13 நிமிட வாசிப்பு

எல்லோரையும்போல நானும் பயணங்களை விரும்புகிறவன். என்னைப்பொருத்தவரை பயணம் என்றாலே அது தனியாகச் செல்வதுதான். அதுவும் நேர நெருக்கடியோ, இலக்கோ இல்லாமல் செல்வதுதான் பிடிக்கும். ஆனால் நேற்று சென்னையிலிருந்து தருமபுரி அருகே உள்ள கடத்தூர் என்னும் சிற்றூருக்கு ஒருநாள் பயணம் செய்யவேண்டியிருந்தது. வழக்கம்போல இரயிலில்தான் முன்பதிவு செய்திருந்தேன். இந்தப் பயணத்தில் கிடைத்த சில அனுபவங்களைப் பற்றியே இந்தப்பதிவு.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் உள்ள சம்பவங்கள் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள அனைவருமே சந்தித்திருக்கக்கூடியதுதான். குறிப்பாக கிராமப்புறத்திலேயே புழங்குபவர்களுக்கு இது சலிப்புத்தட்டலாம். எனவே யோசித்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ளவும்.

2020ல் கோவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே நான் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டிருந்தது. 50 கிலோமீட்டருக்குள் எங்குச் சென்றாலும் பைக்கில்தான். 100 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் என்றால் இரயில்தான். கடத்தூருக்கு அருகே 15 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு இரயில் நிறுத்தங்கள் உள்ளன, பொம்மிடி மற்றும் மொரப்பூர். போகும்போது மொரப்பூரில் இறங்கிக்கொண்டேன். கிளம்பி வருவதற்கு இரண்டு சீட்டுகளை வைத்திருந்தேன். முதலில் எடுத்தது சாதாரண கட்டணத்தில் வட இந்தியா செல்லும் ஒரு இரயிலில் sleeper classக்கு முன்பதிவு செய்திருந்தேன், ஆனால் அது waiting listல் இருந்தது. எனவே, கோவை விரைவு வண்டியிலும் ஒரு AC chair car டிக்கெட் Tatkalல் முன்பதிவு செய்துகொண்டேன். கடைசியில் இரண்டு வண்டிகளிலும் எனக்கு இருக்கை கிடைத்துவிட்டது. சீக்கிரமாக வந்துவிடுவோமே என்று 3.30க்கு பொம்மிடியில் நிற்கும் Allapy Danbad express இரயிலில் ஏறிக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன்.

கடத்தூரில் 45 நிமிட காத்திருத்தலுக்குப்பிறகு சேலம் செல்லும் பேருந்தில் ஏறினேன். மதியநேரத்திலும் பேருந்தில் பயங்கர இட நெருக்கடி, fevicol விளம்பரத்தில் வருவதைப்போல எல்லோரும் ஒட்டிக்கொண்டே பயணிக்கவேண்டிய நிலை. படிக்கட்டுக்குப் பக்கத்திலிருந்த இருக்கையிலிருந்தவர்கள் மற்றவர்களை மேலே சாயாமல் நிற்கும்படி சத்தம்போட ஆரம்பித்தார்கள். நடத்துநர் வந்து அவர்களைச் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. நான் ஒரு கம்பியைப்பிடித்து நின்றுகொண்டேன். பக்கத்திலிருந்த சீட்டில் இரண்டு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரு அம்மா தன் குழந்தையை அவர்களிடம் கொடுக்க, சிறிதுநேரம் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே வந்தார்கள். வண்டி ஒரு மூன்று கிலோமீட்டர் கடந்திருக்க வேண்டும். அதில் ஒருவர் தனது கைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தார். சிறிது நேரம் இன்ஸ்டாகிராமில் வேகமாக ஸ்க்ரோல் செய்துகொண்டே வந்தார். பிறகு snapchatஐத் திறந்து அந்த குழந்தையுடன் selfie விதவிதமாக எடுக்க ஆரம்பித்தார். அதில் சில beautification modeகளை மாற்றி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வலையேற்றினார், அந்த படத்துக்கு எத்தனைப்பேர் எதிர்வினையாற்றுகிறார்கள் என்று அதையே பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குள் நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் அடித்துப்பிடித்து ஒருவழியாக பொம்மிடியில் இறங்கிக்கொண்டேன்.

அன்று நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. இரயில் நிலையத்தின் காத்திருப்போர் அறையில் பயணிகள் யாருமே இல்லை. 3.30க்கு இரயில் ஏறுவதற்கு, நான் 2.30க்கே வந்திருந்தேன். முதல் நடைமேடையில் ஒரு கூட்ஸ் வண்டி நிலக்கரியை ஏற்றிக்கொண்டு மெதுவாக வந்துகொண்டிருந்தது. அதையாவது வேடிக்கை பார்க்கலாமென்று வராண்டாவில் நடக்க ஆரம்பித்தேன். இளம் ஜோடி ஒன்று கம்பத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு விசித்திரமான அமைதியுடன் இருந்தார்கள். மழையில் நனையாத ஒரு காலி இருக்கையைக் கண்டுபிடித்து உட்கார்ந்துகொண்டேன். அடுத்த இருக்கையில் ஒரு பிச்சைக்காரர் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த ஜோடியிலிருந்த பெண் என்னையே அடிக்கடி நோட்டம் விட்டபடி இருந்தார். அந்தப் பையன் 25 வயதைக் கடந்தவனாக இருக்கவேண்டும், கைப்பேசியிலேயே முகம் புதைத்திருந்தான். அவள் அடிக்கடி என்னை நோட்டம் விடுவது கூச்சமாகவே, எனது வண்டி வரும் இரண்டாவது நடைமேடைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நடைமேடை 1ல் இருந்து 2க்கு செல்ல மேலே படியேறி பாலத்தைக் கடக்கவேண்டும். படிக்கட்டை நெருங்கியதும் மற்றொரு ஜோடி வேகமாகப் படிக்கட்டின் கீழ்ப்பக்கத்தில் இருந்து திடீரென்று வெளியே வந்தார்கள். நான் சற்று திடுக்கிட்டபின் சுதாரித்துக்கொண்டு படியேற ஆரம்பித்தேன். இந்த ஜோடி நிச்சயம் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வாய்ப்பில்லை. அந்த கூட்ஸ் இரயில் கருப்பு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. படி ஏறியதும் அந்த வண்டியை வேடிக்கை பார்க்கலாம் என்று பாலத்தின்மேல் நின்ற நான், அனிச்சையாகக் கீழே கம்பத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த ஜோடியைப் பார்க்க நேர்ந்தது. இரயிலுக்கு 2 நிமிடம்தான் இருப்பதுபோல அவர்கள் வேகமாக சில சில்மிஷங்களைச் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். வேகமாக 2வது நடைமேடைக்குச் சென்று படி இறங்கினேன். ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பிரவுன் நிற ஜட்டி வெளியே தெரிய லுங்கி அணிந்து படியில் உட்கார்ந்து Youtube பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த நடைமேடையில் நிழலுக்கு இருந்த மரங்கள் எல்லாம் மழையில் நனைந்து இலையைத் தொங்கவிட்டிருந்தன. சாரல் அதிகமாகவே, குடையைப் பிடித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். இரயிலின் கடைசிப் பெட்டி நிற்கும் இடத்திலிருந்த நிழற்குடையில் நான்கு பையன்கள் உட்கார்ந்து எதையோ செய்துகொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்தே அங்கே பெண்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அங்கே செல்ல முடிவெடுத்தேன். நான் அந்த இடத்தை அடைவதற்குள் அந்த கூட்ஸ் வண்டி இரயில் நிலையத்தைக் கடந்துவிட்டிருந்தது. அந்த பையன்கள் அனைவரும் கைப்பேசியில் சேர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். எதிராளியைச் சுட்டுத்தள்ள அதிக புல்லட் பயன்படுத்தியது தொடர்பாக இருவர் சண்டை போட்டுக்கொண்டார்கள். online விளையாட்டாக இருக்கவேண்டும்.

அவர்களை வேடிக்கை பார்த்தபடியே 30 நிமிடம் போனது. அதில் ஒரு பையன் அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்துவிட்டு, தான் மீன்கடைக்கு பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருப்பதாகவும், வந்துவிடுவதாகவும் கூறி அழைப்பைத் துண்டித்தான். சிறிதுநேரம் விளையாடிவிட்டு மற்றவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான். எனக்கு வரவேண்டிய வண்டி குறித்து ஒலிபெருக்கி அறிவித்தது. மழை சற்று கணமாகப் பொழிய ஆரம்பித்தது. நின்ற இரயில் முழுவதும் பயணிகளாகவே இருந்தார்கள். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளைக் கடந்து எனக்கான பெட்டியை வேகமாகத் தேடினேன். ஆனால் எல்லா பெட்டிகளிலும் மக்கள் படிக்கட்டிலேயே அமர்ந்திருந்தார்கள். எனக்கு S3 பெட்டியில் 4வது இருக்கை. வழியிலிருந்த பயணிகள் அனைவரும் மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தார்கள். நான் வற்புறுத்தியும் அவர்கள் வழிவிட மறுத்துவிட்டார்கள். எனக்குப் பதட்டம் அதிகமாகிவிட்டது. மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு நெரிசலில் 4வது இருக்கையில் அமர்ந்து 6 மணிநேரம் பயணிக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். கிட்டத்தட்ட அடுத்த பக்கத்து வெளிச்சம் தெரியாத அளவுக்கு நெரிசல். அனைவரும் வட மாநிலத்தவர்கள். இரயிலும் கிளம்புவதாக முடிவெடுத்துவிட்டது. நான் எதுவும் செய்ய முடியாதவனாக நடைமேடையிலேயே மழையில் நின்றிருந்தேன்.

இரயில் கிளம்பிச் சென்ற இரண்டு நிமிடங்களுக்குள் சுதாரித்துக்கொண்டு, எப்படியாவது அடுத்த இரயிலைப் பிடித்துவிடவேண்டும் என்று எனக்கே சபதம் இட்டுக்கொண்டேன். ஆனால் கோவை விரைவு வண்டி இந்த நிறுத்தத்தில் நிற்காது. அதற்கு அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மொரப்பூர் சென்றாக வேண்டும். நேரம் என்னவோ கையிருப்பிலிருந்தது. நேராகச் செல்ல பேருந்துகள் கிடையாது. பொம்மிடி இரயில் நிலையத்திலிருந்து நான் கிளம்பி வந்த கடத்தூர் வழியாகவே ஒடைசல்பட்டி கூட்ரோடுக்குச் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடித்து மொரப்பூர் செல்லவேண்டும். வேறு வழியே இல்லை. தருமபுரி செல்லும் ஒரு தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டேன். அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒரு 25வயது இளைஞர், உட்கார இடம் இருந்தும் நின்றுகொண்டே வந்தார். குடித்துவிட்டிருந்தார்.

நடத்துநர் பயணச்சீட்டு வாங்கச்சொல்லியும் அவர் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. நடத்துநர் அங்கேயே நிற்கவே, பாக்கெட் இல்லாத மேல்சட்டையில் கையை விட்டு சற்றுநேரம் துழாவிக்கொண்டிருந்தார். எரிச்சலடைந்த நடத்துநர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுமாறு கூறி கடந்துசென்றுவிட்டார். நிற்க முடியாமல் வடிவேலு போலத் தடுமாறிக்கொண்டே வந்தார். பேருந்திலிருந்த பெண்களில் சிலர் எரிச்சலுடனும் சிலர் சிரிப்புடனும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் இறங்கவேண்டிய இடத்தில் எழுந்துகொண்டேன். கூட்ரோட்டில் அடுத்த பேருந்துக்காகக் காத்திருப்பதற்குள் 10 ரூபாய்க்கு ஒரு சூடான தேநீர் வாங்கிக்கொண்டேன். பாதி குடிப்பதற்குள் பேருந்து வந்ததால் சுதாரித்துக்கொண்டு முடிந்தவரை விழுங்கினேன். இந்தப் பேருந்தில் அதிகமான கூட்டம். முன்படிக்கட்டில் ஏறி ஓட்டுநர் பக்கமாக நின்றுகொண்டேன். முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன். வாய் சுட்டுக்கொண்டது வேறு வலித்தது.

அடுத்த சில நிறுத்தங்களிலும் பயணிகள் ஏறிக்கொண்டே இருந்தார்கள். யாரும் இறங்கியபாடில்லை. தருமபுரி அரூர் சாலை செப்பனிடும் பனி கிடப்பில் போடப்பட்டிருந்தது. வண்டி மண் சாலையிலேயே சேற்றில் உழன்றுகொண்டே சென்றது. அந்த பேருந்து Tata நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சாலையிலிருந்த மேடு பள்ளங்களையும், இருந்த பயணிகளையும் எப்படித்தான் அந்த வண்டி சமாளிக்கிறது என்று எனக்கு ஐயமாகவே இருந்தது. பயணிகள் அனைவரும் ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருந்தார்கள். நடத்துநர் ஒரு பாட்டியிடம் சில்லறை கேட்டுக் கடிந்துகொண்டார். அடுத்த சில நிறுத்தங்களில் நிற்கவேண்டாம் என்று ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார்.

அந்த வண்டியின் கண்ணாடிகளில் உள்பக்கமாக நீராவி புகுந்து வெளியே எதுவும் தெரியாத அளவுக்கு மறைத்தது. ஓட்டுநர் 60 வயதை நெருங்கியவர், தனது குடிதண்ணீர்க் கேனைத் திறந்து கண்ணாடியின் மீது வீசினார். தண்ணீர் பட்டு கண்ணாடி தெளிந்தது. பயணிகளில் சிலர் அதைப்பார்த்து புண்ணகைத்துக்கொண்டார்கள். wiperஐ அடிக்கடி இயக்கி வெளிப்பக்கமும் தெளிவாகும்படி செய்துகொண்டே வண்டியை இயக்கினார். பயணி ஒருவர் இறங்கவேண்டியதால் ஒரு நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினார். அங்கேயும் 5-6பேர் ஏறிக்கொண்டார்கள். கிட்டத்தட்டப் பிதுங்கிக்கொண்டே சென்றது பேருந்து. ஏறிய ஒரு 45 வயது பெண் என் பக்கமாகத் திரும்பி உள்ளே செல்லும்படி திட்டிக்கொண்டே இருந்தார். அவர் படிக்கட்டிலேயே கம்பியின் ஓரத்தில் நின்றிருந்தார். அவரின் உடல் முழுவதும் கைகளாகவே இருந்தது. கையில் இரண்டு கிலோ தக்காளி வாங்கி கவரில் வைத்திருந்தார். அவரைப்பார்த்து நான் முடிந்தவரை நகர்ந்து, என் கால் எஞ்சினுக்குப் பக்கத்திலும் என் தலை கிட்டத்தட்ட ஓட்டுநரின் தலைக்கு நேராகவும் இருக்குமாறு சாய்ந்து நின்றுகொண்டேன். முதுகுவலி எடுக்க ஆரம்பித்திருந்தது.

40 நிமிட பயணத்துக்குப்பின் ஒருவழியாக மொரப்பூரில் இறங்கிக்கொண்டேன். இரயிலுக்கு இன்னும் ஒருமணிநேரம் இருந்தது. நான் 6-7மணிக்குள் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொள்பவன். உடல் ஈரம் இன்னும் ஆறியிருக்கவில்லை, கிட்டத்தட்ட நடுங்கிக்கொண்டே இருந்தேன். எனவே அருகிலிருந்த தள்ளுவண்டிக் கடைக்குச் சென்று 25ரூபாய்க்கு ஒரு சூடான மசாலா பூரி வாங்கினேன். வாய் சுட்டுக்கொண்டது வலித்ததால், சூடு ஆறும்வரை காத்திருந்து முழுவதுமாக சாப்பிட்டு முடித்தேன். சுவை அருமையாக இருந்தது. அந்த சிறிய பேருந்து நிறுத்தத்தைச் சுற்றிவந்தேன். மழை அதிகரித்ததால், இரயில் நிலையத்துக்கு விரைந்தேன். அங்கே நடைமேடையில் சிறுநீர் கழிக்க வசதியில்லை. கடைசிவரை சென்று நடைமேடையிலிருந்து இறங்கி அருகில் நின்றிருந்த கூட்ஸ் வண்டிக்குப் பின்னால் சென்று சிறுநீர் கழித்தேன். அதற்குள் ஓரளவு இருட்டி விட்டிருந்தது. மழை அதிகமாகப் பிடித்துக்கொண்டது. 6.30க்கு வரவேண்டிய வண்டி 7க்கு வந்தது. இடி மின்னலால் அங்கே மின்சாரம் 15 நிமிடம் துண்டிக்கப்பட்டிருந்தது. என் வண்டி வருவதற்குள் இரண்டு கூட்ஸ் வண்டிகளும் ஒரு அதிவிரைவு வண்டியும் கடந்துசென்றன. ஒருவழியாக c2 பெட்டி நான் நின்றிருந்த இடத்துக்கு அருகிலேயே வந்து சேர்ந்தது. 19வது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். AC அதிகமாக இருந்ததால், என் ஜாக்கெட்டை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.

எனக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் விலைமதிப்புள்ள உடை, ஷூ, தொப்பி மற்றும் தோலினால் ஆன ஜாக்கெட் அணிந்திருந்தார். கையில் வைத்திருந்த ஐபோனில் அவர் அடிக்கடி Mapsஐ திறந்து பார்த்துக்கொண்டே வந்தார். அதே நேர் இருக்கைகளில் அவரின் இரண்டு மகள்கள் மற்றும் மனைவி அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் குழந்தைகள் இருவரும் 10-16வயதுக்குள் இருப்பார்கள். 10 இந்ச் iPad proவில் பென்சிலால் பொம்மைகளை வரைந்துகொண்டே விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவரின் மனைவி கையில் ஒரு ஆங்கில புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தார். அனைவருமே சரியான முறையில் மாஸ்க் அணிந்திருந்தார்கள். அடிக்கடி ஆங்கிலம் மற்றும் குறைவான தமிழில் அளவளாவிக்கொண்டார்கள். அவர்கள் எதற்கு ஒரு பொது போக்குவரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன்.

எனக்குப் பின் இருக்கையில் முதிய தம்பதிகள் அமர்ந்திருந்தார்கள். அதில் அந்தப்பெரியவர் கையில் அலைபேசியை உச்ச சப்தத்தில் அலறவிட்டிருந்தார். சிலநேரம் ஏதோ செய்தித்துறைகள், சிலநேரம் காமெடி காட்சித்துளிகள். சிறிதுநேரம் அசதியில் தூங்கியபின் எனது கின்டிலை எடுத்து ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற சசி தரூரின் ஆங்கிலப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் நடுவில் நாம் தமிழர் கட்சித்தலைவர் 100 வருடங்களாக நடந்துவரும் திராவிட ஆட்சியைப்பற்றி சிறிதுநேரம் கிழித்துத் தொங்கப்போட்டுக்கொண்டிருந்தார். அவ்வப்போது வந்துகொண்டிருந்த சமோசா, போண்டா போன்றவற்றை யாரும் வாங்கியதாகத் தெரியவில்லை. என் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இஸ்லாமியக் குடும்பம் இடையில் வந்த Wonder கேக்கை வாங்கிக்கொண்டார்கள். பாதாம் பால் விற்றவரின் வியாபார மொழிக்கு மயங்கி சிலர் அதை வாங்கிக் கொண்டார்கள்.

வண்டி ஒருமணிநேரம் தாமதமாகச் சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தது. சென்ட்ரலில் இருந்து நான் இருக்கும் பகுதிக்குக் கடைசி லோக்கல் இரயில் வண்டி இரவு 11.45க்குத்தான். அவசரமாக வண்டி நிற்பதற்குள் இரங்கி ஓட ஆரம்பித்தேன், ஒருசிலர் என்னை வினோதமாகப் பார்த்தாலும் மற்றவர்களுக்கு இது வாடிக்கையான விஷயம்தான். வழியில் மெட்ரோ இரயில் நிலைய படிக்கட்டுகளில் இறங்கும்போதே UTS செயலியைத் திறந்து டிக்கெட் எடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 4 நிமிடங்களில் பூங்கா நிறுத்தத்தில் வந்து சேர்ந்திருந்தேன். மூச்சு இறைந்துகொண்டிருந்தது, வண்டி இன்னும் வந்திருக்கவில்லை. அடுத்த 10 நாட்களில் நான் ஓடப்போகும் சென்னை மாறத்தான் ஓட்டத்துக்கு நல்ல ஒத்திகையாக இந்த ஓட்டம் அமைந்தது. லோக்கல் வண்டியில் அந்நேரத்திலும் வாய்பேச முடியாத வட இந்தியச் சிறுவன் சிறுவன் பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டிருந்தான். வீடு வந்துசேர 1மணி ஆகிவிட்டிருந்தது.

என் அவதானிப்பில், இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ஏதோ வகையில் இணைய வசதி சென்று சேர்ந்துவிடுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் பராமரிப்பில் உள்ள ஒருசில மாநில நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும்கூட சாலைகள் ஓரளவுக்கு நன்றாகவே பேணப்படுகின்றன. ஆனால் பொதுப்போக்குவரத்து வசதிகளான பேருந்துகளும் இரயிலும் மற்ற வளர்ந்த நாடுகள் அளவுக்கு வளர இன்னும் சில தசாப்தங்கள் ஆகும்போல. குறிப்பாகக் கிராமங்களை நகரங்களுடன் இனைக்கும் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. நாட்டின் தென்பகுதி அளவுக்கு மற்ற பகுதிகள் வளர்வதற்குள் அங்கிருந்து தெற்கே மேலும் மக்கள் வேலைக்காகக் குடிபெயர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். 2-3 நாட்கள் தொடர்ந்து பயணிக்கும் அவர்களின் வசதிக்காகவாவது மேலும் சில இரயில்களைக் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கலாம். நாட்டின் மக்கள்தொகை ஒன்றே நமது பலம், பலவீனமும் அதுவேதான்.

குறிச்சொற்கள்: ,

புதுப்பிக்கப்பட்டது: