யதி தத்துவத்தில் கனிதல் - புத்தக வாசிப்பனுபவம்
செய்திகளின் வழியாக வந்துசேரும் வெவ்வேறு வகையான சாமியார்களைப் பற்றிய ஊதிப் பெரிதாக்கப்பட்ட தேவையற்ற விஷயங்களைத்தாண்டி, துரவு வாழ்வில் உள்ள சாத்தியங்களை அறிந்துகொள்ள விரும்பி இப்புத்தகத்தை எடுத்தேன். இப்புத்தகம் குரு நித்யாவையும், தத்துவம், இலக்கியம், ஓவியம், இசை, இயற்கை, இந்திய ஞானம், அரசியல் என்று அவரின் பரந்துபட்ட ஆளுமையையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.
எனக்கு குரு நித்யாவின் அறிமுகம்
ஆசிரியர் ஜெ நடத்திய காவிய முகாம்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு, ஊட்டி ஃபெர்ன் ஹில்ஸில் அமைந்திருக்கும் நாராயண குருகுலத்தில் நடைபெற்று வந்தன. அதில் 2018 மற்றும் 19ல் கலந்துகொண்டிருக்கிறேன். குருகுலத்தில்தான் குரு நித்யாவின் சமாதி அமைந்திருக்கிறது. முகாமின்போது மூன்று நாட்களும் குருகுலத்திலேயே தங்க வேண்டும். உணவு, மது, போன்றவற்றுக்கு தீவிரமான கட்டுப்பாடுகள் உண்டென்று அறிவித்திருந்தார்கள். நான் எதிர்பார்த்ததெல்லாம், அங்கே நிறையச் சாமியார்கள் இருக்கக்கூடும், மந்திர உபதேசம், பேய் ஓட்டுதல், பொதுமக்களுக்கு ஆசி வழங்குதல், வகைவகையான யோகா பயிற்சி என்றுதான். ஆனால், அங்கே என் அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது, துறவிகளில் சிலர் காவி உடை அணிந்திருந்ததைத் தவிர.
முதலில் என்னைக் கவர்ந்தது, அரங்கில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பெரும் ஆளுமைகளின் புகைப்படங்கள் மற்றும் பெரிய நூலகம். புகைப்படங்களில் புகழ்பெற்ற அறிவியல் மேதைகள், தத்துவ அறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் ஆளுமைகள் என்று குருவுக்குப் பிடித்தமான ஆளுமைகள் இருந்தார்கள். காந்தி, தஸ்தாயெவெ்ஸ்கி, நியூட்டன், ப்ளேட்டோ, யேசு கிறிஸ்து என்று ஒருசில ஆளுமைகளை என்னால் அடையாளம் காணமுடிந்தது. நூலகத்தில் பெரும்பாலான புத்தகங்கள் கவிதை மற்றும் தத்துவம் சார்ந்தவை.
மூன்றுநாட்கள் முதன்முறையாகக் குருகுலத்தில் தங்கிய அனுபவம் பரவசமூட்டியது. அதில் கலந்துகொண்ட பின்பே என்னைத் தீவிர இலக்கிய வாசகனாக மாற்றிக்கொண்டேன். நாராயண குரு, நடராஜ குரு, குரு நித்யா, வியாசப் பிரசாத், குரு முனி நாராயண பிரசாத் என்ற அறுபடாத தொடர்ச்சியைப் பற்றியும், உலகிற்கு அவர்களின் பங்களிப்பைப்பற்றியும் சிறிய அறிமுகம் ஆசிரியர் ஜெ வழியாகக் கிடைத்திருந்தது. குரு நித்யாவை இன்னும் விரிவான தளத்தில் அறிந்துகொள்ள விரும்பி இப்புத்தகத்தை வாங்கியிருந்தேன். சமீபத்தில் கீதையைப் பற்றி இணையத்தில் துழாவப்போய் இப்புத்தகத்தைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். இப்புத்தகம் துறவு வாழ்வு, தத்துவம், இலக்கியம், கவிதை, ஓவியம், இயற்கை என்று குரு நித்யாவின் ஆளுமையை நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. ஒரு புனைவை வாசிக்கும் அளவுக்கு இப்புத்தக வாசிப்பு அமைந்திருந்தது.
புத்தக வாசிப்பு
துறவிகளின் நாடான இந்தியாவிலேயே, சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு வெளியே அசாதாரண துறவு வாழ்வு அமைத்துக்கொள்வது அனைவருக்கும் சாத்தியப்படாது. அத்தகைய வாழ்க்கையை விரும்பி ஏற்று அதில் தம் இலக்கை அடைந்தவர்கள் மிகக்குறைந்தவர்களே. அதில், நித்யா குறிப்பிடத் தகுந்த ஆளுமையாகத் திகழ்கிறார். இளம் வயதிலேயே அவர் துரவு வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். பிறப்பு, பால்யக் கல்வி, இட மாற்றம், துறவில் விருப்பம், சென்னையில் ஆசிரிய வாழ்க்கை, மும்பையில் மனோதத்துவம் கற்றல், குருகுல வாழ்க்கை, வெளிநாட்டுப் பயணம் என்று குருநித்யாவின் வாழ்க்கையில் சில அரிய தருணங்கள் புத்தகத்தில் அனுபவப் பதிவுகளாகக் கிடைக்கின்றன. நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.
நடராஜ குரு
இப்புத்தகத்தில் நான் மிகவும் இரசித்து மீண்டும் வாசித்த பகுதிகள் நித்யாவுக்கும் நடராஜகுருவுக்குமான குரு சிஷ்ய உரவுதான். நித்யாவுக்கு நடராஜ குருவின் அறிமுகம் மிகச் சுவாரசியமானது. பள்ளிப்பருவத்தில் ஒரு நாளிதழில் வெளியான நாராயனகுருவின் புகைப்படத்தை, பார்ப்பதற்கு நன்றாக இருப்பதால் வெட்டி எடுத்துத் தன் புத்தகத்தில் ஒட்டிவைக்கிறார்.
கல்லூரி நாட்களில் தத்துவம் அறிந்துகொள்வதற்காகச் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் புகழ்பெற்ற ‘Indian Philosophy’ என்ற புத்தகத்தை வாங்கி கையில் வைத்துக்கொண்டு, கல்லூரி விழாவில் பங்கேற்க வரும் நடராஜகுருவைச் சந்திக்கிறார். அவருடன் ஒரு கார் பயண வாய்ப்பு அமைகிறது. நடராஜகுரு நித்யாவின் கையிலிருக்கும் புத்தகத்தைப் பற்றிக் கேட்கிறார். இவர் அப்புத்தகத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதை வாங்கி காருக்கு வெளியே சாலையில் வீசிவிடுகிறார் குரு. அதிர்ச்சி அடைந்த நித்யாவிற்கு குரு அதற்கான காரணத்தை விளக்குகிறார். நித்யாவுக்கு நடராஜகுருவை மிகப் பிடித்துப்போக அவரைத் தொடர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார்.
நடராஜகுரு ஒரு முன்கோபி. அவரைச் சமாளிப்பதற்காக நித்யா பயன்படுத்தும் உத்திகள் சுவாரசியமானவை. ஜெ அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்றுண்டு. நம் ஆளுமையை முழுவதுமாகக் கலைத்துப்போட்டு, அலையவிட்டு, மீட்டுருவாக்கம் ஒரு ஆளுமை நல்ல குருவாக இருக்க முடியாது. நித்யாவுக்கு அப்படி அமைந்தவர் நடராஜகுரு. நி்த்யாவின் ஆளுமையைச் சீண்டிவிட்டு, அவரை வேரொரு தளத்திற்கு உயர்த்திக் கொண்டுசெல்கிறார் குரு. குருவுடன் நித்யா கோபித்துக்கொண்டு குருகுலத்தைவிட்டு வெளியேறுவதும், பிறகு வெகுசில நாட்களிலேயே மீண்டும் வந்து சேர்வதும், அதை நடராஜகுரு எதிர்கொள்ளும் விதமும் வாசிக்கையில் நமக்குள் ஒரு ஏக்கத்தை வரவைக்கிறது.
