8 நிமிட வாசிப்பு

வருடக்கடைசியில் அந்த வருட ஹிட் ப்ளே லிஸ்டை ஒருமுறை கேட்டுப்பார்ப்பதைப்போல, 2022 எனக்கு எப்படிச் செலவானது என்பதை ஓட்டிப்பார்ப்பதே இந்தப் பதிவு.

வாசிப்பு

2021தான் நான் அதிகம் வாசித்த வருடம். மகன் உடல்நலச் சிக்கல்களால் கிட்டத்தட்ட 4 மாதங்கள் சரியாகத் தூக்கமில்லாமல் மருத்துவமனையில் சுற்றியது, வேலை மாற்றத்துக்கு என்னைத் தயார்செய்துகொண்டது என்று ஒரு பிசியான வருடமாக இருந்தாலும், அவ்வருடம்தான் என்னால் அதிகம் வாசிக்க முடிந்தது. முக்கியமாகப் போரும் அமைதியும் மற்றும் வெண்முரசில் 3 பாகங்கள் அந்த ஆண்டு வாசித்த முக்கியப் படைப்புகள். 2022 வாசிப்புக்கு இன்னும் சிறப்பாக இருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் வேலை மாற்றத்தால், புதிய நிரல் மொழி மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுதல், முதலீடு குறித்த சில புத்தகங்கள் என்று வேறு விதமான கல்விக்கே முதன்மையாக 2022ல் இடமிருந்தது. புனைவு வாசிப்பின் பேராசையை ஓரளவுக்கு வருடக்கடைசியில் திட்டமிட்டபடி செயல்படுத்த முடிந்தது. முதன்முறையாக விஷ்ணுபுரம் விழாவுக்குச் சென்றேன். விழாவுக்கு என்னைத் தயார்செய்துகொள்ள சில புனைவுகளை வாசித்தேன், அதன் பிறகு கிடைத்த நட்பு வட்டத்தில் சில சிறுகதைகளையும், சில நாவல்களையும் வாசித்தேன். இப்போது ‘Why I am a Hindu, Sashi Tharoor’ ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்புக்கு இவ்வருடத் தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும், கடைசி மூன்று மாதங்களில் உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. மனைவியுடனும் சில சிறுகதைகளைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். 2023ல் எனது வாசிப்பை இன்னும் தீவிரமாக்கிக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வலைப்பூ

இந்த வருடத்தின் முக்கிய முன்னெடுப்பு என்றால் அது வலைப்பூ ஆரம்பித்ததுதான். ஆசிரியர் ஜெ வாசித்ததைக் குறித்து விரிவான பதிவை எழுதச்சொல்வார். அது நமக்குள் எப்போதும் அந்த வாசிப்பை அணுக்கமானதாகவும் விரிவாக்கவும் உதவும். நானும் சில வருடங்களாகவே ஒரு வலைப்பூவைத் தொடங்கி வாசிப்பு குறித்துப் பதிவிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதன் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் சோம்பேறித்தனமாக இருந்து நிறைய நேரத்தை வீணடித்துவிட்டேன். எந்த திட்டமிடலும் இல்லாமல் மகாத்மா காந்தி பிறந்தநாளன்று இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது அப்படியே domainஐ வாங்கி அன்றே முதல் பதிவை இடுவதென்று இறங்கிவிட்டேன். செயலே வாழ்க்கையாக நமக்கு வழிகாட்டிய அவரின் பிறந்தநாள் எனக்கும் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டுமே!

முதல் சில பதிவுகளை இலக்கியத்துக்குப் பதிலாக, இதுவரை கற்றுக்கொண்ட நிதிச் சுதந்திரம் குறித்த பதிவுகளைப் போட ஆரம்பித்தேன். எழுத்து நடை சற்று பழகிவிட்டால், வாசிக்க உகந்த பதிவுகளை இலக்கியத்துக்கு இடலாம் என்பதே திட்டம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில் இலக்கியம், வாசிப்பு மட்டுமே வாழ்க்கை என்று முடிவெடுத்து, உலகியல் விஷயங்களை ஒதுக்கினால், நம் குடும்பமே வாசிப்புக்கு எதிரியாக வாய்ப்புள்ளது. ஜெ எப்போதும் இதனை வலியுறுத்துவார். முடிந்தவரை வேலை மற்றும் உலகியல் விஷயங்களைச் சிக்கனமாகவும், சிக்கலில்லாமலும் வைத்துக்கொண்டாலே நமக்குத் தேவையான நேரம் கையில் கிடைத்துவிடும். அந்த வகையிலேயே, குடும்பத்துக்குத் தேவையான எனது பாதுகாப்பை உறுதிசெய்யவே முதலீட்டில் கவனம் செலுத்த முயன்றேன். அது செட்டில் ஆனதும், வண்டியை வாசிப்பின் பக்கம் cruise செய்துகொண்டு போகவேண்டியதுதான். எனவே எனது வலைப்பூ பயணத்தை நிதிச் சுதந்திரத்தில் ஆரம்பித்தேன். விரைவில் அதை முடித்துக்கொண்டு இலக்கியத்துக்குள் நுழைந்துவிடுவேன்.

