5 நிமிட வாசிப்பு

சமீபத்தில் foundingfuel.com என்ற இணையதளத்தில் zoho நிறுவனத்தைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருந்தது. அவர்களால் பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்ட பிள்ளைகளையும் தேர்ந்தெடுத்து தேவையான பயிற்சி கொடுத்து, வேலைக்கு எடுத்துக்கொள்ளவும், சிறப்பாகச் செயல்படவும் முடிந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் அமெரிக்காவில் பெரிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயின்றும், தனது PhD பட்டத்தைக் கிழித்தெறிந்துவிட்டு திறமையைக்கொண்டு அந்நிறுவனத்தைக் கட்டி எழுப்பி இருக்கிறார். அவருக்குப் பல்கலைக்கழகங்களில் வீணாக்கப்படும் பணம், நேரம் மற்றும் அதன் பலன் குறித்தான ஒரு அவதானிப்பு உள்ளது. என் சொந்த அனுபவத்தில், அவரின் அவதானிப்பு சரி என்றே நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் கல்விநிறுவனங்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் என் PhD படிப்பை விட்டு மிகுந்த மனச்சோர்வுடன் வெளியேறினேன். அவர்கள் அளிக்கும் மதிப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும் தொடர்ந்து அடுத்தகட்டத்தில் தரமான கல்வி கிடைக்கும் என்று நேரத்தையும் பணத்தையும் வீணாக்கியிருக்கிறேன். அந்நிறுவனங்களில் செயல்படும் வெகுசொற்ப ஆசிரியர்களைத் தவிர்த்துப் பெரும்பாலானவர்கள் எந்தத் தன்முனைப்புடனும் செயல்படுவதில்லை. அவர்களுடைய தேவைகளே வேறு.

நான் இதுவரை வந்து சேரவே, சொந்த முனைப்பில் கற்றுக்கொண்டவைதான் காரணம். Youtube, Udemy போன்ற இணையதளங்களில் கிடைக்கும் இலவசமான அல்லது விலை மலிவான கல்வியே இவர்கள் அளிக்கும் கல்விக்குப் பலமடங்கு மேல். வெறும் தொழில்நுட்பக் கல்வியை மட்டும் அல்ல. இலக்கியம், தத்துவம், அறிவியல், வரலாறு, பொருளாதாரம், சுயதொழில் போன்ற பெரும்பாலான துறைக்கு இதுவே போதுமானது. வாசிக்க விரும்பிய புத்தகங்களையும் kindleலும் மலிவாக வாங்கி வாசித்துக்கொள்ளலாம். துறை ஆளுமைகளைக் கொஞ்சம் சிரமப்பட்டால் நேரிலேயோ அல்லது சமூக ஊடகங்களிலோ சந்தித்து ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். என் அனுபவத்தில், அத்தகைய ஆளுமைகள் பெரும்பாலும் ஈடுபாடுள்ளவர்களைச் சந்திப்பதிலும், அவர்களுடன் உரையாடவுமே விரும்புகிறார்கள்.

இந்தியா போன்ற அதிக ஏழைகளைக் கொண்ட வளரும் நாடுகளுக்கு, சிக்கனமும் வீண் விரயத்தைத் தவிர்க்கும் உத்திகளும் மிகவும் அவசியமாகிறது. மற்றவர்களைவிட விலை மலிவாக, தரமான சேவையையோ அல்லது பொருள் உற்பத்தியையோ நம் கலைநயத்துடன் அளிப்பதே நமக்கு நீடித்த வளர்ச்சியையும், அந்நியச் செலாவணியையும், பெருமையையும் தேடித்தரும். ஆனால் இத்தகைய கல்வி நிறுவனங்களால் அதனை இந்த நிலையில் சாத்தியமாக்கவே முடியாது. இவர்கள் தங்கள் நடுத்தரவர்க்க மானவர்களையே ஐரோப்பிய அமெரிக்க உயர்குடிகளாக நினைக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டு விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட எல்லா மானவர்களுமே சமூக ஊடகங்களில் அடிமைகளாகவும், ஐந்து நிமிடங்களுக்குமேல் எதிலும் நாட்டம் கொள்ளாதவர்களாகவும், எதையும் நிதானத்துடன் அணுகும் போக்கும் அற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். விளைவு, வெளியே வரும் மானவர்களை, பெற்றோரும் சரி, சமூகமும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி, எப்படி எதிர்கொள்வதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். இதில் முக்கிய பிரச்சனை, நடுத்தர வர்க்க மானவர்களே அவர்களின் அளவுக்கும் தேவைக்கும் மீறிச் செலவு செய்துகொண்டிருக்கும்போது, பொருளாதாரத்தில் கீழ் நடுத்தர வர்க்க மானவர்களும் அடித்தட்டு மானவர்களும் மற்றவர்களுடன் போட்டிப்போட முடியாத அளவுக்குத் தன்நம்பிக்கை இழந்து குறுகிப்போகிறார்கள். அவர்களுக்கும் சமூகத்தின் மீது வெறுப்பு அதிகரித்துச் சரியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகிவிடுகிறார்கள்.

90ஸ் கிட்ஸாகிய என் சொந்த அனுபவம் இது. என் பொருளாதாரப் பின்னணி காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் மற்றவர்களைவிட அதிக சிக்கனத்துடனேயே என்னால் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மையை எனக்குள் உருவாக்கிவிட்டது. வேலை கிடைத்து ஒரு வருடத்தில், இரவு பகலாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் 2012ல் 30000 ரூபாய் மதிப்புள்ள திறன்பேசியை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து என் வெறியைத் தீர்த்துக்கொண்டேன். அடுத்தடுத்து 10000 ரூபாய் செலவில் கிட்டார், 12000 ரூபாய் மதிப்புள்ள monitor headset வாங்கினேன். 1.5லட்சம் செலவழித்து Thunderbird வண்டியை வாங்கினேன்.

எல்லாம் என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியிருந்தாலும், அவை இப்போது என் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் மற்றவர்களின் பார்வையில் எந்த மதிப்பையும் மாற்றவில்லை. வாங்கிய திறன்பேசி இரண்டு வருடத்தில் வேலைசெய்யாமல் போனது. கிட்டார் வாங்கி அதனை ரசிக்கக்கூடக் கற்றுக்கொள்ளவில்லை, வாசிக்கக் கற்றுக்கொள்ளும் அளவுக்குப் பொறுமையில்லை. வீட்டில் தூசி படிந்து அப்படியே கிடக்கிறது. இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தும் monitor headset எனக்கு எதற்குத் தேவைப்பட்டது என்று இன்றும் விளங்கவில்லை. வாங்கிய வண்டிக்குப் பல ஆயிரக்கணக்கில் செலவழித்ததுதான் மிச்சம், ஒரு நல்ல பயண அனுபவத்தையும் நான் அடையவில்லை. ஒரு கட்டத்தில் சலித்துப்போய் விற்றுவிட்டேன்.

இது போதாதென்று, Natural Language processingல் PhD மேற்படிப்பு படிக்கப்போகிறேன் என்று விலையுயர்ந்த கணினியை லட்சக்கணக்கில் செலவழித்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தேன். மேற்படிப்பில் நாட்டமும் குறைந்து இப்போது அந்தக் கணினி வீட்டை அடைத்துக்கொண்டு நிற்கிறது. Deep learning கற்றுக்கொண்டு இந்நாள்வரை எந்த மொழிக்கும் பயனுள்ள வகையில் நான் பங்களிப்பாற்றவில்லை. இவ்வளவுக்கும் என்னை அழைத்துச்சென்றது ஒருவகையில் என் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் என் சக மானவர்களுடன் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும் காரணம். அதற்குப்பதிலாக என் கல்லூரிக் காலங்களில் ஏதேனும் பயனுள்ளதாகக் கற்றுக்கொண்டேனா, அது இன்றைக்கும் பயனுள்ளதா என்று பார்த்தால், பூஜ்ஜியம்தான். பட்டம் பெற்று வெறும் ஓரிரு வருடங்களில் பயன் இல்லாமல் போகும் கல்விக்குக் கடன்பட்டுச் செலவழிக்கவேண்டுமா?

இப்போதெல்லாம் திருமணப் பத்திரிக்கையில் கூடப் படித்த படிப்பைப் போடுவது அனாவசியமாகவும் அநாகரிகமாகவும் மாறி வருகிறது. இத்தகைய சமயங்களில், Zoho, Freshworks போன்ற நிறுவனங்களின் முன்னெடுப்பு சமூகத்திற்கு அவசியமாகிறது. திறமையை வளர்த்துக்கொள்ள விலை மலிவான அதே சமயம் தரமான நேரத்தைச் சேமிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டு, சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்துவதே நமக்கு நல்லது.

குறிச்சொற்கள்:

புதுப்பிக்கப்பட்டது: