5 நிமிட வாசிப்பு

என் மகனை இன்று காலை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டபின், மனதுக்குள் ஏதோ போல இருந்தது. வேலையில் கவனமில்லை. அவன் வீட்டுக்கு வந்தபின் மனைவியுடன் மாலை நடைக்குச் சென்றுவந்தேன். இந்நாளை இப்படியே கடக்காமல் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் என்று Amazon Prime கணக்கைத் திறந்தேன். இந்த படம் எதேச்சையாகக் கண்ணுக்குப் பட்டது. இப்பதிவில் இந்த திரைப்படம் குறித்த என் அனுபவத்தைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

கலைப்படங்களும் நானும்

இத்திரைப்பட அனுபவம் குறித்த என்னுடைய பதிவுக்குமுன், கலைப்படங்களைப் பற்றிய என் அனுபவத்தைச் சுருக்கமாக பகிர்ந்துவிட விரும்புகிறேன். இது ஒருவேளை இப்பதிவை வாசிப்பவருக்கு திரைப்படங்களைக் குறித்த என் சொந்த அனுபவத்தை எந்த அளவுக்குப் பொருட்படுத்தலாம் என்ற அவதானிப்பைக் கொடுக்கலாம்.

எனக்கு கலைப் படங்கள் பார்த்த அனுபவம் மிகக்குறைவு. 20க்கும் குறைவான படங்களே இதுவரை பார்த்திருக்கிறேன். அதுவும் தீவிர சினிமா ரசிக நண்பர்கள் பார்த்து சிபாரிசு செய்தால்தான் பார்க்கத் துணிவேன். ஆசிரியர் ஜெ சிலவருடங்களுக்கு முன் தன் குடும்பத்துடன் சென்று திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் பார்த்த திரைப்படங்களைப்பற்றி ஒரு பதிவை இட்டிருந்தார். அவர் பட்டியலிட்ட சில படங்களை வெவ்வேறு OTT தளங்களில் பார்த்திருக்கிறேன். நானாக யார் சிபாரிசும் இல்லாமல் முதலில் பார்த்த திரைப்படம் Toletதான். அதை கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையின்போது குடும்பத்தைப் பிரிந்து ஒருமாதம் தனிமையிலிருந்தபோது பார்த்தேன். நீண்ட தனிமையில் அத்திரைப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. பார்த்து முடித்துவிட்டு அரைமணிநேரம் என் மனைவியை அழைத்து எதுவும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தேன். அதன்பின் குடும்பம் அல்லது நண்பர்களின் கட்டாயத்தைத் தவிர்த்து நானாக விரும்பிப் பார்த்த பெரும்பாலான திரைப்படங்கள் கலைப்படங்கள்தான். வரும் ஆண்டு திருவனந்தபுரம் திரைவிழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறேன். இதுவே என் கலைப்பட அனுபவம். இப்போது Capernaum திரைப்படம் பற்றி பார்ப்போம்.

கதைக்கரு

கதைக்கரு லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் சேரிப்பகுதியில் வாழும் இரண்டு அகதிக் குடும்பங்களைப் பற்றியது. ஒரு அகதிக் குடும்பத் தம்பதிகளுக்கு அளவுக்கு அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் வளர்ந்த 12 வயது மகன் Zainதான் முதன்மைக் கதாபாத்திரம். Zainக்கு வயதுக்கு வந்த ஒரு சகோதரி இருக்கிறாள். அவளைப் பெற்றோர் விற்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறான் Zain. பெற்றோரிடமிருந்து தன் சகோதரியைக் காப்பாற்ற போராடித் தோற்கிறான். விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி அலைந்து திரிந்து, சட்டவிரோதமாக அந்நாட்டுக்கு வந்துவிட்ட எத்தியோபியன் பெண் Rahilஐச் சந்திக்கிறான். அவள் இவனுக்கு அடைக்களம் கொடுத்து, தன் வேலைநேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை அளிக்கிறாள். சட்டப்படி குடியிருப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளப் போராடும் அவள், ஒருநாள் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறாள். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

கதாபாத்திரங்கள்

பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதுக்குள் ஆழமாக நுழைந்துவிடுகிறார்கள். தேர்ந்த நடிகர்களைவிட, அத்தகைய அகதிச் சூழலுக்கு நன்கு பழக்கமானவர்களை நடிக்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். முதன்மைக் கதாபாத்திரங்கள் உட்பட குழந்தையாக நடித்துள்ள ஆப்பிரிக்கச் சிறுவன் வரை அனைவரும் சிறப்பாகவும் இயல்பாகவும் வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் சிறைச்சாலை உட்பட எல்லாமே அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளன. அவ்வளவு தரமான தயாரிப்புக்காக, அபரிமிதமான உழைப்பைக் கொட்டப்பட்டிருக்க வேண்டும்.

