9 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் காளிப்பிரசாத்தை ஊட்டி காவிய முகாமில் அறிமுகம் செய்துகொண்டேன். அவர் எழுத்தில் சில சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். அவர் படைப்புகளின் மீதான நம்பிக்கையில், அவரின் முதல் மொழிபெயர்ப்பான தம்மம் தந்தவன் நாவலை இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்தேன். ஒரு தனிமை இரவில் எதையோ துழாவி்க்கொண்டிருக்கையில் இப்புத்தகம் கண்முன் நின்றது. எடுத்து வாசிக்க ஆரம்பித்து, அப்படியே விடியற்காலைவரை வைக்காமல் இழுத்துக்கொண்டே சென்றேன். இந்தப் பதிவில் புத்தகத்தின் எனது வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எனக்கு புத்தர் பற்றிய கதைகள் குழந்தைப்பருவத்திலேயே அறிமுகமாக இருந்தன. ஆனால் யார் மூலம் அது என்னை வந்தடைந்தது என்பதில் தெளிவில்லை. பல புராணக்கதைகளைக் கேட்டிருக்கிறேன். நமக்கு இன்று கிடைக்கும் புத்தர் பற்றிய தகவல்களும் கதைகளும் ஒரு விதத்தில் எண்ணெய்யில் பொரித்தெடுத்த மசாலா பஜ்ஜிதான். சமீபத்தில் ஒரு தொழில்நுட்ப வலைப்பூவில் வாசித்த ஒரு ஆங்கில மேற்கோள் ஞாபகத்துக்கு வருகிறது. You’re probably learning a technology in its seventh season, not its pilot. அந்த வகையில் மசாலா பஜ்ஜியாக அல்லாமல், புத்தரின் வாழ்க்கையை நிகழ்வாழ்க்கையாக அனுபவிக்க இந்த புத்தகம் நம்மை அழைத்துச் செல்கிறது.

கதை பாணி:

வயது கடந்த ஒரு அரச தம்பதிக்கு நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு உருவாகும் கரு. தாய் மாயாதேவியின் ஒரு அசாதாரணமான பயணத்தின் வழியில் ஒரு சால மரத்தடியில் மிகச் சாதாரணமாக பிறக்கிறார் சித்தார்த்தன். ஆசிரியர் விலாஸ் சாரங்க், பெரும்பாலும் புராணங்களில் கேள்விப்பட்டிருக்கும் கதையாயினும், அதனை நம்பகத்தன்மை குறையாமல், இயல்பான கதை ஓட்டத்தில் சுவை குறையாமல் சொல்லிச் செல்கிறார். இந்த அனுபவமே நம்மை நாவலுக்குள் முதல் பத்தியிலிருந்தே இழுத்துச் சென்றுவிடுகிறது. ஒரு நவீன நாவலை வாசிக்கும் அனுபவம் விரிவாகவும் ஆழமாகவும் கிடைக்கிறது.

முடிந்தவரை நம்பகத்தன்மையுள்ள விஷயங்களை மட்டுமே தன் கதைக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதேசமயம் அவரே சந்தேகப்படும் சில விஷயங்களையும் நமக்குக் குறிப்புணர்த்திவிட்டு நாவலுக்குள் சேர்த்திருக்கிறார். அவை கொண்டுவரும் கருத்தாழமும் தரிசனமும் நம் வாசிப்புக்கு முக்கியமானது. குறிப்பாக இளவரசர் நகர்வலம் செல்லும்போது சந்திக்கும் மனிதர்களையும், ஒரு பிணத்தையும் பற்றிய நிகழ்வுகளுக்கு ஆசிரியரே அதன் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளுடனே, அவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு பதிவு செய்கிறார். மாரனுக்கும் சித்தார்த்தருக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் குறிப்பிடத்தக்கது. சித்தார்த்தர் புனிதராக இருந்தாலும், அவர் எதிர்கொள்ளும் உலகியல் சிக்கல் முதல், ஞானத்தேடலில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள், ஞானமடைந்தபிறகு தனது கொள்கைகளைப் பரப்புவதில் எதிர்கொண்ட சிக்கல்கள், அவரின் மறைவு என எல்லாவற்றையும் மிகையில்லாமல் ஒரு சமநிலையுடனேயே பதிவுசெய்கிறார்.

சித்தார்த்தனும் தந்தையும்:

நிமித்திகர்கள் மற்றும் குரு அஜிதரின் கணிப்பின்படி இளவரசர் நாடாள்வதை விட்டுவிட்டு துறவு பூண்டு வெளியேறிவிடுவார். அரசரின் இந்தக் கவலை, இளவரசரை மிகவும் அக்கரையுடனும் கட்டுப்பாடுகளுடனும் வளர்க்கச் செய்கிறது. இளவரசர் வளரும் நந்தவனத்தில் பூக்கள் முதல் அவருடன் விளையாடும் குழந்தைகள் வரை, தேர்ந்தெடுக்கப்பட்டும் இளமையுடனும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு அனுபவமும் இளவரசருக்கு தத்துவக் கேள்விகளை எழுப்பிவிடாத அளவுக்கு கண்காணிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு அரண்மனைச் சிறையிலேயே வளர்க்கப்படுகிறார். ஆனால் சித்தார்த்தருக்குள் இருக்கும் இயற்கை முன்னறிவு இந்த அன்னியத்தன்மையை எளிதில் கண்டுகொண்டுவிடுகிறது.

ஒரு தந்தையாக தனது மகன் நாட்டைவிட்டு வெளியேறுவதை விரும்பாமல் அதற்கு எதிராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் செய்துபார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு படியிலும் ஒரு சருக்கலையே சந்திக்கிறார். இளவரசருக்கு போர்க்கலைப் பயிற்சி அளிக்கிறார். அவருக்குத் திருமணம் செய்துவைத்தும் பார்க்கிறார். ஒருகட்டத்தில் எதுவும் அவரின் விருப்பப்படி நடக்காமல் போக, நாட்டின் அக்கரையைக் கருத்தில்கொண்டு ஒரு மகனை பெற்றுக்கொடுத்துவிட்டு தனது துறவறத்தை மேற்கொள்ளுமாறு இளவரசரை வற்புறுத்துகிறார். அவரின் உளவியலை கதையோட்டத்தில் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. சித்தார்த்தரைப் பொருத்தவரை, மரியாதையும் மதிப்பும் குறையாமல் தனது தந்தையை நடத்திவந்தாலும், அவரின் எந்த உலகியல் கோரிக்கைகளுக்கும் வளைந்துகொடுக்காமல் தன்னுடைய ஞானத்தேடலில் தெளிவாக இருக்கிறார்.

சித்தார்த்தரும் யசோதரையும்:

திருமண வாழ்க்கையில் வழக்கமாக நிகழும் எந்த நிகழ்வும் இளம் தம்பதிகளுக்குள் நிகழவில்லை. யசோதரைக்கு இந்த நிகழ்வு மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்துவிடுகிறது. அவர் எடுக்கும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. நேராக சித்தார்த்தனிடம், அவரின் ஆண்மையைப்பற்றியும் உலகியலில் அவருக்குள்ள சிக்கல்களைப்பற்றியும் கேள்விகளை எழுப்புகிறார். அதற்கும் அசைந்துகொடுக்காத சித்தார்த்தர், திருமணமாகி ஒரு தசாப்தம்வரை தன் மனைவிக்கு ஒரு மகவைக் கொடுக்க விருப்பமில்லை. தன் ஞானத்தேடலுக்கு இத்தகைய உலகியல் விஷயங்களால் சிக்கல் ஏற்படும் என்று தெளிவாக இருக்கிறார்.

ஒருகட்டத்தில் தனது தந்தையின் வற்புறுத்தலினால் மனைவியுடன் சேர்ந்து அவளுக்கு ஒரு கருவைக் கொடுக்கிறார். அந்த அனுபவம் யசோதரைக்கு முதலும் கடைசியுமாக கிடைக்கிறது. அவர் மேற்கொண்டு செய்யும் எந்த முன்னெடுப்பும் சித்தார்த்தரின் முன் தோற்றுக்கொண்டே இருக்கின்றன. சித்தார்த்தரின் இந்த நடத்தையால் உலகியலில் திளைத்திருக்கும் நமக்கு சிறிது அதிருப்தி வருவதைத் தடுக்கமுடியவில்லை. கல்நெஞ்சக்காரனாகவே இருக்கிறார். ஆனால் அந்தக் கல்மனம்தான், மகத்துவமான ஞானத்தை உலகுக்கு அளிக்கப்படும் பெருங்கணியின் விளைநிலமாக இருப்பதால், யசோதரையை அனுதாபத்துடன் கடந்துசெல்லத்தான் வேண்டியிருக்கிறது.

ஞானமடைந்த புத்தர், வெவ்வேறு பயணங்களின் வழியில் தனது சொந்தநாட்டுக்கு வருகை புரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவரை யசோதரை தனிமையில் சந்திக்க வேண்டுகிறார். முதலில் மறுத்த புத்தர், பிறகு சந்திக்க ஓப்புக்கொள்கிறார். அப்போது அவரை அணைத்து முத்தங்களால் நனைக்க யசோதரை முற்படுகிறார். ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து எந்த எதிர்விளைவும் ஏற்படுவதில்லை. அதையும் யசோதரை எதிர்பார்த்திருக்கக்கூடும்.

