The Most Important Thing - வாசிப்பனுபவம்
வெண்முரசின் நீலம்
வாசிப்புக்குப் பிறகு தீவிர இலக்கியத்திலிருந்து ஒரு சிறிய விடுப்பு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கிண்டில் நூலகத்தில் துழாவிக்கொண்டிருந்தபோது இந்த புத்தகத்தை வந்தடைந்தேன். உடனே குதித்துவிட்டேன். இப்பதிவில், என் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
Howard Marks பற்றி
எனக்கு இவரைப்பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அறிமுகம் கிடைத்தது. இவர் உருவாக்கிய Oaktree Capital அமெரிக்காவில் $100 பில்லியன்க்கு அதிகமாகச் சொத்துக்களை நிர்வகிக்கும் மிகப்பிரபலமான நிறுவனம். அந்நிறுவனம், நட்டமடைந்து திவாலான இந்திய நிறுவனமான DHFLன் சொத்துக்களை வாங்குவதில் போட்டியிட்டபோது, Howard Marks செய்தித்தாள்களில் அதிகம் பேசப்பட்டார். இவர்களின் முதலீட்டு உத்தி என்பது எப்போதும் Value Investingதான். அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்கு அதன் சொத்து மதிப்பைவிட(i.e intrinsic value) மலிவாக கிடைத்தால் மட்டுமே அதில் முதலீடு செய்ய இறங்குவார். இவரின் இந்த புத்தகமும் என்னைப்போல Retail முதலீட்டாளர்களின் மத்தியில் மிகப்பிரபலம்.
புத்தக வாசிப்பு
இலக்கியப் புத்தகங்களைப் போலல்லாமல், இத்தகைய புத்தகங்களில் செலவழிக்கப்பட்ட நேரத்திற்கான ஒருசில பலன்களையாவது எதிர்பார்த்தே வாசிப்பில் இறங்குவோம். இப்புத்தகத்தில் என் எதிர்பார்ப்பு என்பது, நம் எல்லோருக்கும் நன்கு பழக்கமான Index முதலீடுகளைத்தாண்டிக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யும்போது நாம் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்களை வழங்குகிறதா என்பதுதான். புத்தகத்தை ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். மிகச்சிறியதாக இருந்தாலும், இப்புத்தகம் என்னைப்போன்ற சிறு முதலீட்டாளர்களின் நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டியது. முதலீட்டில் ஏற்கெனவே அறிமுகம் இருந்தாலும், நிச்சயம் இப்புத்தகத்தை வாசிப்பதில் செலவழிக்கப்படும் நேரம் பயனளிக்கும். மறுவாசிப்புக்கும் உகந்தது.
இரண்டாம் நிலைச் சிந்தனை
பொதுவான முதலீட்டாளரின் மனநிலையை முதலில் பார்த்துவிடுவோம். சந்தையில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரு ட்ரெண்டை பின்தொடர்வார்கள். அதாவது, சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தால், முதலீட்டில் இறங்குவார்கள். சந்தை இறங்க ஆரம்பித்தால், முதலீட்டை வெளியே எடுத்துவிடுவார்கள். இதே ட்ரெண்டில் அதிவேகமாக வாங்கி விற்பவர்கள் ட்ரேடர்கள். ஆனால் முதலீட்டை கொஞ்ச காலம் வைத்திருப்பவர்கள் முதலீட்டாளர்கள். Howard Marks இந்த மனநிலைக்கு முற்றிலும் எதிராக இருக்கிறார். சந்தையில் எப்போது விலை மலிவாக பங்குகள் கிடைக்கின்றனவோ அப்போதுதான் முதலீட்டாளர்கள் பயத்தில் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு வெளியேற விரும்புவார்கள், அப்போதுதான் நாம் உள்ளே நுழையவேண்டும். ஆனால் அப்படி உள்ளே நுழைவதற்குமுன் உரிய பணத்துடன் நம்மைத் தயார்செய்துகொள்ள போதுமான நேர அவகாசம் கிடைக்கும்.
அந்நேரம் நாம் தேர்ந்தெடுத்துள்ள நிறுவனத்தைக் குறித்த முக்கிய தகவல்களைச் சேகரித்து, முதலீட்டில் இறங்குவதற்கான குறைந்தபட்ச விலையையும் வெளியேறுவதற்கான அதிகபட்ச விலையையும் கணக்கிட்டுவிட்டிருக்கவேண்டும். ட்ரேடர்களைப்போல அடிக்கடி உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டியதில்லை. நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டால், அதை அவ்வப்போது பார்த்துவந்தால் போதுமானது. Marks இன்னொரு விசித்திரமான விஷயத்தையும் குறிப்பிடுகிறார். நம்பகத்தன்மை குறைவான நிறுவனங்களும்கூட அடிமாட்டு விலைக்குக் கிடைத்தால், அது தனது உண்மையான intrinsic மதிப்பையாவது எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அதில் முதலீடு செய்வதுகூட மதிப்புமிக்க நிறுவனத்தில் அதிக விலைகொடுத்து முதலீடு செய்வதைவிடச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.
அறிவார்ந்த சந்தை
பொதுவான முதலீட்டாளர்களின் மனநிலையில் அடுத்த விஷயம், சந்தை எப்போதும் ஒரு பங்குக்குச் சரியான மதிப்பையே அளிக்கும் என்பதுதான். ஆனால் உண்மையில் சந்தை ஒரு நிறுவனத்தின் பங்குக்குச் சரியான மதிப்பை அளிப்பது அரிதாகவும் அதேசமயம் மிகவும் குறுகியகாலமே நீடிக்கிறது. பெரும்பாலான நேரம், பங்கின் மதிப்புக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோதான் சந்தையில் மதிப்பிடப்பட்டிருக்கும். பெண்டுலம் போல அது சமதளத்திலிருந்து எவ்வளவு தூரம் ஒரு பக்கத்தில் செல்கிறதோ, அவ்வளவு தூரம்வரை மற்றொரு பக்கத்தில் சென்றுவிடுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனென்றால், சந்தையில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் மனிதர்களே! அவர்களின் உளவியல் என்பது அவர்களின் அறிவைவிட அதிகமான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தக்கூடியது. எனவே, ஒரு நிதானமான, அறிவார்ந்த முதலீட்டாளராக நாம் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சந்தையின் அந்த பெண்டுலம், ஒரு அதீதப் புள்ளியிலிருந்து (ex., high) அடுத்த அதீதப் புள்ளிக்கு (low) செல்வதற்கு நீண்டகாலம் கூட எடுக்கலாம். நாம் ஒரு பங்கில் முதலீடு செய்ய இறங்குவதற்குமுன், அந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு intrinsic மதிப்புக்குக் குறைவாக இருந்தால், நீண்டகாலம் எடுத்தாலும், அது மேலே செய்ய வாய்ப்பு அதிகமுள்ளது. அதே சமயம் விலை மேலும் குறைந்தால், மிக அதிகமான நட்டம் வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
சந்தையின் அபாயம்
Marks சந்தையில் முதலீடு செய்வதிலுள்ள அபாயங்களைப்பற்றி இரண்டுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களில் விரிவாகவே விளக்கியுள்ளார். ஒரு நாட்டின் அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டி விகிதம் 7% என்று வைத்துக்கொள்வோம். அதே நாட்டின் ஒரு சிறிய நிறுவனம் கொடுக்கும் இலாபமானது அதே 7% என்று இருந்தால், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அர்த்தமற்றது. ஏனென்றால், ஒரு நாடு திவாலாவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. ஆனால் அந்த சிறு நிறுவனம் வெவ்வேறு காரணங்களுக்காக எந்நேரமும் திவாலாகலாம். எனவே, அதிக அபாயத்தில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்வது அர்த்தமற்றது. அரசாங்க கடன் பத்திரங்களில் தொடங்கி, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வழங்கும் பத்திரங்கள் அல்லது பங்கு வரை அபாயத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். நாம் எடுத்துக்கொள்ளும் அதிக அபாயத்துக்கான பலன் வரும் இலாபத்தில் இருக்கும் என்கிற உத்தரவாதம் அளிக்கப்படவில்லை (i.e The greater the risks, doesn’t always lead to greater returns).
மனிதர்களாகிய நாம் எப்போதும் நம்மால் தாங்கமுடிந்த நட்டத்தை குறைவாகவே(தவறாக) கணக்கிட்டுவிடுகிறோம். ஒரு முதலீட்டாளராக அதிக இலாபத்துக்கு ஆசைப்படாமல் நம் அபாய அளவைக் குறைத்துக்கொள்வது எப்படி என்றுதான் பார்க்கவேண்டும். Margin of safety என்கிற விஷயம் நம் முதலீட்டை முடிந்தவரை பாதுகாத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமாகிறது. சந்தை எப்போது வேண்டுமானாலும், ஒரு பங்கிற்கு அதீதமான மதிப்பை அளிப்பது இயல்பானது. அதேபோல யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த சந்தையே தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 2020 கோவிட் பெருந்தொற்று மற்றும் இரஷ்யா 2022ல் எடுத்த போர் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். இத்தகைய அதீத மாற்றங்களுக்கும் நாம் தயாராகவே இருக்கவேண்டும். எனவே, நாம் முதலீட்டுத் தொகையை முழுவதுமாக இழந்தாலும், நம்மால் குடும்பம் நடத்த முடியும் என்கிற நிலையிலேயே பங்குச்சந்தை முதலீடுகளில் இறங்கவேண்டும். அதேசமயம், அந்த முதலீட்டையும் நட்டமாகாமல் காத்துக்கொண்டு எப்படி இலாபம் அடைவதென்று பார்க்கவேண்டியது அவசியம்.
சந்தையில் benchmark indexஐவிட அதிகமாக அபாயத்தில் அதைவிட அதிக இலாபம் பார்ப்பதைவிட, அதே indexஐவிட குறைந்த அபாயத்தில், benchmark அளவுக்கோ அல்லது அதைவிடச் சற்று குறைவாக இலாபம் எடுத்தாலும், நாம் நல்ல முதலீட்டாளர்தான். இதில் அதிக அபாயத்தில் இலாபம் காட்டும் முதலீட்டாளர்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதில்லை. இதில் Warren Buffettன் மிகப் பிரபலமான மேற்கோளை Marks நமக்கு நினைவுபடுத்துகிறார். அந்த மேற்கோள்: அலை வந்துபோன பின்தான், எவர் கடற்கரையில் நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருக்கிறார் அல்லது எவரின் உடை கழலாமல் உள்ளது என்று பார்க்கமுடியும். எனவே, அத்தகைய அலைக்கு நாம் தயாராக இருக்கவேண்டும். Marksன் இன்னொரு மேற்கோள்: You can’t predict, you can prepare.
காத்திருத்தல்
முதலீட்டாளராக நமக்கு மிகப்பெரிய சிக்கல் உளவியல் சம்பந்தப்பட்டதுதான். இவற்றைக் கையாள்வதற்கும் Marks சில ஆலோசனைகளை வழங்குகிறார். சந்தை நாம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் முதலீட்டுடன் உள்ளே செல்லவும், கொழுத்த இலாபத்துடன் வெளியேறவும் வாய்ப்பை வழங்கிவிடாது. அத்தகைய வாய்ப்பு நமக்கு அரிதாகவே கிட்டும். சந்தர்ப்பம் வரும்போது நம்மால் உள்ளே நுழையும் அளவுக்குக் கையில் பணம் இருக்கவேண்டும். சிலருக்குக் கையில் பணம் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. தற்போது இருக்கும் வாய்ப்புகளில் அதிக விலைகொடுத்து முதலீடு செய்துவிட்டு இலாபம் கிட்டும் என்று யோசிப்பார்கள். ஆனால் அது பொதுவாக நல்ல உத்தி அல்ல என்கிறார் Marks. நல்ல அலசலுடன் நிறுவனங்களின் பட்டியலைத் தயார்செய்துகொண்டு, தக்க சமயத்துக்காகக் காத்திருக்கவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. அதுவரை பணத்தை, சேமிப்பு கணக்கிலோ, அல்லது Liquid fundஇலோ வைத்துக்கொண்டு காத்திருப்பதே நல்லது.
நம்மை எப்படி மதிப்பிடுவது?
நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதில் நமக்கு பெரும்பாலும் தெளிவிருப்பதில்லை. அதனால் நம்மை எப்போதுமே அதிகமாக மதிப்பிட்டுவிடுகிறோம். நமக்கு உண்மையில் என்ன தெரியும், அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு நம் இலாபத்தில் பங்கெடுத்திருக்கிறது, மேலே குறிப்பிட்ட சில விஷயங்களில் எப்படி நம் முதலீட்டில் பயன்படுத்துவது என்பவை எல்லாமே ஒரு அறிவியல் என்று கொள்வதைவிட அது ஒரு கலை என்பதே சரியாக இருக்கும். எனவே முடிந்தவரை defensive முறையில் முதலீடு செய்து, நம் portfolioன் மதிப்பை (இலாபத்தில் மட்டுமல்லாமல் volatility, etc.,) எப்படிக் கூட்டுவது என்று பார்க்கவேண்டும் என்று Marks ஆலோசனை வழங்குகிறார்.
மொத்தத்தில் புத்தகம் எப்படி?
சிறிய புத்தகமானாலும், முக்கியமான முதலீட்டு ஆலோசனைகளுடனும், சந்தையின் வரலாற்று உதாரணங்களுடனும் சுவாரசியமாகவே வாசிக்க முடிகிறது. புத்தகத்திலுள்ள பெரும்பாலான வரலாற்று உதாரணங்கள் 2015க்கு முன் நிகழ்ந்தவை. கடந்த பல பத்தாண்டுகளாக உலகச் சந்தைகளில் என்ன நிகழ்ந்தது. அவற்றில் முதலீட்டாளர்கள் முதல் நிதி மேலாளர்கள் வரை எப்படியெல்லாம் அதீத ஆபத்தை எடுத்து தங்கள் கைகளைச் சுட்டுக்கொண்டார்கள் என்று உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். மிக முக்கியமாக 1980களில் கடன் பத்திரங்களில் ஏற்பட்ட பின்னடைவு, 2000ன் .com bubble, 2007-08ன் வீட்டுக்கடன் பிரச்சனை உட்பட ஏராளமான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். வாசிக்கையில் திகைப்பையே ஏற்படுத்தும் அளவுக்கு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொண்டு நட்டமடைந்திருக்கிறார்கள் அல்லது முற்றிலும் திவாலாகியிருக்கிறார்கள். இவற்றிலிருந்து நம்மால் நல்ல பாடம் கற்றுக்கொள்ள முடியும்.
இப்புத்தகத்தை ஒருசில வருடங்கள் கழித்து மீண்டும் வாசிக்கக்கூடும்.