தயாரிப்பு

இயக்குநர் முதல் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. கதைக்களத்தை நமக்கு அறிமுகம் செய்யும்போது மட்டும் மஞ்சள்நிற வடிகட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் துருத்திக்கொண்டிராமல் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இசையும் தேவையான அளவுக்கு வந்துசெல்கிறது. மிகச்சில விஷயங்கள் மட்டும் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளதுபோல துருத்திக்கொண்டு தெரிகிறது. முதலாவதாக வேலைசெய்யும் சிறுவன் Zain, பள்ளிக்குக் குழந்தைகளைக் கூட்டிச்செல்லும் ஒரு வண்டியை அதிகமுறை ஏக்கத்துடன் கடந்துசெல்கிறான். அதேபோல, சிறுவனின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் தேவைக்கு அதிகமாகவே வசனம் பேசிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் கதையோட்டமான சமுத்திரத்தில் ஒரு சிப்பிதான். மொத்தத்தில் சந்தேகமில்லாமல் இது ஒரு தரமான தயாரிப்பு சாதனைதான்.

சேரிகளும் அகதிகளும்

சேரிகள் இந்தியர்களான நமக்கு ஒன்றும் அன்னியமானதல்ல. இந்தியாவின் 1991 பொருளாதார மாற்றத்துக்குமுன் பிறந்து வளர்ந்த எனக்கு இத்தகைய வாழ்க்கைச் சூழலும் ஓரளவுக்கு அறிமுகமுள்ளதே. என் சொந்த ஊரான வேலூருக்கு 20 கிலோமீட்டர் சுற்றளவில் எனக்குத் தெரிந்தே சுமார் 4 இலங்கை அகதிக் குடியிருப்புகள் இப்போதும் உள்ளன. அவர்களுக்கு இன்று 2023ல் நாம் அளித்துள்ள வாழ்க்கைச்சூழல் இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிட எந்தவிதத்திலும் மேலானதல்ல. சென்ற ஞாயிற்றுக்கிழமை அத்தகைய அகதிகள் முகாம் ஒன்றை இருசக்கர வாகனத்தில் கடந்துவந்தேன். இப்போதுதான் அவர்களுக்கான மிக அடிப்படையான வசதிகளைக்கொண்ட கூரை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அகதிகளைப்பறிய இவ்வளவு சொந்த அனுபவமும் அறிமுகமும் இருந்தும், என்னால் இத்திரைப்படத்தைப் பார்த்து முடிக்கச் சிரமமாக இருந்தது.

இறுதியாக

எக்காரணம் கொண்டும் சட்டவிரோதமாக அகதியாக மட்டும் ஒரு நாட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதை இத்திரைப்படம் அப்பட்டமாகக் காட்டுகிறது. அது எந்த சர்வாதிகார நாடாக இருந்தாலும் சரி, இந்தியா போன்ற ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி. இலங்கை, ரோகிஞ்சா மற்றும் எந்த நாட்டின் அகதிகளுக்காகவும் நம் மனம் இன்னும் கனிவு கொள்ளட்டும். அதேபோல ஒரு நாட்டின் அதிகார அமைப்பு நிலைகுலைந்தால் என்ன சீர்கேடுகளெல்லாம் நடக்கும் என தெரிந்துகொள்ள இத்திரைப்படம் ஏராளமான காட்சிகளைக் கண்முன் கொட்டுகிறது. நம் அடுத்த தலைமுறை எக்காரணத்தைக் கொண்டும், இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் பார்த்து வைப்பது நம் கடமை.

வாழ்நாளில் பார்த்தே ஆகவேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் இத்திரைப்படத்தைக் கட்டாயம் சேர்ப்பேன்.