன்று ஒரு வழக்கமான ஞாயிறுதான். நேற்றுதான் வாடகை வீட்டை மாற்றிவிட்டு மிகுந்த களைப்புடன் கணினி முன் அமர்ந்திருக்கிறேன். ஓய்வெடுப்பதுதான் இன்றைய திட்டமே. ஆனால் இன்று ஒரு குற்ற உணர்வும், மனச் சோர்வும் வந்து ஆட்கொண்டுள்ளது. ஏனென்றால், இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளும்கூட. வாழ்நாளெல்லாம் செயலூக்கத்துடன் வாழ்ந்து, 80000 பக்கங்களுக்கும் மேல் எழுதித்தள்ளி, வெவ்வேறு நிலங்களில் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம்செய்து, விதவிதமான மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தவர். அவர் பிறந்தநாளில் இப்படி செயலற்ற வாழ்வு எனக்கு அமையலாகாது.

ஆசிரியர் ஜெயமோகனும், ஒவ்வொரு நொடியும் செயலூக்கத்துடன் வாழ்பவர். களைப்பைச் செயலின் வழியே கடப்பவர். இந்த வாரம் அவர் வசனமெழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான வேளையில், அலைப்பேசியை அனைத்துவிட்டு தொடர்ந்து தமிழ் விக்கியில் எழுதிக்கொண்டிருந்ததாகப் பதிவிட்டிருந்தார். அவரின் அசுர ஆற்றலை ஓரிரு நாளேனும் அருகில் அமர்ந்து உணர்ந்திருக்கிறேன். இப்படி நொடிக்கு நொடி வாழ்பவர்களை வாசித்துவிட்டு வெட்டியாக நேரம் கடத்த முடியாது. செயலே விடுதலை!

நான் கடைசியாகப் பயணம் செய்து குறைந்தது மூன்று வருடங்களாகிவிட்டது. கடைசியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 2018ல் தனியாகச் சுற்றிவிட்டுவந்தேன். 2019ல் கடைசியாக இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். 2020 மற்றும் 2021ல் வெளியே பயணிக்கவில்லை என்றாலும், எனக்குத் திருப்தியாகப் புனைவும் அபுனைவும் வாசித்திருந்தேன். இந்த வருடம் வாசிப்பும் மந்தமாகிவிட்டது. ஒரு வலைப்பூ துவங்கித் தொடர்ந்து எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று யோசித்திருந்தேன். அதுவும் நீண்டநாட்களாகக் கிடப்பில் உள்ளது. தேக்கம் சலிப்பையும் மனச்சோர்வைக் கிளறிவிடுகிறது.

வலைப்பூவைப் பொருத்தவரை, எதை எழுதுவது என்பதே முதல் தடை. வாசிப்பில் நான் இப்போதைக்கு ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறேன். அதிகபட்சம் 10-15 புனைவுகளையே இதுவரை வாசித்திருப்பேன். வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன் என்கிற பெயரில் எதையாவது உளறிவைக்கக் கூடாது என்று உடனே starting trouble வந்துவிடுகிறது. சிறுநீரை அடைத்துவைப்பதைப் போன்ற ஒரு உபாதை இது. எப்படியும் முதல் சிலநூறு பதிவுகளை யாரும் பொருட்படுத்தி வாசிக்கப்போவதில்லை. எவரும் படிக்கவிட்டால்தான் என்ன! ஆனந்தரங்கம் பிள்ளை அவரின் பதிவுகள் வரலாற்றில் முக்கியப்பங்கு எடுக்கும் என்று யோசித்த தனது நாட்குறிப்புகளை எழுதி வைத்திருப்பார்? எதையாவது இப்போதைக்குப் பதிவிட்டு ஆரம்பிப்போமே என்று இறங்கிவிட்டேன். Well begun is half done!

குறிச்சொற்கள்:

புதுப்பிக்கப்பட்டது: