6 நிமிட வாசிப்பு

மில்லியன் கணக்கில் விற்றுத் தள்ளிய பிரபல நூல்களை நான் முடிந்தவரை தவிர்த்துவிடுவது வழக்கம். அதில் சரக்குக்கு நிகராகவே பொது வாசகர்களைக் கவரும் வகையில் சுமாரான மசாலா விஷயங்களும் மலிந்து கிடக்கும். இதில் என்னதான் இருக்கிறது என்று வேண்டுமென்றே இறங்கினேன். இந்தப் பதிவில் இப்புத்தகத்திலிருந்து எனக்கு என்ன கிடைத்தது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

வாசிப்பனுபவம்

நான் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். எதிர்பார்த்தது போலவே, செல்வம், சேமிப்பு, முதலீடு, கடன் போன்றவற்றை மிகச்சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் பாபிலோன் என்கிற பண்டைய நாகரிக நகரத்தை வைத்து ஒரு மசாலா பூரியைச் சமைத்துத் தருகிறார் ஆசிரியர் George Samuel Clason. பாபிலோனிய மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? எப்படி எல்லோருக்கும் சமமாகவே வாய்ப்புகள் இருந்தாலும் வெகு சிலரே செல்வந்தர்களாக வளர்கிறார்கள்? அவர்களின் செல்வ வளர்ச்சியின் இரகசியம் என்ன என்று சுவாரசியமான கதைகளைக்கொண்டு விவரிக்கிறார். கதை மாந்தர்களும் அவர்கள் நமக்கு உணர்த்த விரும்பும் முதலீட்டுக் கோட்பாடுகளும் மனதில் நிற்கும்படி எளிமையாகவும் அதேசமயம் தெளிவாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே வாசிப்பில் விரைவாக முடித்துவிட முடிகிறது. முதலீட்டின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த புத்தகம் சில விஷயங்களை வழங்கக் கூடும்.

செல்வம் செயல்படும் சில விதிகள்

பாபிலோனிய அரசருக்கு அமைச்சர்கள் சில செய்திகளை வழங்குகிறார்கள். செல்வத்துக்குப் பெயர்போன நகரமான பாபிலோனிலும் வெகுசிலரே செல்வந்தர்களாக இருக்கிறார்கள், மற்றவர்கள் இப்போதும் ஏழையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு துனுக்குறும் செய்தி. அதை அறிந்த அரசர், நகரின் செல்வந்தர்களில் ஒருவரிடம் எல்லோருக்கும் தனது உத்திகளைக் கற்றுத்தரும்படி ஆணையிடுகிறார். அவர் குடிமக்களில் முதல் 100 பேருக்குத் தனது உத்திகளைக் கற்றுத்தருவதாக ஒப்புக்கொள்கிறார். தான் எப்படி மற்றவர்களைப்போலச் செல்வத்தை அணுகுவதில்லை என்று வெவ்வேறு கதைகளின் மூலமும் உரையாடல்கள் மூலமும் விளக்குகிறார் அந்த செல்வந்தர்.

ஒரு கதையில் ஒரு வயதான செல்வந்தர் தனது மகனுக்குத் தான் சேர்த்துவைத்த சொத்துக்களை அப்படியே வழங்காமல், அவனைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறார். அவன் கையில் சில தங்க நாணயங்களையும் அவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் 6 முக்கிய விதிகளையும் அளித்து, 10 வருடம் கழித்து சந்திக்கச் சொல்லி அனுப்பிவிடுகிறார். முதலில் தான்தோன்றித்தனமாகச் செலவுகளிலும் முதலீடுகளில் இறங்கும் அந்த இளைஞன், அவனுக்குக் கிடைத்த அனைத்து செல்வத்தையும் இழக்கிறான். விரைவில் ஒரு வழிப்பறிக் கொள்ளையனாக மாறி, அடிமையாக்கப்படுகிறான். அதுவரை சீண்டாமல் விட்டுவிட்டிருந்த தனது தந்தையில் 6 முதலீட்டு விதிகளை நினைவுகூர்கிறான். பிறகு மெல்ல மீண்டெழுந்து எப்படி அவன் தந்தையைச் சந்தித்து வென்றான் என்பதே கதை. கதையினூடாக அந்த விதிகளும் நமக்கு மனதுக்குள் பதிந்துவிடுகின்றன.

கடன்

இந்த புத்தகத்தில் எனக்கு மனதிற்குள் நின்ற சில விஷயங்களில் ஒன்று கடன். கதையில் ஒருவர் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் வாங்கிவிட்டு அடைக்கமுடியாமல் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு விடுதியில் சாப்பாடு கிடைக்குமா என்று தேடிப் பார்க்கும்போது, எதிர்பாராத விதமாக அந்த விடுதியில் அவருக்குக் கடன் கொடுத்துள்ள பிரபல பணக்காரர் அவரைப் பார்த்துவிடுகிறார். முதலில் அவமானப்படுத்தும் அந்த நபர், தான் எப்படி ஒரு அடிமையாக இருந்து இவ்வளவு செல்வந்தனாக வளர்ந்தேன் என்பதை கடன் வாங்கியவருக்கு விளக்கிவிட்டு அவருக்கும் சேர்த்து உணவுக்கு ஆர்டர் கொடுக்கிறார். நாம் ஏன் கடன் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், அதை எப்படி கடமையுடன் அடைக்கவேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.

மற்றொரு கதையில் பாபிலோனில் ஒருவருக்கு அவரின் சிறப்பான வேலைக்கால சில தங்க நாணயங்கள் அரசரிடமிருந்து பரிசாகக் கிடைக்கிறது. இவர் அதைக்கொண்டு மற்றவர்களைப்போல் தான்தோன்றித்தனமாக அபாயகரமான முதலீடுகளில் இறங்காமல், அந்த ஊரிலேயே பணக்காரரான வட்டிக்கடைக்காரரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். இவரின் தங்கையின் கணவர் ஒரு இலாபகரமான தொழில் துவங்கலாம் என்று யோசிக்கிறார். தனக்குக் கிடைத்த தங்க நாணயங்களை அந்த தொழிலில் முதலீடு செய்யக் கடனாக கேட்கிறார்கள். நெருங்கிய உறவுக்காரருக்கு நான் எப்படி கடன் கொடுக்காமல் இருக்கமுடியும், கொடுத்தால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்றெல்லாம் குழம்பிவிட்டிருக்கிறார் இவர். இந்த அத்தியாயத்தில் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும், முதலீட்டை எப்படி பார்க்கவேண்டும் என்று விரிவாக விளக்கியிருக்கிறார்.

அதிர்ஷ்டம் எப்படி வேலைசெய்கிறது?

நாம் எல்லோரும் நினைக்கும் அதிர்ஷ்டம் என்பது, குதிரைப் பந்தயத்திலோ, தாயக்கட்டையிலோ, அல்லது வேறு விபரீதமான பந்தயங்களிலோ கிடைப்பதில்லை. அது நம்மை வந்துசேரும் விதமே வேறு. வரும்போது அதை நாம் இறுகப்பற்றிக் கொண்டுவிட்டால் போதும், அது நம் வாழ்கையை மேலும் கீழுமாக மாற்றிப்போடக்கூடும். இந்த விஷயத்தை இரண்டு கதைகளின் வழியாக விவரிக்கிறார் ஆசிரியர்.

