15 நிமிட வாசிப்பு

நேற்று பிரபல வணிக நிறுவனமான DMartன் வேளச்சேரி கடைக்குச் சென்றுவந்தோம். இந்தப்பதிவில் என் ஷாப்பிங் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எங்களுக்கு இந்தவகை ஷாப்பிங் அனுபவங்கள் மிகக்குறைவுதான். தேவையான வீட்டுச் செலவுகளை பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்கெட்டில் அல்லது காய்கறி கடைகளில் வாங்கிக்கொள்வோம். நேரத்தை மிச்சப்படுத்தவேண்டுமென்றால், Amazon அல்லது Flipkart இருக்கிறது. வார இறுதியில் வெளியே செல்லவேண்டுமென்றால், தூரமாக இருந்தாலும், மக்கள் நெருக்கடி குறைவான கடற்கரைக்குச் சென்றுவருவோம். வருடத்துக்கு ஓரிரு முக்கியமான படங்களுக்குமேல் திரையரங்குகளுக்குச் செல்வதில்லை. இங்கிருக்கும் மால்களுக்கும் இதுவரை சென்றதில்லை. ஆனால் என் மனைவிக்கு திடீரென்று இந்த கடைக்குச் சென்றுவரவேண்டும் என்று ஆர்வம் வந்துவிட்டது. நானும் அடுத்த வாரம் பினாலேவில் நடக்கும் கலைக்கூடத்துக்குச் செல்வதாக திட்டமிட்டிருக்கிறேன். இப்போது கடைக்கு அவருடன் போய்வரவில்லை என்றால் என் பினாலே திட்டத்தில் சிக்கல் வந்துவிடும். எனவே அமைதியாக ஒத்துழைத்தேன்.

DMart

இந்த DMart நிறுவனம் பிரபல முதலீட்டாளர் ராதாகிருஷ்ணன் தாமானி அவர்களால் நடத்தப்படுகிறது. கடை வேளச்சேரியில் இருக்கும் Grand mallல் உள்ளது. உள்ளே நுழையும் போதே வரிசையாக கார்கள் பார்க்கிங் இடம் கிடைக்காமல் காத்திருப்பதை பார்க்க முடிந்தது. நாங்கள் பைக்கில் சென்றிருந்ததால் எங்களால் எளிதாக உள்ளே நுழைய முடிந்தது. மாலின் பார்க்கிங் இடத்தை பைக்குகளைவிட கார்கள்தான் அதிகமாக ஆக்கிரமித்திருந்தன. அந்த கடைக்கு மட்டும் சென்றுவரும்படி மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக பார்க்கிங் செலவு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக பைக் பார்க்கிங்குக்கு 40ரூபாய் ஒரு மணிநேரத்துக்கு வசூலிக்கிறார்கள். மற்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக மக்கள் நெறுக்கடியில் கடை தத்தளித்துக்கொண்டிருந்தது. கடைக்குள் நுழைவதற்கு முன்பாக தாங்கள் கொண்டுவந்த பைகளுக்கு டேகிங் செய்துகொள்ள குறைந்தது 30 பேர் வரிசையில் நிற்கிறார்கள். மனைவியை மட்டும் கடைக்குள் அனுப்பிவிட்டு, நான் கடையின் வாசலில் உள்ள ஒரு Moore market பழைய புத்தகக் கடைக்கு சென்றுவிட்டேன்.

பழைய புத்தகக் கடை

அந்த பழைய புத்தகக் கடையில் பெரும்பாலும் பிரபலமாக விற்கும் ஆங்கில புத்தகங்கள் கிடைக்கின்றன. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்திய புத்தகங்களை இறக்குமதி செய்து இங்கே விற்கிறார்கள். பெரும்பாலான புத்தகங்களின் விலை $ல் உள்ளது. அதை தள்ளுபடி என்கிற பெயரில் இந்திய விலைக்கு அதிகமாகவே வைத்து விற்கிறார்கள். வெகுசில தமிழ் புத்தகங்களும் விற்கிறார்கள். ஆனால் முழுத் தொகைக்குத்தான் கிடைக்கும். அதிசயமாக புத்துயிர்ப்பு நாவல் அங்கே கிடைத்தது. அத்துடன் சேர்த்து இரண்டு தமிழ் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வெளியேறினேன். இத்தகைய புத்தகக் கடைகளில் ஆங்கிலப் புத்தகங்களின் தொகுப்புகள் கிடைக்கின்றன. ஆனால் இந்திய பதிப்பின் விலையை onlineல் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது. Stephen hawking ன் இரண்டு புத்தகங்கள் மற்றும், Edward Snowdenன் Permanent Record புத்தகங்களின் விலையை பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு வந்தேன். அவை எல்லாம் புதிய புத்தகத்தின் இந்திய விலையை விட அதிகமாகவே இருக்கின்றன. பெரும் தள்ளுபடியில் கிடைத்தால் ஒழிய இத்தகைய பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை இது இந்தியாவில் இயங்கும் பதிப்பு நிறுவனங்களுக்கு தலைவலியாகவும் இருக்கலாம்.

கொலைவெறி ஷாப்பிங்

புத்தகக் கடையிலிருந்து வெளியே வந்த சிறிதுநேரத்தில் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. ஒருவேளை வந்த வேலை முடிந்துவிட்டிருக்கலாம் என்று ஆர்வமாக கிளம்பினேன். கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த கூட்ட நெருக்கடி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. எல்லா ரேக்குகளுக்கு முன்பும் மக்கம் நின்றுகொண்டு கொலைவெறியுடன் பொருட்களை எடுத்து போட்டுக்கொண்டிருந்தார்கள். மேலே ஒலிபெருக்கியில் இதை செய்யக் கூடாது அதை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. எந்த பொருள் வரிசைக்கு முன்பும் குறைந்தது 30% தள்ளுபடி, ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று ஏதோ ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரு டீ தூள் பாக்கெட் அங்கே குறைந்தது 1/2 கிலோவுக்குதான் கிடைக்கிறது போல. அதைவிட சிறிய அளவில் டீ கிடைக்குமா என்று தெரியவில்லை. தள்ளுபடியில் இவற்றை ஒன்றுக்குமேல் வாங்கிக்கொண்டு எத்தனை மாதங்களுக்கு பயன்படுத்துவது என்று யோசித்தேன். தரைதளத்தில் வழக்கமான மளிகை சாமாண்கள், காய்கறிகள், பழங்கள். மேல்தளங்களில் மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள். என் மனைவி மேலே வரச் சொன்னதால், தடபுடல்களுக்கு மத்தியில் சமாளித்துக்கொண்டு மின்தூக்கியில் ஏறிச்சென்றேன். மேலேயும் அதே அளவுக்கு மக்கள் கூட்ட நெரிசல்தான்.

மேலே இருந்த ரேக்குகளில் பொருட்கள் ஆங்காங்கே சிதைந்து கிடந்தன. ஊழியர்கள் அவற்றை எடுத்து அடுக்கி வைக்க போராடிக்கொண்டிருந்தார்கள். மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்களை வைத்திருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பும் வந்துகொண்டிருந்தது. என் மனைவிக்கு வீட்டு ஜன்னல்களில் மாட்டும் திரைச்சீலை வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு பல நிறங்களில் இருப்பதால் எதை எடுப்பது என்பதில் குழப்பம். அதில் உதவுவதற்குத்தான் என்னை அழைத்திருந்தார் என்பதை அறிந்ததும் சோர்வுற்றேன். உடனே onlineல் அவர் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்த பட்டியலை எடுத்து விலையைக் காண்பித்தேன். இவர்களின் தள்ளுபடி விலை online விலையைவிட அதிகமாகவே இருந்தது. அவர் உடனே என் மகனுக்கு ஒரு செறுப்பு வாங்க வேண்டும் என்று தாவிவிட்டார். நான் அப்படியே நின்று அங்கிருப்பவர்களை நோட்டம் விட்டேன். மக்கள் அவர்கள் எடுத்து பார்க்கும் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஊழியர்கள்தான் அவற்றை எடுத்து மீண்டும் அடுக்கிவைக்க வேண்டியிருக்கும். வார இறுதியில் அந்த ஊழியர்களின் நிலையை நினைக்கையில் பரிதாபமாகத்தான் உள்ளது.

என் மனைவி தனது ஷாப்பிங்கை விரைவில் முடித்துக்கொள்வதாகத் தெரியவில்லை. நான் ஒருகட்டத்தில் பொருட்களை விடுத்து அங்கே வந்திருந்தவர்களை நோட்டம் விட ஆரம்பித்திருந்தேன். பெரும்பாலான பெண்கள் ஒருமுறையாவது கைப்பை இருக்கும் பகுதிக்குச் சென்று நோட்டம் விட்டுவந்தார்கள். ஆண்கள் அலைப்பேசி சார்சர்கள், அலுவலகத்தில் உபயோகிக்கும் தண்ணீர் பாட்டில்கள், சிறிய தொட்டிச் செடி என்று மேய்ந்துகொண்டிருந்தார்கள். பல குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள், சிலர் கைகளில் விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை சீக்கிரமாக வெளியேறினால் வெளியே இருக்கும் ஐஸ்கிரீம் அல்லது பாப்கார்ன் சீக்கிரமாக கிடைக்கும் என்று கணவில் இருக்கலாம். ஒருவழியாக 2 மணிநேரம் அலைந்தபிறகு பில் போடும் இடத்துக்கு வந்துசேர்ந்தோம். அங்கிருந்ததிலேயே குறைவான தொகைக்கு பொருட்களை வைத்திருந்தது நாங்களாகத்தான் இருக்கவேண்டும். மற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று ட்ராலிகளில் பொருட்களை வைத்திருந்தார்கள். குறைந்தது 5ஆயிரத்துக்கு பொருட்களை வாங்குவார்கள் போல.

எங்களுக்கு முன்பு நின்றுகொண்டிருந்த 40 வயதைக் கடந்திருந்த தம்பதிகளுக்கு ஒரு மகன். அவர்களுக்கு முன் பொருட்களை வாங்கிய ஒரு பெண் ஏதோ பொருள் விடுபட்டதாகவும், அதை மட்டும் எடுத்துவந்துவிடுவதாக விரைந்தார். குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேல் ஆனது அந்த குடும்பத்தின் பில்லிங் முடிவதற்கு. இரண்டு ட்ராலி முழுக்க பொருட்கள். அந்த மூவருக்குச் சேர்த்து அவர்கள் வாங்கியிருந்த சாப்பாட்டுத் தட்டுகள் எண்ணிக்கை மட்டும் 12க்குமேல் இருக்கலாம். அதற்குள் பின்னால் நின்றிருந்த என் மனைவி பல் தேய்க்கும் பிரஷ் விடுபட்டதாகவும் அதனை எடுத்து வந்துவிடுவதாகவும் சொல்லி விரைந்தார். வரும்போது 2 பாக்கெட்டுகளில் 10 பிரஷ்களை கொண்டுவந்தார். எங்களுக்கு ஒருவருக்கு ஒரு பிரஷ் 2-3 மாதங்களுக்கு வரும். 10 பிரஷ்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று ஒரு பாக்கெட்டை எடுத்து வைத்துவிட்டேன். ரூபாய் 1500க்கு பில்லிங் முடித்து வெளியே வந்தபிறகுதான் எனக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அதற்குள் எனக்கு லேசாக சளி பிடிக்க ஆரம்பித்திருந்தது. அடிக்கடி தும்மிக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். ஒருவேளை நேற்று தலைக்கு குளித்ததாக இருக்கலாம். அல்லது இங்கே வந்ததால் இருக்கலாம். இன்றிலிருந்த எங்கள் மகனுக்கும் சளிக் காய்ச்சல் ஆரம்பித்துவிட்டது.

வெளியே வந்து பார்த்தால் எல்லா தின்பண்டக் கடைகளின் முன்பும் மக்கள் மொய்த்துக்கொண்டிருந்தார்கள். வெளியேற மின்தூக்கிக்கு அருகில் சென்றோம். அங்கே ஒரே கூட்ட நெரிசல். மின்தூக்கியிலிருந்த வெளியேறிய ஒருவர் ‘excuse me’ என்று தனக்கு வழிவிட மென்மையாக கேட்டுக்கொண்டார். நல்ல ஜீன்ஸ் உடை அனிந்த 40 வயது மதிக்கத்தக்கவர், ஒரு ட்ராலியை வைத்திருந்தார். அவருடன் சில குடும்பங்களும் அதே மின்தூக்கியிலிருந்து வெளியேறினார்கள். நாங்கள் மின்தூக்கிக்குள் இப்போது நுழைந்துவிடுவோம் என்றும், சற்று பொறுத்துக்கொள்ளும்படியும் மென்மையான மொழியில் பதிலளித்தேன். அந்த மனிதர் உடனே ஏதே!!! என்கிற வார்த்தையுடன் தனது தொனியை மாற்றிக்கொண்டு ஏளனமாக நோக்கினார். நான் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து எப்படியாவது நகர்ந்துவிட எத்தனித்தேன். ஒருவழியாக மின்தூக்கியில் சிறிய இடம் கிடைத்து பக்கத்திலிருந்த பெண்ணை இடித்துவிடாதபடி சங்கடத்துடன் நின்றுகொண்டேன். வீட்டுக்கு வந்து சேர்ந்தும் அந்த வழுக்கையான 40 வயது ஜீன்ஸ் மனிதரின் நடத்தை விசித்திரமாகவே இருந்தது. மனைவியிடமும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன்.

என் நுகர்வுப் பிரச்சனை

எனக்கு நுகர்வுப் பிரச்சனை இருப்பதை உணர்ந்தது 5 வருடங்களுக்கு முன்னர்தான். சிறுவயதில் வேலூரிலிருந்து சரவணா ஸ்டோரில் பொருட்களை வாங்க நானும் என் தம்பியும் கண்டக்டர் சித்தப்பாவுடன் பேருந்தில் சென்னைக்கு பயணித்தது நினைவுக்கு வருகிறது. அப்போதுதான் முதன்முதலில் அத்தகைய பெரிய கடைக்குள் நெரிசலான மக்கள் கூட்டத்தை பார்த்தேன். அதற்குமுன்னர் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் எங்களுக்கு புத்தாடை தைத்துத் தருவார்கள், அதையும் அரிதாகவே உடுத்துவோம். உடையின் அளவும் எங்களைவிட மிகப் பெரிதாகவே இருக்கும். சரவணா ஸ்டோர்ஸில் அன்றுமட்டும் விதவிதமான உடைகளை உடுத்திப் பார்த்து வைத்துவிட்டு இரண்டு செட்டுகளை வாங்கிக்கொண்டு திரும்பினோம். அதன்பின்னர் கல்லூரிக் காலத்தில் வருடம் ஒருமுறை நானும் தம்பியும் வந்து வாங்கிச்செல்வோம். விலை குறைவு, தையல் செலவு மிச்சம் என்பதால் அங்கேயே வாங்க ஆரம்பித்தோம். ஆனால் பெரும்பாலான உடைகள் எங்களுக்குச் சரியாக பொருந்தாது. இந்த மனநிலை அப்படியே வேலைக்குச் சேர்ந்தும் நீடித்தது. வாங்கிய உடைகளில் சரியாக பொருந்தும் 20% உடைகளை மட்டுமே அடிக்கடி உடுத்துவது வழக்கம். மற்றவை அப்படியே கிடக்கும். மனதுக்குள்ளும் என் உடைமீது தாழ்வு மனப்பான்மை எப்போதுமே இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு என் வேலை நிறுவனத்துக்கு அருகில் Kishore Biyani பெருமுதலீட்டில் Brand Factory என்கிற கடையை ஆரம்பித்திருந்தார். பெரிய பிராண்டுகள் நல்ல தள்ளுபடியில் கிடைக்கின்றன என்ற அறிவிப்பு ஒரு வெள்ளிக்கிழமை SMSல் வந்தது. அன்று காலை சீக்கிரமாக எழுந்து 9 மணிக்குள் சென்று பார்த்தால், கடை வாசல் திறப்பதற்குள் அங்கே என் வயதொத்த நூறுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றுகொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் கடைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய கடை திறக்கும்வரை காத்திருந்து குறைந்தது 5000 ரூபாய்க்கு வாங்கிவந்தேன். அப்போதுதான் Flipkart நிறுவனம் Big Billion Day என்கிற தீபாவளி திருவிழாவை ஆரம்பித்திருந்தார்கள். அப்போதெல்லாம், தூங்காமல் நள்ளிரவில் பொருட்களை வாங்கியிருக்கிறேன். 300ரூபாய் மதிப்புள்ள பென்டிரைவ் 1ரூபாய்க்கு வரும். அடித்துப்பிடித்துத் தேடினால் அதற்குள் விற்றுத் தீர்ந்திருக்கும். ஏமாற்றத்தில் இரவில் தூங்காமல் வெளியே சுற்றிவிட்டுவந்ததாக நினைவு. என் அண்ணனின் Amazon Prime கணக்கில் 12 ஜட்டிகளை ஒருநாளில் தள்ளுபடியில் வாங்கியதற்காக என்னை நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கலாய்த்திருக்கிறார்கள்.

என் உளவியல் சிக்கல்

இப்படி வாங்கிக் குவித்தும் என் தாழ்வு மனப்பான்மைக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. ஒருமுறை வீட்டில் உடுத்தும் ஒரு Tshirtஐ நல்ல பிராண்டு என்பதால் வாங்கி வெளியில் உடுத்திக்கொண்டு சென்று அவமானப்பட்டிருக்கிறேன். என் அண்ணன் அதைச் சுட்டிக்காட்டி அப்படி உடுத்தக் கூடாது, உடைக்கென்று ஒரு etiquette இருக்கிறது என்று கற்றுக்கொடுத்தார். முதலில் ஏற்றுக்கொள்வதில் வலி இருந்தாலும், அதிலிருந்து மெல்ல வெளியேறினேன். இப்போது தேவைக்கு அதிகமாக ஒரு பொருளையும் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துத்தான் கடைக்குள் நுழைவதே. அதோடு முதலீட்டில் என் ஆர்வத்தை மடைமாற்றிவிட்டிருக்கிறேன். ஆசிரியர் ஜெ சிலவருடங்களுக்குமுன் கலாபவன் மணி பற்றிய ஒருபதிவு போட்டிருந்தார். அதில் வறுமை எப்படி அவர்களை வாட்டியது, அதிலிருந்து மீண்டவர்கள் எப்படி உணவுக்கே தங்களை இழந்தார்கள் என்று பதிவிட்டிருந்தார். என் அனுபவத்தில், நுகர்வு குறித்த உளவியல் சிக்கல் ஒருவரை அதில் வாழ்நாள் அடிமையாக்கிவிடுகிறது, அல்லது எரிச்சலுற்று முற்றிலும் அதற்கான எதிர் மனநிலையை விதைத்துவிடுகிறது.

எங்கள் கிராமத்திலிருந்து வேலூருக்கு வரும் 36-40 இருக்கைகள் கொண்ட பேருந்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணிப்பது மிகச்சாதாரணம். பேருந்துக்கு வெளிப்புறமாக மேலே ஏறும் படிக்கட்டுகளிலெல்லாம் பயணம் செய்து கல்லூரிக்கு சென்றிருக்கிறேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் வடமாநில இரயிலில் பலநாட்கள் குளிக்காத மக்களுடன் இயல்பாக பயணித்திருக்கிறேன். அவற்றிலிருந்து வெளியேறி என்னை மேம்பட்டவனாக வெளிப்புறத்தில் காட்டிக்கொள்வதற்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறேன், என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று இப்போது நினைக்கையில் விந்தையாக உள்ளது. மக்கள் கூட்டத்தின் மீதான ஒவ்வாமை எனக்கு நாளுக்குநாள் அதிகமாகி ஒருகட்டத்தில் நாட்டைவிட்டே வெளியேற நினைத்து ஜெர்மனியிலும் கனடாவிலும் வேலை தேடியிருக்கிறேன். உள்ளூர் திருவிழாக்களை தவிர்த்திருக்கிறேன். பயணங்களைத் தவிர்த்திருக்கிறேன். வழக்கம்போல ஆசிரியர் ஜெ திருவிழாக்கள் ஏன் முக்கியம், கூட்டத்தில் தனித்திருத்தல் எப்படி சாத்தியம், எப்படி தன்னை மேம்படுத்திக்கொள்வது, ஆளுமையை உருவாக்கிக்கொள்வது, வெளிப்படுத்திக்கொள்வது என்று வெவ்வேறு வகையில் செதுக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இப்போதும் மக்கள் கூட்ட நெரிசலைக் கண்டால் வரும் எரிச்சலைத் தவிர்க்க முடியவில்லை. வலுக்கட்டாயமாக என்னைச் சமநிலைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வேலை நிறுவனத்தில் ஊழியர்களின் மனநிலை

இப்போது நான் வேலைசெய்யும் நிறுவனத்தில் உணவு இலவசமாக வழங்கிவிடுகிறார்கள். வேலைசெய்பவர்கள் அனைவருமே பல லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள்தான். உயர்தர மக்கள் அல்லது அப்படி ஆக முயற்சித்துக்கொண்டிருக்கிறவர்கள். இந்திய மக்கள்தொகையில் முதல் 5%க்குள் வருபவர்கள். லட்சம் மதிப்புள்ள ஐபோன் சாதாரணமாக புழங்குகிறது. பெரும்பாலானவர்கள் கார் வைத்திருக்கிறார்கள், அல்லது அதை வாங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். வார இறுதியில் அளவின்றி உயர் கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இப்போதும் தேவைக்கு அதிகமாகவே உணவை வீணாக்குவது, கை துடைக்கப் பயன்படுத்தும் Tissue காகிதங்களை ஒன்றுக்கு அதிகமாக எடுத்து அப்படியே போட்டுவிடுவது என்று இவர்கள் செய்யும் சில அழிச்சாட்டியங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிறுவனத்தில் குறைகளைக் களைவதற்கு என்று ஒரு வலைத்தளத்தை நிர்வாகம் வைத்திருக்கிறது. அதில் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளையும் கேள்விகளையும் நிர்வாகத்துக்கு வைக்கலாம். பதிவிட்டவரின் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். நிர்வாகம் வெளிப்படையாக பதிலளிக்கும். அதில் வரும் பதிவுகள் 95% சமநிலையற்ற பிதற்றல்களாகவோ அல்லது சகட்டுமேனிக்கு திட்டும் தொனியிலோதான் இருக்கும். தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்த ஒரு கேள்வி, அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும் மோரில் உப்பின் அளவு சரியாக இல்லை என்பதுதான்!

சமீப நாட்கள்வரை சந்தையில் மதிப்புமிக்க ஊழியர்களைக் கவர்வதற்கும், தக்கவைத்துக்கொள்ளவும் இதை ஊக்கப்படுத்திக் கொண்டுவந்த நிர்வாகம், இப்போது ஆட்குறைப்பு மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். சில சில்லரைச் செலவுகளிலும் கைவைத்திருக்கிறார்கள். குறிப்பாக பிஸ்கட் பாக்கெட்டுகளை அப்படியே வைப்பதற்கு பதிலாக, அவற்றைப் பிரித்து ஒரு பெரிய பாட்டிலில் அடைத்து வைக்கிறார்கள். தேவையான அளவுக்கு அவற்றை எடுத்துக்கொள்ளலாம். தேநீர் அருந்துவதற்கு பேப்பர் கப்புகளுக்கு பதிலாக எவர்சில்வர் டம்லர்களை வைத்திருக்கிறார்கள். மதிய உணவில் எல்லோருக்கும் வழங்கும் இனிப்பைத் தவிர்த்து தேவையானவர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளும்படி பொதுவான இடத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஊழியர்களால் இந்த மாற்றங்களைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஷிப்ட் முறையில் வேலைசெய்பவர்களுக்காக இருக்கும் வண்டிகளில் தகுதியற்ற மற்றவர்களும் பயணிப்பது, வண்டி வந்துசேர 15 நிமிட தாமதம் ஆனது தாங்காமல் நிறுவனத்தின் சமூக ஊடகத்தில் கொந்தளிப்பது என்று ஊழியர்களின் அழிச்சாட்டியம் முகம் சுழிக்கும் அளவுக்குச் செல்கிறது. கிடைக்கும் எதுவும் கட்டுப்பாடின்றி கிடைத்துக் கொண்டிருக்கவேண்டும், எந்த நெறிகளும் இருக்கக்கூடாது, மற்றவர்களைக் குறித்த நிதானமின்மை என்று இந்த உயர் நடுத்தர மற்றும் நடுத்தர இந்தியர்களின் உளவியலை நினைத்தால் பயமாக உள்ளது.

சிறிது காலத்தில் வருமானத்தில் உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தவர் (நான் உட்பட) தங்களை உயர் வர்க்கத்தவராக மேம்போக்காக மட்டும் காட்டிக்கொள்ளாமல், நிதானமாக செயல்படாவிட்டால், இந்தியாவைப்பற்றிய பொது மனநிலை உலக அளவில் சீர்கெட்டுப்போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் நம் நடுத்தர வர்க்கமே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ அதிகம் பயணிப்பவர்களாக ஆவார்கள். இதே மனநிலையை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தினால், நம் நன்மதிப்பை இழக்க வேண்டிவரும். இப்போதே மேற்கத்திய நாடுகளில் நம் மக்களைக் குறித்த எண்ணம் கீழாகத்தான் உள்ளது. இத்தகைய இந்திய மனநிலையை தக்கவைக்க முயற்சிக்குக் பெருநிறுவனங்களைக் குறித்து எனக்கு வழக்கத்துக்குமேல் எந்த கேள்வியும் இல்லை. நாம் சரியாக இருந்தால், முதலீடு செய்யும் நிறுவனம் தன் உத்தியை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளும். மாற்றாத நிறுவனம் சந்தையில் தாக்குபிடிக்கமுடியாது.

கொலைவெறி, வேற லெவெல், அல்டிமேட், எக்ஸ்ட்ரீம் போன்ற வார்த்தைகள் நம் சமூகத்தில் சீக்கிரம் வழக்கொழிந்து நமது நுகர்வுச் சாமியாட்டம் சமநிலைக்கு என்று வந்து சேர்கிறதோ பார்ப்போம்!

குறிச்சொற்கள்:

புதுப்பிக்கப்பட்டது: