ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - புத்தக வாசிப்பனுபவம்
புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங்கின் கடைசி புத்தகமான ‘Brief answer to big questions’ என்கிற 2018ல் வெளிவந்த ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் ‘ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’ என்கிற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இதில் அவர் பத்து முக்கிய கேள்விகளுக்கு சுவாரசியமான வகையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விடையளிக்க முற்படுகிறார். புத்தகத்தை வாசிப்பதற்கு பதிலாக kuku.fmல் கேட்டுவிட்டு இப்பதிவை எழுதுகிறேன்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
ஸ்டீபன் ஹாகிங் தனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்பதைத் தெளிவாக்கிவிட்டே இந்த கேள்விக்கான அறிவியல் பூர்வமான விடையைத் தேட முற்படுகிறார். பிரபஞ்ச உருவாக்கம் எப்படி உருவாகியிருக்கக் கூடும், பெருவெடிப்பு எப்படி அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு நிகழ்ந்திருக்கிறது, அதில் கடவுள் என்பவருக்கு என்ன பங்கு இருந்திருக்க முடியும் என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் கேட்டுக்கொண்டே விடையளிக்கிறார். கடவுள் என்பவர் அறிவியல் விதிகளுக்கு அப்பார்ப்பட்டவராக இருப்பாரானால், அவரால் எப்படி எந்த அறிவியல் விதிகளையும் மீறி பிரபஞ்ச உருவாக்கத்திலோ அல்லது அதற்குப் பிறகான மற்ற சந்தர்ப்பங்களிலோ செயல்பட முடியவில்லை என்று நிறுவுகிறார். இயற்பியலில் கடவுள் என்கிற கோட்பாடு எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும், நம் நிகழ்வாழ்வில் உருவகிக்கும் கடவுளுக்கும் அதற்கும் உள்ள வேறுபாடுகளையும் விளக்கியுள்ளார்.
பிரபஞ்ச உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது?
பெருவெடிப்புக் கொள்கையை இந்த கேள்விக்குப் பதிலாக முன்வைக்கிறார். சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் உதவியுடன் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதைத்தான் சொல்கின்றன. காலமும் பிரபஞ்சத்திற்குள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எளிமையான எடுத்துக்காட்டு, நாம் இப்போது பார்க்கும் நட்சத்திரங்களும் நட்சத்திர மண்டலங்களும் ஒரு காலத்தில் நமக்கு மிக அருகில் இருந்திருக்க வேண்டும். இன்னும் சில காலத்தில், அவை நம்மைவிட்டு இன்னும் விலகிச் செல்லக்கூடும். அதனால்தான் அவற்றிலிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய லட்சக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகின்றன. அனைத்து நட்சத்திரங்களும், நட்சத்திர மண்டலங்களும் ஒரே புள்ளியிலிருந்து பிறந்த அந்த கணத்தில்தான் பிரபஞ்சம் பிறந்திருக்க வேண்டும் என்று நிறுவுகிறார். எல்லையற்ற அடர்த்தியைக் கொண்ட காலம் வெளி தொடர்பான ஒரு ஒற்றைப் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் துவங்கியிருக்க வேண்டும். இதுவே பெருவெடிப்பாகும். இதனை ஈர்ப்பு அலைகள் நிரூபித்துள்ளன.
பெருவெடிப்புக்கொள்கையை விளக்க ஐன்ஸ்டீனின் ‘பொதுச் சார்பியல் கொள்கை’ மற்றும் வெர்னர் ஹைசன்பெர்க்கின் ‘ஐயப்பாட்டுக்கொள்கை’ இரண்டையும் எடுத்துக்கொள்கிறார். இரண்டு கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்படக்கூடியவை. பொதுச் சார்பியல் கொள்கையின்படி, காலமும் வெளியும் அறுதியானவை அல்ல. மாறாக பிரபஞ்சத்தில் இருக்கும் பருப்பொருள் மற்றும் ஆற்றலால் அவை வடிவமைக்கப்பட்டன. பிரபஞ்சத்திற்கு உள்ளாகவே அவை வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, பிரபஞ்சத்தின் துவக்கத்துக்கு முன்னர் காலம் ஒன்று இருந்திருக்க முடியாது.
ஒற்றைப் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் உருவாகியிருந்தால், ஐன்ஸ்டீனின் ‘பொதுச் சார்பியல் கொள்கை’ அங்கே வேலை செய்யாது. ஒவ்வொரு துகளுக்கும் தீர்மானமான இடமும் வேகமும் உண்டு என்று அது அனுமானித்தது. ஆனால் நட்சத்திரங்களும், விண்மீன் மண்டலங்களும் பிரபஞ்சம் முழுதும் ஒரே சமமாகப் பரவியிருக்கவில்லை. பிரபஞ்சத்தில் நிறைய வெற்றிடங்களும் இருக்கின்றன. இந்த முரண்பாட்டை விளக்க வெர்னர் ஹைசன்பெர்க்கின் ஐயப்பாட்டுக்கொள்கை உதவுகிறது. அக்கொள்கையின்படி துகள்களின் இடத்தை துல்லியமாகக் கணிக்க முற்பட்டால் அதன் வேகத்தை நம்மால் கணக்கிட முடியாது. குவாண்டம் துகள்களும் அவற்றின் பண்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. எனவே பெருவெடிப்பின் துவக்கத்திற்குப் பிறகு, பிரபஞ்சத்தின் தற்போதைய நிலையை அடைய பொது சார்பியல் கொள்கையும், அதன் போதாமைகளை நிரப்ப ஐயப்பாட்டுக்கொள்கையும் உதவுகின்றன.
அறிவான உயிரினங்கள் இப்பிரபஞ்சத்தில் இருந்திருக்காதா?
உயிரினங்கள் தோன்றி செழிப்பான வளர்வதற்கான பல்வேறு காரணிகள் இப்பிரபஞ்சத்தில் விரவியிருக்கின்றன. ஆனால், அவை பிரபஞ்சத்தின் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, கோடிக்கணக்கான வருடங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து அறிவார்ந்த உயிரினங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் அரிதாகத்தான் அமைகின்றன. நாம் வாழும் பால்வெளி அண்டத்திலேயே நிறைய நட்சத்திரங்களுக்கு புவியின் தட்பவெப்ப நிலையை ஒத்த கோள்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் உயிரினங்கள் உருவாகியிருக்கவும் கூடும். ஆனால் ஒரு அறிவார்ந்த சமூகமாக அவை வளர்வதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றன.
அப்படியே நம்மைவிட அறிவார்ந்த உயிரினங்கள் இப்பிரபஞ்சத்தில் உருவாகி வளர்ந்திருந்தாலும், அவர்களின் அறிவியல் வளர்ச்சியில் இந்நேரம் அவர்கள் நம்மைக்கண்டுபிடிக்க முடிந்திருக்க வேண்டும். இதுவரை அது நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. நாம் சில தகவல்களை நீண்டதூரம் பயணிக்கும் மின்காந்த அலைகளாக மாற்றி இப்பிரபஞ்சத்தில் பரவ விட்டிருக்கிறோம். ஒருவேளை நம்மைப்போன்ற அறிவார்ந்த உயிரினங்கள் இப்பிரபஞ்சத்தில் இருந்தால், அவர்களால் அந்த அலைகளை கிரகித்து, நமக்கு பதிலளிக்க முடியும். இதுவரை எந்த பதிலும் நம்மை வந்தடையவில்லை. நாம் அனுப்பியுள்ள தொலைநோக்கிகளும் இதுவரை வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இதுவரை கண்டடையவில்லை.
ஒருவேளை அவர்கள் நம்மைவிட அறிவார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், நம்மைக் கண்டடைந்து நம்மிடம் நட்புறவாட வாய்ப்பு மிகக்குறைவாகவே. அவர்கள் நம்மை அழித்து ஒழிக்கவே வாய்ப்பு அதிகம். நாம் இதுவரை அத்தருணங்களைச் சந்திக்கவில்லை என்பதே அவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதையே காட்டுகிறது.
எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
நாம் தற்போதிருக்கும் நிலையை வைத்துக்கொண்டு, சென்றகாலத்தின் தகவல்களுடன் ஒப்பிடுகையில் நமது பயணம் எப்படி இருந்தது என்பதை கணிக்க முடியும். இதே விதையை நம் எதிர்காலத்துக்கும் போட்டுப்பார்த்தால் அது நம்மால் எதிர்காலத்தில் என்ன நிகழவிருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்திட முடியும் என்ற முடிவுக்கு வரமுடியும். ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு பட்டாம்பூச்சி படபடத்தால், அதனால் வானியலில் ஏற்படும் மாற்றம், நியூயார்க் நகரில் மழையை வரவழைக்கலாம். ஆனால் அதே பட்டாம்பூச்சி அதேயிடத்தில், வேரொரு நாளில் படபடத்தால், அதே விளைவுகளைக் கொண்டுவருமா என்றால், அது சாத்தியமில்லை. பல்வேறு காரணிகள் மாறியிருப்பதால், நம்மால் அதே விளைவை உருவாக்க முடியாது.
இயற்பியல் கோட்பாடுகளிலும் ஒருங்கின்மை அம்சம் என்கிற காரணி முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அம்சத்தை விளக்க மேக்ஸ் ப்ளாங்க், குவாண்டம் கோட்பாட்டை முன்வைத்தார். ஒரு சூடான பருப்பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றல், ஒரே சீராக வெளிப்படுவதில்லை. மாறாக, அவை சில ஒழுங்கின்மைக் காரணிகளைக் கொண்டுள்ளன. குவாண்டம் கோட்பாடு மற்றும் ஐயப்பாட்டுக்கொள்கைகளின்படி, நம்மால் எதிர்காலத்தைக் கணக்கிடக் கோட்பாட்டு அளவில் முடிந்தாலும், நடைமுறையில் எளிதாக முடியாது. எதிர்காலத்தைக் கணக்கிடுவதில் கடவுளுமே வெறும் பகடையைத்தான் உருட்டிக்கொண்டிருக்கிறார் என்று நிரூபிக்கின்றன இவ்விரு கோட்பாடுகளும்.
kuku.fm
இந்த வலைதளத்தில் ஒரு ஆண்டுக்கு சந்தா கட்டிவிட்டு எதையும் உறுப்படியாக வாசிக்கவில்லை என்று யோசித்துக்கொண்டே வலைதளத்துக்குள் உலாவினேன். கண்ணில் சிக்கிய ஒருசில புத்தகங்களில் இதை முயற்சித்து பார்க்கலாம் என்று பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பு துருத்திக்கொண்டு தெரியாமல், இயல்பான வாசிப்புக்கு நம்மை இட்டுச்செல்கிறது. ஒலி வடிவ வாசிப்பில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தாலும், வாசித்தவர் சிரத்தை எடுத்து நல்ல வாசிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இந்த வளைதளத்தில் தரமான தமிழ் புத்தகங்கள் அறிதானாலும், இந்த புத்தகத்தை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். இவர்கள் தீவிர வாசகர்களுக்குப் பதிலாக, பொதுவாசிப்புக்குத் தேவையான சில புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வைத்திருக்கிறார்கள். மற்ற மொழிப் புத்தகங்களை நான் அலசிப்பார்க்கவில்லை. ஒலி வடிவில் வாசிக்க விரும்பும் தீவிர வாசகர்களுக்கு Audibleல் விலை கூட இருந்தாலும் சில நல்ல தொகுப்புகளை வழங்குகிறார்கள்.