சித்தார்த்தரும் மகனும்:

பிறந்த தனது குழந்தையை முதன்முறையாக இரகசியமாக பார்க்கச் செல்கிறார் சித்தார்த்தர். அன்றிரவே மற்றவர்களுக்குத் தெரியாமல் தனது துறவுப் பயணத்தை மேற்கொள்ள விழைகிறார். யசோதரையின் கை குழந்தையின் முகத்தை மறைத்திருப்பதால் அவரைத் தொந்தரவு செய்யாமல் குழந்தையையும் பார்க்காமல் அப்படியே திரும்பிச் சென்றுவிடுகிறார். அன்றே நகரைவிட்டு நீங்கி துறவறம் ஏற்றுக்கொண்டுவிடுகிறார். சித்தார்த்தருக்கு தனது மனைவியையோ, தாயையோ அல்லது தந்தையையோ பார்ப்பதைவிட அவரிடம் எந்த உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாத தனது மகனைப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனாலும், அதனை உடனேயே கட்டுப்படுத்திக்கொண்டு, தனது துறவற நோக்கில் தீவிரமாக இறங்குகிறார்.

ஞானமடைந்து தன் சொந்த நாட்டுக்கு வருகை புரியும்போதும், மனைவி தந்தையைவிட தனது மகனை சந்திப்பதிலேயே விருப்பமாக இருக்கிறார். முதல் முறையாகச் சந்தித்துக்கொள்ளும் தந்தை மகனை ஆசீர்வதித்துவிட்டு, அவனுக்குத் துறவறம் செய்யும் சடங்குகளைச் செய்து அவருடன் அழைத்துச் சென்றுவிடுகிறார். எல்லோருக்கும் அது அதிர்ச்சியளிக்கிறது. அப்போதுதான் புத்தரின் வருகைக்கான திட்டம் தன் மகனை அழைத்துச்செல்வது மட்டும்தான் என்று மற்றவர்களுக்கு விளங்குகிறது. மகனுக்கு அதில் விருப்பமில்லை. ஆனாலும் அதற்காக வற்புறுத்தப்படுகிறான். ஒரு தந்தையாக எந்த உலகியல் கடமைகளை புத்தரால் செயல்படுத்த முடியாவிட்டாலும், அவனுக்கான ஞானத்தந்தையாகவே அவரால் இருக்கமுடியும்.

சித்தார்த்தரும் ஞானத்தேடலும்:

அரச குடும்பத்தில் பிறந்து எந்த உலகியல் கடமையையும் ஆற்றாமல், அவற்றை முழுமையாகத் துறந்து சித்தார்த்தர் எதிர்கொண்டது ஒரே ஞானக்கேள்வி. தனது அரச வாழ்க்கையில் அவர் அதுவரை கற்றறிந்திருந்த சில உபநிடத தரிசனங்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் போதாமைகளை அறிந்துகொள்கிறார். தனக்கிருக்கும் கேள்விக்கு அவற்றால் விடையளிக்கமுடியாது என்று அறிந்துகொள்கிறார். விடையில்லாக் கேள்வியுடன் துறவு வாழ்க்கையில் தனியாக வெவ்வேறு நாடுகளைக் கடந்து பயணம் மேற்கொள்கிறார். ஒருகட்டத்தில் தன் ஞானத்தேடலில் குறிப்பிட்ட அளவு நிறைவை எட்ட, ஒரு குருவுக்குச் சீடனாவது நல்ல வழியாக இருக்கும் என்று யோசித்து, ஒரு குருவிடம் சென்று சேர்கிறார். அங்கே இவருக்குக் கிடைக்கும் அனுபவம் கிட்டத்தட்ட உலகியலை ஒத்ததாகவே இருந்ததால் அங்கிருந்து வெளியேறி மற்றொரு குருகுலத்தை நாடுகிறார். அங்கும் அவர் கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் வெளியேறி கானகத்தில் தங்கி, தனியாக கடுந்தவம் மேற்கொள்கிறார். இடையில் அவர் பிம்பிசாரர் என்ற இளம் வயது அரசரைச் சந்திக்கிறார்.

தான் தேர்ந்தெடுத்த கானகத்தில் ஒரு அழகிய ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்த அரசமரத்தடியில் தனது தவத்தை மேற்கொள்ள விழைகிறார். அருகிலிருக்கும் கிராமத்தில் பிச்சையெடுத்து தன் தவவாழ்க்கையை மேற்கொள்கிறார். அங்கே அவருக்கு ஒரு புலிக்கும் ஒரு கன்றுக்குட்டிக்கும் இடையேயான ஒரு விசித்திரமான உறவு காணக்கிடைக்கிறது. அதன்மூலம் மேலும் சில கேள்விகளை வளர்த்துக்கொள்கிறார். அந்த தவம் அவருக்கு சரியாக பலனளிக்காததால், அங்கிருந்து வெளியேறி ஒரு சுடுகாட்டில் தங்குகிறார். உணவு எடுக்காமலிருந்த கடுந்தவத்தால், ஒருகட்டத்தில் சாவின் விளிம்புவரை சென்று ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அளிக்கும் உணவில் உயிர் தப்புகிறார். அதனால் அவரை பின்தொடர்ந்துவந்த சில துறவிகளின் ஏளனத்துக்கு ஆளாகிறார். மீண்டும் அந்த அரசமரத்தடிக்கே திரும்பிவந்து தன் தவத்தை மேற்கொள்கிறார். தன் தொடர் தவத்தில், ஒரு பௌர்ணமி நாளில் அவருக்கு இந்திரன் இடிமின்னலுடன் வந்து ஞானத்தை அளிக்கிறார்.

சித்தார்த்தரும் சீடர்களும்:

ஞானம் பெற்ற புத்தராக கானகத்தில் இருந்து வெளியேறி தனது கொள்கைகளைப் பரப்புவதற்காக வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து மானவர்களை அடைகிறார். பிம்பிசாரர் இவரின் ஞானவழியைப் பின்தொடர்வது பிடிக்காததால், அவரின் மகன் ஆட்சியைக் கைப்பற்றி அவரை சிறைக்குள் தள்ளிவிடுகிறார். சிறையில் சித்தரவதை அனுபவித்து கொடுமையான முறையில் இறக்கிறார் பிம்பிசாரர். புத்தருக்கு கிடைத்த சீடர்களில் அவருக்கு திருப்தியளிக்கும் வகையில் செயல்பட்ட சீடர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள். அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சென்றவர்களால் பௌத்தத்தில் பல்வேறு உட்பிரிவுகள் உருவாகி விடுகின்றன.

தியானித்தும், கடும் தவம்செய்தும் உலகுக்கு துன்பத்தையும் அதன் காரணத்தையும், துன்பத்திலிருந்து விடுதலையை அறிந்தளித்த புத்தராக இருந்தாலும், தனது கொள்கைகளைக் கொண்டுசேர்க்கும் சீடர்களிடம் அவரால் சமாதானத்துடனோ அல்லது நம்பிக்கையுடனோ செயல்படத் தடுமாறியிருக்கிறார். ஞானியாயினும், ஒரு மனித வாழ்க்கைக்கு தனது பாத்திரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிச்சை அளவுடனேயே கிடைக்கிறது. தனது வாழ்க்கையில் உலகியல் விஷயங்களில் தடுமாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தனது விடாப்பிடியான ஞானத் தேடலுக்கு புத்தரால் விடையை தன் வாழ்நாளுக்குள் எட்ட முடிந்திருக்கிறது. அதன் விளைகணியை இன்றளவும் மனிதக்குலம் சுவைத்துக்கொண்டிருக்கிறது.

புத்தரும் நானும்:

இந்த நாவல் வாசிப்பை நான் இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். இன்றைய நவீன உலகில் தனித்த தேடல்களைக் கொண்ட எந்த மனிதனும் சித்தார்த்தரைவிட அதிகமான அழுத்தங்களையோ அல்லது அவரைவிட அதிக வாய்ப்புகளையோ எதிர்கொண்டிருக்கலாம். அவர் வகுத்தளித்த ஞானமார்க்கத்தைத் தவிர்த்து அவர் வாழ்க்கையிலிருந்தே நேரடியாகக் கற்றுக்கொள்ள இந்த நாவல் நிறையப் பக்கங்களைத் திறந்துவைக்கிறது. ஒரு சாதாரண உலகியல் வாழ்க்கையில் நமத்துப்போயுள்ள நம் தனித்த தேடல்களுக்கும் சித்தார்த்தரின் கையில் ஒரு அணையா தீப்பந்தம் கையிருக்கிறது. அதில் குளிர்காய்ந்துகொண்டு விலகிவிடுவதும், பற்றவைத்துக்கொண்டு எழுந்தாடுவதும் நம் கையில்தான்.

நாவலை படைத்தளித்த ஆசிரியர் விலாஸ் சாரங்க் அவர்களுக்கும், தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் காளிக்கும் நன்றிகள்.