அப்போதுதான் திருமணமாகியுள்ள ஒரு இளைஞன் தன் தொழிலில் செல்வத்தை ஈட்டத்தொடங்குகிறான். அப்போது பாபிலோனில் அவன் மாமனாரின் நண்பர்கள் சேர்ந்து ஒரு தொழில் யோசனையை முன்வைக்கிறார்கள். பெரியவர் அந்த இளைஞனை அதில் முதலீடு செய்யச்சொல்லி ஆலோசனை வழங்குகிறார். ஆனால் வயதானவரின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு தன் மனைவியைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளச் செலவழிக்கிறான். பிறகு வெகுசில நாட்களிலேயே அந்த தொழில் நல்ல வெற்றியடைந்து முதலீட்டாளர்கள் நல்ல இலாபத்தில் வெளியேறுகிறார்கள். இவன் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதை உணர்கிறான்.

அதேபோல இன்னொரு சுருக்கமான கதையில் ஒரு வியாபாரி வியாபாரத்துக்காக வெகுதூரம் பயணித்து ஒரு இரவில் நகர் எல்லையை அடைகிறான். இரவாகிவிட்டதால் நகரின் வாசற்கதவுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அங்கேயே கூடாரத்தை அமைத்து தனது உதவியாட்களுடன் தங்குகிறான். அவனைப்போலவே, நகருக்குள் தனது விளைபொருட்களை விற்கவந்த ஒரு விவசாயி இரவில் அவனுடன் தங்குகிறான். அப்போது அந்த விவசாயியின் மனைவிக்கு உடல் நலமில்லாத செய்தி வந்து சேர்கிறது. காலைவரை காத்திருக்க விரும்பாத விவசாயி தனது விளைபொருட்களை அந்த வியாபாரியிடம் விற்றுவிட நினைக்கிறான். ஆனால், குறைவான விலைக்கு கிடைக்கும் விளைபொருட்களின் தரத்தின் மீது நம்பிக்கையில்லாத வியாபாரி காலைவரை தாமதிக்கிறான். விடிந்தபின் அதே விளைபொருள் மும்மடங்கு விலைக்குச் சந்தையில் விற்கப்படுகிறது. அந்த வியாபாரி வந்த அறிய வாய்ப்பை கைவிட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புகிறான்.

பாபிலோனின் களிமண் பலகைகள்

Cuneiform tablets என்பவை களிமண் பலகைகள். பாபிலோனில் இருந்து பத்திரமாகக் கொண்டுவரப்பட்ட சில களிமண் பலகைகளில் உள்ள வாக்கியங்களை வாசித்து மொழியாக்கம் செய்வதற்காக ஒரு தொல்லியல் ஆய்வாளர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவருக்குக் கிடைத்த பலகைகளில் ஒரு முதலீட்டாளரின் சில வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியுள்ளன. அவர் மொழிபெயர்த்தவற்றை ஒரு கடிதமாக தனது ஆசிரியருக்கு அந்த ஆய்வாளர் எழுதுகிறார். அந்த வாழ்க்கைக் குறிப்புகள் அப்படியே கதையாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து சில முதலீட்டு உத்திகளும் விதிகளும் கிடைக்கின்றன. அந்த உத்திகளும் விதிகளும் ஒரு 20ம் நூற்றாண்டு குடிமகனாக தனக்கு எப்படிப் பயன்படுகின்றன என்று அந்த ஆய்வாளர் தனது கடிதத்தில் விவரிக்கிறார். வாசகர்களும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன.

மொத்தமாக புத்தகம் எப்படி?

அதிகம் புனைவுகளை விரும்பும் எனக்கு இந்த புத்தகம் ஒரு எளிமையான முதலீட்டு விதிகளை பொதுவான கதைசொல்லும் நடையில் விவரித்திருப்பது ஓகே என்றே தோன்றுகிறது. இந்த புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும் கொள்கைகள் எதுவும் புதியவை அல்ல என்றாலும், சுவாரசியமான நடையில் சொல்லப்பட்டுள்ளதால், இதற்குச் செலவழித்த நேரம் வீணாகவில்லை என்பதே என் நிலைப்பாடு. தனது செல்வத்தை முதலீடு செய்ய விரும்பும் ஒருவர் ஆரம்பக்கட்டத்தில் வாசிக்கவேண்டிய சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.