எலான் மஸ்க்
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், எல்லோராலும் பேசப்படும் பிரபலம் எலான் மஸ்க்தான். அவரை மெச்சுபவர்களுக்கு நிகராகவே வெறுப்பவர்களையும் சம்பாதித்து வைத்துள்ளார். இந்தப் பதிவு எனக்கும் அவருக்குமான ஒரு வினோதமான உறவைப்பற்றியது.
சமீபத்தில் நான் சில சமூக ஊடகங்களிலிருந்து எனது கணக்கை முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டதாகப் பதிவிட்டிருந்தேன். அதன் முதல் தொடக்கம், Facebook நிறுவனம் தனது கொள்கைகளை Whatsappல் மாற்றிக்கொண்டதுதான். நான் பொதுவாக அத்தகைய அறிவிப்புகளை சட்டை செய்வதில்லை. ஆனாலும், அந்த அறிவிப்பை கவனத்துடன் ஆராய்ந்து அதிலிருந்து வெளியேறினேன்.
அதற்கு மஸ்க் ஒரு முக்கியக் காரணம். அவர் தனது Twitter பக்கத்தில், ‘use signal’ என்கிற ஒரு பதிவைப் போட்டுவைத்திருந்தார். அது பரவலாக கவனிக்கப்பட்டது. எல்லோரும் Whatsapp மட்டுமல்லாமல், Facebookல் இருந்தும் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அதே சமயம் நானும் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரம் குறித்து கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஒரே நாளில் Whatsappல் உள்ள எல்லா குழுமங்களிலும் சென்று நான் வெளியேறுவதாகப் பதிவிட்டுவிட்டு கணக்கை உடனடியாக முடித்துக்கொண்டேன்.
அதே வேகத்தில், Facebook மற்றும் Instagram கணக்குகளையும் முடித்துக்கொண்டேன். ஆனால், அதுவரை அதிகம் பயன்படுத்திடாத Twitter கணக்கைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். என் நேரத்தை அது உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தது. தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள அதில் பிரபலமானவர்களைப் பின்தொடர வேறொரு கணக்கை ஆரம்பித்தேன். இப்படி ஒன்றுக்கு இரண்டாக அது வளர்ந்துகொண்டே சென்று, ஓய்வுநேரம் கிடைக்கும்போதெல்லாம், அதிலேயே இருக்க ஆரம்பித்தேன்.
சமீபமாக எனக்கே நான் சொல்லிக்கொள்ளும் வாக்கியம் Anxiety தான். எனது Anxiety அளவு அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக நானே உணர ஆரம்பித்ததும், Twitterல் இருந்து வெளியேறுவது அவசியமாகிவிட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியும் என் பயன்பாட்டு நேரம் குறைந்தபாடில்லை.
அப்போதுதான், மஸ்க் Twitter நிறுவனத்தை முழுவதுமாக வாங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி, உலகமே கதறிக்கொண்டிருந்தது. அவரும் வாங்கியவுடன் தடாலடி நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதில் கணக்கு வைத்திருந்த பிரபலங்கள் வேறு ஊடகங்களுக்குத் தாவ ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக Mastodon தளத்திற்குத்தான் படையெடுக்கிறார்கள். நானும் விரைவாகச் சென்று பல்வேறு Mastodon தளங்களில் முன்று கணக்குகளைத் தொடங்கினேன்.
இன்று திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதும் எனது கை தானாகவே அலைப்பேசியை நாடிச்சென்றது. சிறிது நேரம் Twitter, Mastodon என்று அலைந்ததும், சட்டென்று என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இது இப்படியே சென்றால் விளைவு விபரீதமாகத்தான் முடியும். இதுதான் எனக்கு சரியான சந்தர்ப்பம் என்று யோசித்து, எனது இரண்டு Twitter கணக்குகளையும் உடனடியாக முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டேன். மற்ற Mastodon கணக்குகளும் முடிவுக்கு வந்துவிட்டன.
இப்படி என் ஒவ்வொரு கட்டத்திலும், சமூக ஊடகங்களிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டவர் மஸ்க்தான். அவருக்கு என் நன்றி.
இந்த சமூக ஊடகங்கள், எந்தச் செய்தியும் உடனுக்குடன் நமக்குத் தெரிந்தாகவேண்டும் என்கிற ஒரு மாயையை உருவாக்கி விட்டிருக்கின்றன. அதில் உள்நுழைந்து நல்ல பலனை அடைந்தவர்களில் மிகச்சிலரில் ஒருவர் மஸ்க். அவரின் எந்த நிறுவனத்திற்கும் விளம்பரச் செலவு என்பதே பொதுவாக இல்லை. அத்தகைய விளம்பரங்களை மஸ்க் தனது Twitter பக்கத்திலேயே செலவில்லாமல் முடித்துக்கொள்வார்.
ஆனால் கத்தி எடுத்தவனுக்கு அதில்தான் முடிவு. அவர் எவ்வளவு பணத்தை விளம்பரங்களில் இருந்து சேமித்தாரோ, அதற்குப் பலமடங்கு செலவழித்து Twitter நிறுவனத்தை வாங்கி இப்போது கடனாளியாகிவிட்டார். ஒரு நல்ல பிரபலம், இப்படி சிக்கிக்கொண்டது வருத்தமளிக்கத்தான் செய்கிறது. நாமாவது இப்போதைக்கு தப்பிப்போமே!
இனி எந்த Appகள் எல்லாம் எனது கவனத்தை ஈர்த்து Anxiety அளவை உயர்த்துகின்றனவோ, அவற்றில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவதுதான் என் கொள்கை முடிவு. இனி மற்றவர்களுடன் நான் தொடர்பில் இருப்பது, மின்னஞ்சல் மூலமாகத்தான் இருக்கும். அதையும் வாரம் ஒருமுறை மட்டுமே பார்க்கும்படி வைத்துக்கொள்ளப் போகிறேன். தொழில்நுட்பச் செய்திகளைப் பின்தொடர, ஏதாவது நல்ல வார அல்லது மாத இதழைச் சந்தா கட்டி வாசிக்க ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.
இலவசமாகக் கிடைக்கும் எந்தச் சேவையும் நம்மிடம் இருந்து எதையாவது எடுத்துக்கொள்வதிலும் முனைப்பாகவே இருக்கும். முக்கியமாக நம்முடைய கவனம் மற்றும் நேரம்தான் அவர்களின் முக்கிய இலக்கு. அதில்தான் அவர்கள் விளம்பரங்களைத் திணித்து, இலாபம் பார்க்க முடியும்.