ஜெ சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது. எப்படியொரு சீடன் தனக்கான குருவைத் தேடுகிறாரோ, அதேபோல குருவும் தனக்கான சீடனைத் தேடிக்கொண்டே இருக்கிறார். இரண்டுமே சரியாக அமைவது எளிதல்ல. நடராஜ குருவும் நித்யாவை தேடி பின்தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறார். நித்யாவின் கல்லூரி நாட்களிலிருந்தே அவரைப் பின்தொடர்ந்து, வழிகாட்டி, சரியான வகையில் மீட்டெடுத்து உலகுக்குப் படைக்கிறார் குரு.
தத்துவம்
குரு நித்யாவின் தத்துவப்பார்வையை முழுமையாக அறிய அவரின் புத்தங்கள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. இப்புத்தகத்தில் குருவின் முக்கியமான சில தத்துவக் கட்டுரைகள் எளிமையான அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மரணம்பற்றிய ஒரு கட்டுரை என்னை மிகவும் பாதித்த ஒன்று. கட்டுரைகள் செறிவாகவும் அதேசமயம் என்னைப் போன்ற எளிய வாசகர்களும் தடையின்றி வாசிக்கும் வகையிலும் சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. மொழிபெயர்த்த ஆளுமைகளின் நேர்த்தி அதில் வெளிப்படுகிறது. குறிப்பாக ஜெ மொழிபெயர்த்த பகுதிகளைச் சொல்ல வேண்டும். இவ்வனுபவம் ஒருவேளை அவரையே நான் சமீப காலமாக வாசித்து வருவதால் இருக்கலாம்.
கலை
ஜெ குருநித்யாவை கலைஞன் என்றே நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். குரு நித்யா தத்துவம், அறிவியலுக்கு இணையாகவே கலையையும் விரும்பியிருக்கிறார். புத்தகம் முழுவதும் அவர் விரும்பிய ஓவியம், இசை, புதினங்கள், கவிதை என்று நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். குருவின் கடைசி நாட்களிலும் அவர் விரும்பியது வீணை இசை பயில்வதுதான். இணையத்தில் புகழ்பெற்ற அவரது ஒரு புகைப்படம் குருகுலத்தில் புல்லாங்குழல் வாசிக்கும்போது எடுக்கப்பட்டதுதான். தனக்குப் பிடித்த ஓவியங்களைத் தொகுத்து வைத்திருக்கிறார். தனது குருகுலத்தில், ஒரு பூந்தோட்டத்தை வைத்துத் தினசரி பராமரித்துக்கொண்டு வந்திருக்கிறார். கூழாங்கற்களைச் சேகரித்து வைத்துக்கொள்வது, பிடித்தவர்களுக்கும், தம்மைப் பார்க்க வருபவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதும் அவரின் விருப்பமான ஒன்று.
இறுதியாக
துறவு வாழ்க்கையில் அடையக்கூடிய சாத்தியங்களைத் தொட்டுப்பார்த்த ஆளுமைகள் மிக அரிதானவர்கள். குரு நித்யாவை அணுகி அறிவதற்கு இப்புத்தகம் பயனுள்ளது. ஒரு நல்ல நாவலாகவே வாசிக்கும் அளவுக்குச் செறிவான சுவாரசியமான ஒரு புத்தகமாக அமைந்துள்ளது. பல்வேறு ஆளுமைகள் இப்புத்தக உருவாக்கத்துக்கு தங்களின் மொழிபெயர்ப்புமூலம் பங்களித்துள்ளார்கள். அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.