சமூக வலைத்தளங்கள்

முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கும் சமூக வலைத்தளங்களில் இருந்து எனது கணக்கை இந்த வருடத்துடன் முடித்துக்கொண்டேன். Twitter போன்ற தளங்களில் சில நன்மை இருந்தாலும், அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல் அளவுக்கு அவை பலனளிப்பதில்லை என்பதால் இனி எந்த சமூக வலைத்தளத்திலும் சேரப்போவதில்லை. இதில் கிடைக்கும் நேரத்தை வாசிப்புக்கும், வலைப்பூவை நடத்தவும் செலவிடமுடியும். இந்த வலைப்பூவுக்கு comment பகுதியைத் திறக்காமல் விட்டதும் ஜெவின் வழியேதான். எந்தச் செயலும் அதற்குரிய முழு ஈடுபாட்டுடனும் தீவிரத்துடனும் செய்யப்படவேண்டும். போகிற போக்கில் சொல்லப்படும் மேலோட்டமான கருத்துகளுக்கு நம் ஆற்றலை வீணடிக்கவேண்டியதில்லை. அப்படியே நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புகிறவர்களுக்கு மின்னஞ்சல் பெட்டி திறந்தே இருக்கிறது. இலக்கியம் தொடர்பான சில whatsapp குழுமங்களுக்காகவே ஒரு கணக்கை வைத்திருக்கிறேன். மற்றபடி எவரையும் தொடர்புகொள்ள நேராக அலைபேசியில் அழைத்துவிடுவதுதான் திட்டம். மற்ற எவற்றையும்விட நேரமே மதிப்புமிக்கது.

தொழில்நுட்பங்கள்

இவ்வருடம் என் வேலைசெய்யும் நிறுவனத்தை மாற்றிக்கொண்டேன். அதனால் நிறையப் புதிதாக கற்கும் வாய்ப்பு அமைந்தது. வாசிப்பில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறேனோ அதே அளவு புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதிலும் ஈடுபாடுள்ளது. இரண்டையும் விட்டுவிட்டு வேறு எதிலும் என் மனம் ஒருங்குவதில்லை. நான் Rust நிரல் மொழியின் விசிறி. அதனை எப்படியாவது முழுவதுமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆவல். பொதுவாகவே நமக்குப் பிடிக்கும் எந்த ஒன்றையும் நேரச்சோதனை செய்து பார்க்கவேண்டும். குறைந்தது சில வாரம் அல்லது மாதங்கள் காத்திருந்து, அதன் பின்னும் அதன்மீது நாட்டம் குறையவில்லையென்றாலே மேற்கொண்டு அதற்கு நேரத்தையோ அல்லது மற்ற எதையுமோ இழக்கத் தயாராகவேண்டும்.

Rust மொழியின் வளர்ச்சியைக் கடந்த சில வருடங்களாகவே நான் பார்த்துவருகிறேன். அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்தும், அதனை நேரப் பரிசோதனை செய்துகொள்ளவே இரண்டு வருடங்களுக்கும் மேல் அப்படியே விட்டுவைத்திருந்தேன். அது என்னை விடுவதாக இல்லை. Rust மொழியும் நம்மைச் சில சோதனைக்கு உட்படுத்தும். கற்றுக்கொள்வதற்கு எளிதான மொழியல்ல. அப்படிக் கற்றுக்கொள்வதால் இப்போதைக்கு எனக்கு எந்த பலனும் வரப்போவதுமில்லை. ஆனாலும் விடாமல் இவ்வருடத்தின் குறிப்பிட்ட நேரம் அதனைக் கற்றுக்கொள்ளச் செலவிட்டிருக்கிறேன், அதில் என் முன்னேற்றமும் திருப்திதான். ஒரு செல்லப் பிராணியிடம் நாம் என்ன யோசித்தா செலவுசெய்கிறோம்?

மற்றபடி வழக்கமாக வேலை மாற்றத்திற்குத் தேவைப்படும் எல்லா தொழில்நுட்பங்களையும் ஒரு பொறியாளனாகக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என் வாழ்நாளில் நான் பயன்படுத்துவேன் என்று யோசித்திராத Ruby மொழியைக் கற்றுக்கொண்டு இப்போது முழுநேர வேலையும் செய்துவருகிறேன். நெல்லிக்கனியைப்போல முதலில் சற்று கசந்தாலும், இப்போது பிடித்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த Linux இயங்குதளத்தின் Arch வடிவத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். முதலில் சோதனையாக ஆரம்பித்து, இப்போது Macஐ விட விரும்பிப் பயன்படுத்தும் இயங்குதளமாக அது மாறிவிட்டது.

முதலீடு

வேலை மாற்றத்தால், முதலீட்டில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டியதாகிவிட்டது. பொதுவாக நான் அவசரப்பட்டு முதலீடுகளைச் செய்வதில்லை. எப்போதும் செய்துவரும் Index fund முதலீடுகளைத் தவிர்த்து, இவ்வருடம் நிறுவனப்பங்குகளை அதிகமாக வாங்கிவிட்டேன். இதற்கு முக்கியக் காரணம், நான் வேலை செய்யும் நிறுவனப் பங்குகளைச் சற்று விலை குறைவாக ஊழியர்களுக்கு வழங்கினார்கள். அமெரிக்காவிலும் சந்தைகள் நல்ல இறக்கத்தை அடைந்திருக்கின்றன. அமெரிக்கப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யச் சிறு வாய்ப்பு கிடைக்கிறதே என்று அதில் சேர்ந்ததுதான். இப்போதும் என் முதலீட்டில் நிறுவனப்பங்குகள் 20%ஐத் தாண்டவில்லை. ஆனாலும், இதை 10%க்குள் கொண்டுவந்துவிடுவதே அடுத்த வருட இலக்கு. முதலீட்டில் எப்போதும் ஒழுக்கம் முக்கியம் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். இந்த வருடம்தான் தொடர்ந்து Mint பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்குக் குறைந்தது 30-40 நிமிடங்களைப் பத்திரிக்கை வாசிப்பு எடுத்துக்கொண்டாலும், Micro மற்றும் Macro economics குறித்து நல்ல அனுபவமும் கிடைத்தது. முதலீடு தொடர்பாக ஓரளவுக்கு நல்ல புத்தகங்களையும் வாசித்தேன்.

பொதுவாக எல்லோரும் செலவழிப்பதில் படிமேலேதான் செல்வார்கள். நான் இதில் இப்போதைக்கு கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். என் சுற்றத்தாரில் பலர் இப்போது கார் வாங்கிவிட்டார்கள். நான் ஏற்கெனவே வைத்திருந்த Royal Enfield Thunderbirdஐ விற்றுவிட்டு பழைய Honda Shineக்கு மாறிவிட்டேன். வாகணத்துக்குச் செய்துகொண்டிருந்த செலவுகளில் இப்போது கணிசமாகக் குறைந்துவிட்டது. அதை இப்போது சில உபயோகமான செலவுகளாக மாற்றிக்கொண்டேன். அடுத்த சில வருடங்களுக்கு கார் வாங்கவேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன். எப்போது அது அத்தியாவசியத் தேவையாகிறதோ அன்று பார்த்துக்கொள்ளலாம்.

உடல் நலம்

நான் அசைவ உணவு எடுத்துப் பல வருடங்களாகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக கார்ப் குறைந்த உணவுகளை உட்கொண்டுவருகிறேன். முடிந்தவரை இதை கடைப்பிடிக்க முடிந்தாலும், வெளியே பயணிக்கும்போதும், வார இறுதியிலும் அது அவ்வளவு தீவிரத்துடன் இருக்கமுடியவில்லை. நான் வேலைசெய்யும் நிறுவனம் ஓரளவுக்கு உதவுகிறார்கள். மூன்று வேளையும் உணவு அலுவலகத்திலேயே வழங்கிவிடுகிறார்கள். மிகத்தரமான உணவு. அதில் எனக்குப் பிடித்தது, Choix mealதான். நல்ல சரிவிகித உணவு, நமக்குத் தேவையானதை, தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். வெறும் உணவுக்கட்டுப்பாடு மட்டுமல்லாமல், உணவு எடுக்கும் நேரத்தையும் 16/8 ஆக மாற்றிக்கொண்டேன். அதாவது 8மணிநேரத்துக்குள் உணவு எடுத்துக்கொள்வது, மற்ற நேரம் எந்த கலோரியும் இல்லாத தண்ணீர் மட்டும். இது நல்ல பலனளிக்கிறது. எனது எடை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது, தூக்கத்திலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. இதனை எனக்கேற்றபடி இன்னும் ட்யூன் செய்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

2022ஐ ஓரளவுக்கு உறுப்படியாக செலவழித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். புதிய வருடம் நிறைய ஒளியை எல்லோருக்கும் பாய்ச்சட்டும்.

எல்லோருக்கும் 2023ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

குறிச்சொற்கள்:

புதுப்பிக்கப்பட்டது: