கரமசோவ் சகோதரர்கள் - புத்தக வாசிப்பனுபவம்
சமகாலப் படைப்புகளைப்போல் அல்லாமல், செவ்வியல் படைப்புகளை வாசிக்கும் அனுபவம் வாசகரை அடுத்தகட்டதுக்கு நகர்த்தும். இப்படைப்பு நம்மிடம் எதிர்பார்க்கும் நேரமும் தன்முனைப்பும், கிடைக்கும் வாசிப்பு அனுபவத்திற்காக நிச்சயம் செலவழிக்கத்தக்கது. கிட்டத்தட்ட இரண்டு வாரத்தில் இந்நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். இப்பதிவில் எனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
செவ்வியல் படைப்புகளுக்காக எனது வாசிப்பு முறை:
செவ்வியல் படைப்புகளை வாசிப்பதற்கு, வாசகராக நமக்கு முன் தயாரிப்பு அவசியம். மற்ற சமகால நாவல்களைப்போல இவற்றை அணுகும்போது இவை வழங்கும் அனுபவத்தை முழுவதுமாக பெற இயலாமல் போகலாம். முன் தயாரிப்பு என்பதை இப்படித் தொகுத்துக்கொள்கிறேன்.
வாசிப்பதற்கு முன்:
- எக்காரணம் கொண்டும் நாவல் ஆரம்பித்து முதல் நூறு பக்கங்களைத் தாண்டாமல், புத்தகத்தைக் கீழே வைக்கக் கூடாது.
- சீரான கதையோட்டத்தை எதிர்பார்க்காமல், நாவல் செல்லும் வழியில் முழு ஈடுபாட்டுடன் பயணிக்கவேண்டும்.
- கதையோட்டத்தின் ஊடாக வரும் தீவிரமான தத்துவ விவாதங்களை முடிந்தவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும்.
- முதல் வாசிப்பிலேயே நமக்கு எல்லாமும் கிட்டிவிடவேண்டும் என எதிர்பார்க்காமல் வாசித்து முடிக்கவேண்டும்.
- படைப்பை முழுவதும் வாசித்து முடிப்பதற்குள், இடையில் வேறு எதையும் தொடாமல் இருப்பது நல்லது.
- ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கும்போதும், இதுவரை வாசித்தவற்றை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும்.
- ஆசிரியரைப்பற்றியும் அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றியும், வாழ்ந்த நிலப்பரப்பு, காலம், அரசியல், சமூகம் பற்றி சுருக்கமாகவேனும் அறிந்திருப்பது நல்லது.
வாசித்த பின்பு:
- செவ்வியல் படைப்புகள் நெல்லிக்கனியைப்போல. வாசித்த பிறகே நமக்குள் வளர ஆரம்பிக்கும். வாசித்து முடித்து குறைந்தது ஒன்றிரண்டு வாரங்களுக்கு வேறு எதையும் தொடாமல், கிடைக்கும் நேரத்தில் படைப்பை அசைபோட்டுக்கொள்வது நல்லது.
- முக்கிய வாசகர் மற்றும் படைப்பாளிகளின் மதிப்புரைகளையும், விமர்சனங்களையும் இணையத்தில் வாசிப்பது நல்லது.
- குழுவாக வாசித்தால், தனது வாசிப்பை பரிமாறிக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்.
- ஒரு வாசிப்பனுபவத்தை எழுதிப் பார்ப்பது நமது வாசிப்பைத் தொகுத்துக்கொள்ள உதவும்.
முக்கிய கதை மாந்தர்கள்:
அன்பு, கடமை, நீதியுணர்வு, மற்றும் சமுதாயமும் மதமும் வகுத்துள்ள நற்பண்புகளை, மனிதனைக் கட்டுப்படுத்தும் 1-100 அலகு கொண்ட வெவ்வேறு பொடென்சியோ மீட்டர்களில் எடுத்துக்கொள்வோம்.
முக்கிய கதை மாந்தர்களாக வரும் குடும்பத்தந்தை பியோதர் பாவ்லோவிச் கரமசோவ், அவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் திமித்ரி, அவரால் முறையற்ற வகையில் சீரழிக்கப்பட்ட பிச்சைக்கார ஏழைப்பெண் லிசவேத்தாவுக்குப் பிறந்த மகன் ஸ்மெட்டியாகோவ், இரண்டாம் மனைவிக்குப் பிறந்த இவான் மற்றும் அல்யோஷா ஆகியோரை முறைப்படி குறைந்த அளவீடுகளிலிருந்து அதிகத்துக்கு வரிசைப்படுத்திவிட முடியும்.
குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து, அல்யோஷாவின் ஆசிரியராகவும் வழிநடத்துபவராக வரும் மடாலயத் துறவி பாதர் ஜோஷிமா, திமித்ரி மற்றும் இவானின் காதலியாக வரும் காத்ரினா, திமித்ரி மற்றும் தந்தை கரமசோவை காதலில் அலைக்கழிக்கும் குருசென்கா, குருசென்காவின் தூரத்துச் சகோதரனாக வரும் ரகிதின், தந்தை கரமசோவின் வீட்டு மூத்த வேலைக்காரனாக வரும் கிரிகோரி, திமித்ரியால் அவமானப்படுத்தப்பட்டவரின் மகனாக வரும் ஏழைக்குழந்தை இல்யூஷா, அல்யோஷாவை காதலிக்கும் லிசா மற்றும் அவளின் தாய் கோகலோவ் அம்மையார் ஆகியோர் கதையினூடாக ஊடுருவிச் செல்கிறார்கள்.
கதை மிகச்சுருக்கமாக:
தந்தை கரமசோவ் மேற்கண்ட நற்பண்புகளில் நம்பிக்கையில்லாதவர். விண்ணிலுள்ள சொர்கத்தையோ நரகத்தையோ பற்றிக் கவலையுறாமல், மண்ணிலேயே தான் விரும்பியபடி வாழ்ந்து முடிக்கும் ஆர்வம் கொண்டவர், அதற்காக எதையும் செய்யக்கூடியவர். தன்நலமே உருவானவர். எந்த சுயகட்டுப்பாடுமின்றி எவ்வகையிலேனும் சொத்துக்களைச் சேர்க்கிறார். பணத்துக்காக ஆசைப்பட்டு முதல் மனைவியைத் திருமணம் செய்து பிறகு அவளை விரட்டியடித்துவிடுகிறார். அவர்களுக்குப் பிறந்த மகன்தான் திமித்ரி. தனக்குப் பிறந்த பிள்ளைகளையும் கண்டுகொள்ளாத தந்தை. திமித்ரி வீட்டு வேலைக்காரரான கிரிகோரியால் வளர்க்கப்படுகிறான். வளர்ந்தவன் இராணுவத்தில் சைபீரியாவில் சிறிதுகாலம் வேலைசெய்துவிட்டு ஊர் திரும்பி தந்தையிடம் தனது தாய் இழந்த சொத்துக்காகச் சண்டையிடுகிறான். அவனுக்கு குறைந்த அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரங்களில் கையெழுத்து வாங்கிவிட்டுத் துரத்திவிடுகிறார் தந்தை.
முதல் மனைவி வீட்டைவிட்டு ஓடிப்போய் இறந்துவிட்ட பிறகு, அழகில் மயங்கி இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்துகொள்கிறார் தந்தை கரமசோவ். அவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறக்கிறார்கள், இவான் மற்றும் அல்யோஷா. கரமசோவின் கொடுமை தாங்காமல் இரண்டாவது மனைவியும் இறந்துபோகிறாள். குழந்தைகள் இருவரும் தந்தையால் வளர்க்கப்படாமல், தாயின் உறவினர் வீட்டில் வைத்து வளர்க்கப்படுகிறார்கள். குழந்தைப்பருவத்தைக் கடந்ததும், இவான் மாஸ்கோவில் மேற்படிப்புக்கும் வேலைக்கும் சென்றுவிடுகிறான். அல்யோஷா ஊர்திரும்பி தந்தையின் வீட்டில் தங்காமல் அருகிலிருக்கும் மடாலயத்தில் சேர்ந்துகொள்கிறான். மடாலயத்தின் மூத்த துறவி பாதர் ஜோஷிமாவின் மாணவனாக வழிநடத்தப்படுகிறான்.
இதற்கிடையில் தந்தை கரமசோவால் சீரழிக்கப்பட்ட லிசவேத்தா அவரின் வீட்டின் அருகிலேயே பிரசவிக்கும்போது இறந்துவிடுகிறாள். பிறந்த குழந்தை ஸ்மெர்ட்டியாகோவ் வீட்டு வேலைக்காரர் கிரிகோரியால் வளர்க்கப்பட்டு வெளியூர் சென்று சமையல் கலை கற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறான். ஒருமுறை அவன் சமைத்த உணவு தந்தை கரமசோவுக்கு பிடித்துப்போக, அதே வீட்டில் சமையல்காரனாக அவனை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார்.
தந்தை கரமசோவிற்கும் முதல் மகன் திமித்ரிக்கும் சண்டை வெடிக்கிறது. அதைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் பாதர் ஜோஷிமாவைச் சந்திக்க அல்யோஷா ஏற்பாடு செய்கிறான். அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் சண்டை மேலும் வலுக்கொள்கிறது. பிரச்சனையைச் சரிசெய்ய அல்யோஷா எடுக்கும் தொடர் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இதற்கிடையில் திமித்ரியை காத்ரினா காதலிக்கிறாள். அதற்கொரு பின்புலமும் கதையில் சொல்லப்படுகிறது. திமித்ரி அவளிடம் பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு திரும்பச் செலுத்தாமல் இருக்கிறான். காத்ரினாவுக்கு அது பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், சிறிதுகாலத்தில் அவன் காத்ரினாவை விட்டு ஊரில் பணத்துக்காக தனது வலைக்குள் இழுக்கும் குருசென்காவின் பின்னால் வெறிபிடித்தபடி அலைய ஆரம்பிக்கிறான். அவளுடன் ஊர்சுற்றி கையிலிருக்கும் பணத்தை இழந்து அலைக்கழிகிறான். காத்ரினாவுக்கு இது எரிச்சலை உண்டாக்குகிறது. குருசென்காவிடன் சமாதானம் பேசி திமித்ரியை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறாள். ஆனால் குருசென்கா அதனைத் தட்டிக்கழித்துவிடுகிறாள். அதே சமயம் குருசென்காவின்மீது தந்தை கரமசோவும் கண்வைக்கிறார். இதனால் தந்தை மகன் இருவருக்குமான பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டுகிறது. குருசென்காவுக்கும் ஒரு கதைப்பின்புலம் சொல்லப்படுகிறது.
மாஸ்கோவிலிருந்த இவான் ஊர் திரும்புகிறான். சிறிதுகாலம் தந்தையின் வீட்டில் தங்கி அங்கே நடப்பதை கவனிக்கிறான். அவனுக்கும் தந்தையின் நடத்தையில் வெறுப்புதான். அவனுக்கு தனது மூத்த சகோதரன் திமித்ரியையும் பிடிக்கவில்லை. இவான் காத்ரினாவைச் சந்தித்து தனது காதலை வெளிப்படுத்துகிறான். முதலில் அதனை காத்ரினா ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் அண்ணன் திமித்ரியுடன் காதலில் இருப்பதாகச் சொல்லிவிடுகிறாள். கோபத்தில் ஊரைவிட்டு மீண்டும் மாஸ்கோவுக்கே கிளம்ப முடிவெடுக்கிறான் இவான். இதற்கிடையில் தந்தை தனது அண்ணன் திமித்ரியால் கொல்லப்படலாம் என்று வீட்டுச் சமையல்காரன் ஸ்மெர்ட்டியாகோவ் மூலம் அவனுக்குத் தெரியவருகிறது. ஆனாலும் அவன் கிளம்ப முடிவெடுக்கிறான்.
இவான் ஊரில் இல்லாத சமயம், திமித்ரி பணத்துக்காக அலைக்கழிந்துகொண்டிருக்கிறான். தனக்கு கிடைக்கவேண்டிய சொத்தை தந்தையிடமிருந்து பெற முடியாவிட்டால், கொல்லவும் துணிவதாகச் சொல்லிக்கொண்டு திரிகிறான். இதற்கிடையில் குருசென்காவுக்கு அவளின் முன்னாள் கணவனிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் அவனுடைய மனைவி இறந்துவிட்டதாகவும், அதனால் போலந்திலிருந்து ஊர்திரும்புவதாகவும், இவளுடன் திருந்தி வாழ விரும்புவதாகவும் சொல்கிறான். அதை நம்பி இவள் அவனைச் சந்திக்க யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டுக் கிளம்புகிறாள். அவளைப்பார்க்க வீட்டுக்கு வந்த திமித்ரி அவள் இல்லாததால், தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டிருப்பாள் என்று நினைத்து அங்கே கோபத்துடன் செல்கிறான். அங்கே தந்தை மட்டும் இருப்பதைப் பார்த்துத் திரும்பும்போது தன்னை வளர்த்த வேலைக்காரர் கிரிகோரியைக் காயப்படுத்திவிட்டுத் திரும்பிவிடுகிறான். வந்து குருசென்காவின் வீட்டில் அவள் ஊருக்கு வெளியே தனது முன்னாள் காதலனைச் சந்திக்க சென்றிருப்பதைத் தெரிந்துகொண்டு அங்கே சென்றுவிடுகிறான்.
அங்கே அவனை காவல்துறை கைதுசெய்து தந்தை கரமசோவைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டுகிறது. விசாரணையில் அவன் தனது தந்தையைக் கொலைசெய்யவில்லை என்று வாக்குமூலம் அளிக்கிறான். ஆனால், எல்லா சாட்சிகளும் அவனுக்கு எதிராகவே உள்ளன. வழக்கு விசாரணை நடைபெறுகிறது. தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டு இவான் ஊர் திரும்பி தனியாக விசாரிக்க ஆரம்பிக்கிறான். பல்வேறுக்கட்ட விசாரணையில் சமையல்காரன் ஸ்மெர்ட்டியாகோவ்தான் கொலைசெய்ததாக இவான் தெரிந்துகொள்கிறான். அதற்குள் ஸ்மெர்ட்டியாகோவ் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறான். இவான் தனது மூத்த அண்ணனைக் காப்பாற்ற வாக்குமூலம் அளிக்கிறான். ஆனாலும் திமித்ரிக்கு கடுங்காவல் தண்டனையுடன் சைபீரியாவிற்கு நாடுகடத்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு விடுகிறது.
பாதர் ஜோஷிமா:
அல்யோஷாவின் வழிநடத்தியாக வரும் பாதர் ஜோஷிமா தனது முதிர்ந்த வயதில் மடாலயத்தை நடத்துகிறார். அவர் பல அற்புதங்களைச் செய்வதாக ஊர் முழுக்க பேசிக்கொள்கிறார்கள். ஊர் முழுக்க அவருக்கு பெரும் மதிப்பு இருந்தாலும், மடத்திற்குள் அவரை வெறுப்பவர்களும் இருக்கவே செய்கிறார். நாவலில் இவர் வரும் பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தந்தை கரமசோவுக்கும் மகன் திமித்ரிக்கும் இடையில் பஞ்சாயத்து செய்ய முயற்சி எடுக்கும்போதே இவரின் எளிய வாழ்க்கைமுறை, கிருத்துவ மடங்களில் இருக்கும் சீரழிவு, அவற்றை இவர் எதிர்க்கும் முறை, மதத்தை இவர் அணுகும் விதம், பாவச் செயல்களில் ஈடுபட்ட பொதுமக்களை இவர் நடத்தும் விதம் என்று ஒரு கழுகுப்பார்வையை நமக்கு ஆசிரியர் அளித்துவிடுகிறார்.
தனது இறக்கும் தறுவாயில் இவர் வெவ்வேறு நாட்களில் மூன்று பிரசங்கங்களை வழங்குகிறார். அந்த பிரசங்கங்கள் நாவலுக்குள் ஆசிரியரின் குரலாகவே துருத்திக்கொண்டு ஒலித்தாலும், முன்பு குறிப்பிட்டதைப்போல இவற்றின் முக்கியத்துவம் கருதி அதனை முழுவதுமாக வாசிப்பது அவசியம். கிருத்துவ மடம் செயல்படும் விதம், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்த எவ்வாறு விலகிச் சீரழிந்துகொண்டிருக்கின்றன, பாவம் செய்த மக்களின் மீதும் அன்பு செலுத்துவதன் அவசியம், நவீனக் காலத்தில் முளைத்தெழுந்துவரும் சில கொள்கைகளை தனது மதத்தின்மூலம் எதிர்கொள்வது, அவற்றின் முக்கியனான விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்று பல்வேறு தளங்களைத் தொட்டுச் செல்கிறது இந்த உரைகள்.
அவர் இறப்பதற்கு சற்றுமுன் தனது கடந்தகாலம் பற்றியும் விரிவாக உரையாற்றுகிறார். அதில் தான் இளமையில் எப்படி மதத்தைப் பின்பற்றியதாகவும், தனது அண்ணன் நாத்திகத்தைப் பின்பற்றி நோயுண்டு இறந்ததையும், அதைத்தொடர்ந்து தானும் மதநம்பிக்கையை விட்டு தீய பழக்கங்களை இராணுவத்தில் கற்றுக்கொண்டு கொடிய செயல்களில் ஈடுபட்டதையும், தனது இராணுவ வாழ்வின் திருப்புமுனையில் தன்னை மீட்டுக்கொண்டு துறவு வாழ்க்கையை எடுத்துக்கொண்டதாகவும் நீண்ட உரையை ஆற்றியிருக்கிறார். அதேபோல சில பைபிள் கதைகளையும் எடுத்துரைக்கிறார்.
அவர் இறந்தபிறகு நடந்தவற்றையும் விரிவாகவே பதிவுசெய்கிறார். அவர் இறந்தால் ஏதோ அதிசய நிகழ்வு ஏற்படும் என்றும், புனிதர்களின் சடலங்களிலிருந்து பிணவாடை வீசாது என்று ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் பொதுமக்களிடம் உலவிக்கொண்டிருந்ததையும், அது எதுவும் இவர் விஷயத்தில் நடக்காததையும், அதை எப்படி பொதுமக்களும் மடத்திற்குள் இருந்தவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் விரிவாகவே தனது உளவியல் நிபுணத்துடன் அலசுகிறார். கதைக்குள் இவை முழுக்க சேராவிட்டாலும், நாவலின் முக்கியமான தரிசனத்தை நமக்குத் திறந்துவைக்கிறது.
அல்யோஷா:
கிட்டத்தட்ட ஒரு மனிதனின் புனித வடிவமாகவே அல்யோஷா உலவுகிறான். நாவலின் எல்லா முக்கியத் தருணங்களுமே அல்யோஷாவின் முன்னிலையிலேயே நடைபெறுகின்றன. ஆசிரியர் சூழ்நிலைகளில் ஏற்படும் அற மற்றும் தத்துவக்கேள்விகளை எதிர்கொள்ள அல்யோஷாவைப் பயன்படுத்தியுள்ளார். முதலில் மடத்தில் மாணவனாகச் சேர்ந்துகொள்ளும் அவன், பாதர் ஜொஷிமாவின் அறிவுரையில் படி மடத்தைவிட்டு வெளியேறி தனது குடும்பத்தில் பங்கெடுக்கிறான். எத்தகைய பிரச்சனைகளிலும், அவனால் தனது புனிதத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் பயணிக்க முடிகிறது.
கதைமாந்தர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே அல்யோஷாவின் இருப்பை விரும்புகிறார்கள். அவனுடன் உரையாடவும் அவன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளவும் ஆவலுடன் இருக்கிறார்கள். இதில் தந்தை கரமசோவும் அடக்கம். அவர் நம்பும் ஒரே ஜீவன் அல்யோஷா மட்டுமே. மற்ற மகன்களைப்போல் அன்றி அல்யோஷாவுக்கு தனது தந்தையின் மீடு வெறுப்பு ஏற்படவில்லை. கதையினூடாக ஓரிடத்தில் அவனுடைய மனோதிடம் சோதித்துப்பார்க்கப் பட்டுள்ளது. பாதர் ஜோஷிமா இறந்ததற்குப் பிறகு நடந்த பிரச்சனைகள் அல்யோஷாவை மிகவும் பாதித்துவிடுகின்றன. அவன் ஒருகட்டத்தில் விரக்தியில் ரகிதினின் அழைப்பின் பேரில், அவன் குருஷென்காவைச் சந்திக்கிறான். அவனை மயக்கும் வகையில் அவன் மடியில் அமர்ந்துகொண்டு ஆசை வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறாள் குருஷென்கா. ஆனால் அவன் அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு தனது மாண்பைத் தக்கவைத்துக்கொள்கிறான். விளைவாக குருஷென்காவே மாறிப்போகிறாள். அவனிடம் தனது பிரச்சனைகளையெல்லாம் கூறி ஒப்பாரி வைக்கும் அளவுக்குச் சென்றுவிடுகிறது அந்த சந்திப்பு.
தனது அண்ணன் திமித்ரியின் தவறால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழைத்தந்தையின் மகன் இல்யூஷாவை ஒரு எதிர்பாராத சமயத்தில் சந்திக்கிறான் அல்யோஷா. பார்த்தவுடன் இல்யூஷா இவன் கையைக் கடித்துவிடுட்டு ஓடிவிடுகிறான். காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி அவனது வீட்டுக்குச் செல்கிறான். அங்கே அவர்கள் வாழும் சூழ்நிலை விரிவாக காட்டப்பட்டுள்ளது. அவர்களைப் பிரச்சனையிலிருந்து வெளிக்கொண்டுவர இல்யூஷாவின் தந்தைக்கு பண உதவி செய்ய முன்வருகிறான் அல்யோஷா.அந்த பண உதவி திமித்ரி காத்ரினாவை காதலித்த சமயத்தில் காத்ரினாவால் வழங்கப்படுகிறது. ஆனால் அவனது தந்தை அதனை ஏற்க முதலில் மறுத்துவிடுகிறார். அல்யோஷா தொடர்ந்து அந்த வீட்டுக்குச் சென்று உதவியும் வருகிறான். இதற்கிடையில் இல்யூஷா நோயுற்று மரணத்தை நெருங்கிவிடுகிறான்.
தனது வளர்ப்பு நாய் காணாமல் போனதற்கு காரணம் தாம்தான் என்று எண்ணி வருந்திக்கொண்டே இருக்கிறான் இல்யூஷா. அதனைச் சரிசெய்ய இல்யூஷாவின் நண்பன் கோல்யாவையும் வீட்டுக்கு வரவழைக்கிறான். அவர்களுக்குள் நட்பு மீண்டும் துளிர்விடுகிறது. இல்யூஷாவின் இறப்பில் அல்யோஷாவும் நண்பர்களும் கலந்துகொள்வதுடன் நாவல் முடிவடைகிறது. மையக் கதையில் இது ஒட்டாமல் வந்தாலும், அல்யோஷா மற்றும் காத்ரினாவின் நற்குணங்களைப்பற்றியும், குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது இதில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
திமித்ரி:
தனது தந்தையை நெருங்கிவரும் அளவுக்கு தறுதலையாகவே சுற்றிக்கொண்டு வந்தாலும், திமித்ரிக்கு ஒருசில நற்குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு அசாதாரண சமயத்தில் அவன் காத்ரினாவிடம் நன்னடத்தையுடன் நடந்துகொண்டது நாவலின் முதலில் வருகிறது. அதனாலேயே திமித்ரியை முடிந்தவரை அவனது இக்கட்டுகளிலிருந்து விடுவிக்க காத்ரினா பாடுபடுகிறாள். ஊதாரித்தனமாகச் சுற்றிக்கொண்டும், குடித்துக்கொண்டும், பெண்களுடன் கட்டுப்பாடின்றி பழகிக்கொண்டும் திரிகிறான் திமித்ரி.
முன்கோபியான இவன் கிட்டத்தட்டக் கொள்கைகள் அற்ற, மிகச் சாதாரணமான அதே சமயம் கடவுள் நம்பிக்கையுடைய, ஒருசில நற்பண்புகளை உடைய, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய நேரடியான மனிதன். தவறுகளைச் செய்துவிட்டு பிறகு வருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான். நாவலில் வரும் தத்துவ விவாதங்களின் பெரும்பாலான இடங்களில் இவன் பங்கெடுக்கவில்லை. மற்றவர்களைப்போல் அல்லாமல், இவனுக்குக் கடவுளின்மீது நம்பிக்கை இருக்கிறது. தனது பாவங்களுக்காகத் தான் தண்டிக்கப்படக்கூடும் என்று நம்புகிறான். தனது எல்லா பிரச்சனைகளையும் அல்யோஷாவுடன் பகிர்ந்துகொள்கிறான்.
தன்மீது நம்பிக்கையுடன் காத்ரினாவால் வேறொருவருக்குச் சேர்த்துவிடும்படி கொடுக்கப்பட்ட பெரும் தொகையை இவன் ஊதாரித்தனமாக குருசென்காவுடன் செலவழித்துவிடுகிறான். தந்தையிடமிருந்து தனக்கு வந்துசேரவேண்டிய தொகை கிடைத்தவுடன் அதனை வைத்து சரிகட்டிவிடலாம் என்று கவனக் குறைவாக இருந்துவிடுகிறான். ஆனால் தந்தையிடமிருந்து எந்த பணமும் கிடைக்காது என்று தெரிய வரும்போது, காத்ரினாவை எப்படி எதிர்கொள்வது என்று பதறுகிறான். தான் ஒரு தறுதலையாக இருந்தாலும், திருடன் இல்லை என்று அடிக்கடி கூறி வருகிறான்.
தன் காதலி குருசென்காவை வெறித்தனமாக பின்தொடர்ந்தாலும், அவள் இவனைப் பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு சமயத்திலும் இவன் அவளிடம் உருகவே செய்கிறான். தனது தந்தை இவளிடம் வெறியாக இருப்பது தெரிய வரும்போது, தந்தையின்மீது கடும் கோபம் கொள்கிறான். அதுமட்டும் நடந்தால், அவரை தீர்த்துக்கட்டவும் கூட முடிவெடுக்கிறான். கல்நெஞ்சக்காரியான குருசென்காவும் கடைசிக்கட்டத்தில், இவனது காதலை ஏற்றுக்கொண்டு காதலில் விழுகிறாள்.
இவான்:
மற்றவர்களிடம் அதிகம் திறந்துகொள்ளாத ஒரு கதாபாத்திரம் இவான்தான். இவன் குடும்பத்திலிருந்து கணிசமான நேரம் விலகியே இருக்கிறான். மதத்தின்மீது நம்பிக்கையற்று அதன்மீது பெரும் கேள்விகளை எழுப்பிக்கொள்கிறான். தனது குடும்பத்தில் அல்யோஷாவைத் தவிர மற்றவர்களை வெறுக்கவே செய்கிறான். மற்றவர்களுக்கும் இவன் ஒரு புதிரானவனாகவும், அறிவுத் திமிர் கொண்டவனாகவும் தென்படுகிறான். தந்தையைப் போலச் சுதந்திரத்தை விரும்புபவனாக இருந்தாலும், அவனுக்குள் நிறைய அறக் கேள்விகள் குடிகொண்டிருக்கின்றன. நவீன கொள்கைகளின்மீது ஈடுபாடு கொண்டவனாகத் தென்படுகிறான்.
கதையின் மத்தியில் காத்ரினாவிடம் தனது காதல் தோல்வியடைந்ததை எதிர்கொள்ள முடியாமல் கோபித்துக்கொண்டு மாஸ்கோவுக்கு திரும்பிப்போக முடிவெடுக்கும் இவானுக்கு, தனது தந்தை திமித்ரியால் கொலைசெய்யப்படலாம் என்று தெரியவருகிறது. ஸ்மெர்ட்டியாகோ இவனை மாஸ்கோவுக்குப் பதிலாக, அருகிலிருக்கும் நகருக்குச் சென்றுவிடுமாறு அறிவுறுத்துகிறான். அதனை மதிக்காத இவான், மாஸ்கோவுக்கே சென்றுவிடுகிறான். சென்ற சிலநாட்களிலேயே தனது தந்தை கொல்லப்பட்டுவிட்டதைத் தாமதமாகவே அறிந்து ஊர்தி வருகிறான். முதலில் கொலைசெய்தது திமித்ரி என்று நம்பும் அவன், ஸ்மெர்ட்டியாகோவை சந்தேகித்து அவனை பின்தொடர்ந்து சந்தித்து உண்மையை அறிந்துகொள்கிறான்.
இவன் நடத்தும் கடைசிக் கட்ட விசாரணையில், தாம்தான் கொலை செய்ததாகவும், ஆனால் தாம் அதற்கான ஒரு கருவி மட்டும்தான் என்றும் இவானே கொலைக்கான பழியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் என்றும் ஸ்மெர்ட்டியாகோவ் சொல்வது அவனை அதிரவைக்கிறது. தனது தந்தை கொலை செய்யப்படவிருந்ததை ஏற்கெனவே அறிந்திருந்தும் அதனைத் தடுக்க ஊரில் இல்லாமல் கிளம்பிச்சென்றதால், தானும் அவர் இறப்பை விரும்பியிருக்கிறேன் என்றும் அதனால் தானே கொலைகாரன் என்றும் அவன் நம்ப ஆரம்பிக்கிறான். கடைசியில் இதன் விளைவாகத் தீவிர மனநோய்க்கு ஆளாகிவிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறான். நீதிமன்றத்தில் அவன் அளிக்கும் வாக்குமூலமும் பலனளிக்காமல் போய்விடுகிறது.
ஸ்மெர்ட்டியாகோவ்:
விசித்திரமான குணங்களுடனும், தீவிர வலிப்பு நோய்க்கு ஆளாகி மிகவும் பலவீனமானவனாகவே வருகிறான் சமையல்காரன் ஸ்மெர்ட்டியாகோவ். அவனுக்குத் தனது பிறப்பு குறித்து பெரிய அதிருப்தியும், தந்தை கரமசோவின் மற்ற பிள்ளைகளைப்போல தனக்கு எந்தவித உரிமையும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபமும் ஆட்டிப்படைக்கிறது. தான் மற்றவர்களைவிட அறிவாளி என்றும் திறமைசாலி என்றும் அதீத நம்பிக்கை கொண்டவன். குடும்பத்தில் இவனுக்கு இவானை சுத்தமாகப் பிடிக்காது. அவனுடன் கருத்து ரீதியாக அடிக்கடி முரண்பட்டு விவாதிக்க முற்படுகிறான்.
மற்றவர்களைப்போலவே திமித்ரியை இவனுக்குப் பிடிக்காது என்றாலும், அவனுக்காகத் தந்தையின் நடத்தையைப்பற்றி உளவு பார்க்க ஒப்புக்கொள்கிறான். அவனுக்கு உதவுவதுபோல பாவனை காட்டுகிறான். கொலைக்குப்பிறகு இவனது நடத்தைமீது எவருக்கும் சந்தேகம் வராத அளவுக்குக் கச்சிதமாக நடந்துகொள்கிறான். தந்தை கரமசோவுக்குமே இவன்மீது எந்த சந்தேகமும் இல்லை. எல்லா இடத்திலும் இவனை அனுமதிக்கிறார். கொலைக்குப் பிறகு இவனை விசாரிக்க வரும் இவானுக்கு இவனது நடத்தையும் அலட்சியமும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஒரு கொளை குற்றவாளி இந்த அளவுக்குக் கச்சிதமாகச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று நினைக்கையில் வாசகர்களாக நமக்குமே அதிர்ச்சியாக உள்ளது. கடைசியில் கொலையை இவானிடம் ஒத்துக்கொண்டபின்னர், இவானே கொலைக்கான காரிய கர்த்தா என நிறுவும் இடம் நமக்கு நடுக்கத்தை வரவழைக்கிறது.
இவனுக்குப் பணத்தின்மீது அவ்வளவு மோகம் இருப்பதாகவே தெரியவில்லை. கொலைசெய்துவிட்ட அங்கிருந்து எடுத்துக்கொண்ட பணத்தையும் இவானிடம் கொடுத்துவிடுகிறான். பணத்தை எடுத்ததும் திமித்ரியை குற்றத்தில் மாட்டிவிடுவதற்காகவே. தனக்கு ஏற்பட்ட அவமானகரமான வாழ்க்கைக்காக இவன் தந்தை கரமசோவைக் கொன்றதாகவே தெரிகிறது. இவனுக்கும் கடவுள் நம்பிக்கையோ பெரிய கொள்கைகளில் பிடிப்போ இல்லை. ஒருவேளை தனது நோக்கம் கரமசோவைக் கொலைசெய்வதுதான் என்றால், இவன் தானாகவே சென்று சரணடைந்திருக்கலாம். தவிர்த்து எல்லா சந்தர்ப்பங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இவன் பழியை திமித்ரி மீது போட்டுவிடுகிறான். ஆனாலும், திமித்ரி தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, விசாரணைக்கு ஒருநாள் முன்னர் உண்மையை இவானிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான்.
விவாதங்கள்
நாவல் பல்வேறு கட்டங்களில் விரிவான தத்துவ விவாதங்கள் நிகழ்கின்றன. அதில் எனக்கு முதலில் முக்கியமானதாகப் படுவது, காத்ரினாவுடன் கோபித்துக்கொண்டு மாஸ்கோ புறப்படும் முன்பு அல்யோஷாவை ஒரு விடுதியில் சந்திக்கும் இவான் நடத்தும் விரிவான விவாதம். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட அல்யோஷாவுடன் கடவுளின் இருப்பைப்பற்றி அதிகமாகக் கேள்விகளை இவான் எழுப்புகிறான். அதில் சில கதைகளையும் சொல்கிறான். ஒரு கதையில் இயேசு சிலுவையில் மறித்த ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாட்டில் கலவரங்களும் பிரச்சனைகளும் வெடிக்கின்றன. மக்கல் அல்லல் படுகிறார்கள். ஒரு பிஞ்சுக்குழந்தையில் சடலத்துடன் ஊர்வலமாகச் செல்கிறார்கள். அவளை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். அதனை ஏற்றுக்கொண்டு கடவுள் விஜயம் செய்கிறார். குழந்தையை உயிருடன் மீட்டுக்கொடுக்கிறார். ஆனால் அந்நாட்டு இராணுவப்படை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுகிறது. பிறகு ஒரு வயதான பாதிரியார் கடவுளைச் சிறையில் சந்தித்து மண்ணுக்கு விஜயம் செய்யவேண்டிய அவசியமில்லை என்றும், சொல்லவேண்டிய அருள் வாக்குகள் அனைத்தும் ஏற்கெனவே இறுதியாக வழங்கப்பட்டுவிட்டதாகவும், சாதாரண மக்களுக்குக் கடவுள் வழங்கிய விடுதலையால் துன்பமே விளைந்ததாகவும், திருச்சபையும் அரசு இயந்திரமும் ஏற்படுத்தி அவர்களுக்கு ஒரு வடிகாலாக இருந்துவருவதாகவும் இனி கடவுள் மண்ணில் தோன்றவேண்டாம் என்றும் நீண்ட கண்டன உரை ஆற்றுகிறார். இதில் அமைப்புகளான திருச்சபை மற்றும் அரசு சட்டங்கள் ஆகியவை எந்த அளவில் மக்களிடம் அதிகாரம் செலுத்துகின்றன, மக்களுக்கு உண்மையிலேயே விடுதலை அவசியமில்லையா என்கிற பெரிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இரண்டாவது விவாதம் கரமசோவ் குடும்பத்திற்கும், தந்தை கரமசோவ் முன்னிலையில் அல்யோஷா, இவான், ஸ்மெர்ட்டியாகோவ் மற்றும் கிரிகோரி ஆகியோரிடையே நடக்கிறது. முதலில் கிரிகோரி மதத்துக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொள்வது குறித்து ஒரு அற்புத கதையை உதிர்க்கிறார். அதில் ஒரு தீவிர கிருத்துவன் நாட்டின் கடைக்கோடியில் ஒரு இடத்தில் இஸ்லாம் தீவிர மதக் குழுவிடம் சிக்கிக்கொள்கிறான். அவர்கள் மதம் மாறிக்கொள்ளுமாறும் அல்லது அவனைத் தோலை உரித்தே கொடுங்கொலை செய்ய வேண்டிவரும் என்றும் எச்சரிக்கிறார்கள். அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறிய பாவச் செயலுக்காகத் தான் நரகத்துக்குச் செல்லவேண்டிவரும் என்றும் எனவே தன்னால் மதமாற்றம் செய்ய முடியாது என்று முடிவெடுக்கிறான். கடைசியாக அவனை உயிருடன் தோலை உரித்து கொலை செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சமயோசிதமாக நினைத்து தனது உயிரைக் காத்துக்கொள்ள வேண்டுமா அல்லது பாவ நிந்தனையை ஏற்றுக்கொள்ளாமல் இறந்துவிடுவதே சிறந்ததா என்ற விவாதம் நிகழ்கிறது.
மூன்றாவது விவாதம் இவான் ஸ்மெர்ட்டியாகோவ்தான் கொலைசெய்திருக்கிறான் என்பதை அறிந்தபிறகு நேராகச் சென்று காவல்துறையிடம் கூறாமல், வீட்டுக்குச் சென்று உறங்கிவிட்டு மறுநாள் காலை சென்று கூறலாம் என்று முடிவெடுக்கிறான். அவன் தனியாகத் தங்கியிருக்கும் வீட்டுக்குள் நுழைந்ததும், அவனது மேசையில் ஒரு பிசாசு அமர்ந்திருப்பதைக் கண்டுகொள்கிறான். அவனுக்கும் அந்த பிசாசுக்கும் இடையில் விரிவான விவாதம் நடைபெறுகிறது. இதில் ஒரு குற்றம் செய்வது மட்டுமல்லாமல், அதற்கு உடந்தையாகவோ, அல்லது அதற்குத் தூண்டுகோலாக இருப்பதும் பாவச்செயலா? பாவச்செயல் மன்னிப்புக்கு உகந்ததா? என்கிற பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பாதர் ஜொஷிமா இறப்பதற்கு முன்னர் ஆற்றிய மூன்று முக்கிய உரைகளில், அன்பு செலுத்துவது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் விரிவாக விவாதிக்கிறார். கடவுள் நம்பிக்கையுள்ளவர்களையும், நாத்திகர்களையும் குழந்தைகளையும் எவ்வாறு நடத்தவேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். கடவுளுக்கும் சாத்தானுக்குமான கொடுக்கல் வாங்கல் குறித்த சில பைபிள் கதைகளையும் விவரிக்கிறார். அதேபோல அமைப்பு இயங்கும் விதம் பற்றியும் அதனைக் காலத்துக்கு ஏற்றார்போல மாற்றுவது அவசியமா என்பது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாவலின் இறுதியாகக் கொலைக் குற்ற விசாரணையில் அரசு தரப்பு வக்கீலூம், எதிர்த் தரப்பு வழக்குரைஞரும் ஆற்றும் நீண்ட உரைகள் முக்கியமாக வருகின்றன. அரசுத் தரப்பு வழக்குரைஞர் குற்றத்தை நிரூபிக்கும் முன், குடும்ப அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்றும், அதில் ஏற்படும் சீர்குலைவு எந்த விளைவுகளை குடும்பத்துக்குள்ளும் வெளிச் சமுதாயத்திலும் உண்டாக்கும் என்றும் விரிவாக விளக்குகிறார். தந்தையின் தறிகெட்ட நடத்தையால் பாதிக்கப்பட்ட மகன் தனது தந்தையையே கொலைசெய்யும் அளவுக்கு வழிநடத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் எப்படி ரஷ்யாவில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும், அவற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் தங்களின் மதத்தின் மீதும், தாய்நாட்டின்மீதும், அதன் சட்டங்களின் மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் விவரிக்கிறார்.
எதிர்த்தரப்பு வழக்குரைஞர், குற்றம் நடந்திருந்தாலும், வெறும் சாட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்குவது மாற்றப்படவேண்டும் என்றும், குற்றவாளிக்குத் திருந்தி வாழ்வதற்காக வாய்ப்பை அந்த தண்டனை எவ்வாறு தடையாக அமைந்துவிடுகிறது என்றும் விரிவாக விளக்குகிறார். கடும் தண்டனைகளால் உண்மையிலேயே சமூகத்தில் மாற்றங்கள் நல்லவிதமாக நிகழ்ந்துவிடுமா என்பது பற்றி தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
உளவியல்
உளவியல் ஆழத்தைத் தொடாத படைப்பு தஸ்தாவஸ்கியிடமிருந்து வருவது சாத்தியமில்லை. அவரது கடைசியும் உலகப் புகழ்பெற்ற நாவலான கரமசோவ் சகோதரர்களில் இது புதிய சாத்தியங்களைக் கண்டடைகிறது. நாவலில் வரும் எந்த கதை மாந்தரும் வெறுமென வந்து செல்லாமல் அவர்களின் உளவியல் செயல்படும் விதம், அதில் உள்ள சிக்கல் அவர்களை எவ்விதம் வழிநடத்துகிறது என்று நமக்குத் தெளிவாக விளங்கிவிடும் அளவுக்கு ஆசிரியர் கதைசொல்கிறார். இதில் இவர் ஒரு மேதை எனலாம். மிகக் குறுகிய இடம் கிடைத்தாலும் அதிலேயே கதாபாத்திரம் ஏன் அப்படி நடந்துகொள்கிறது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதை நமக்குக் கடத்திவிடுகிறார்.
காத்ரினா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமித்ரியிடம் தன்னை பணத்துக்காக ஒப்படைக்க முடிவெடுக்கிறாள். திமித்ரி அதனைத் தவிர்த்து அவளுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவைக்கிறான். இதற்காக காத்ரினா அவனை நன்றியுடன் தீவிரமாகப் பின்தொடர்கிறாள். அவனிடம் காதலிலும் விழுந்துவிடுகிறாள். வெளியில் எல்லோரிடமும் அதனைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தாலும், அவளால் அதில் திளைக்க முடியவில்லை. அவளுடைய ஆணவம் திமித்ரியிடம் அடிபட்டுவிட்டதால் அவனைப் பழிவாங்கவே முற்படுகிறது அவள் மனம்.
பாதர் ஜொசிமா தனது கடந்தகால கதையில் ஒரு இராணுவ அதிகாரியாக இருக்கையில், தனது காதலுக்கு எதிராக நிற்கும் வேறு ஒருவனை எதிர்த்து சண்டைக்கு அழைக்கிறார். சண்டைக்கு முந்தைய நாள் இரவு தனது வேலைக்காரனிடம் தேவையற்ற காரணத்துக்காகக் கோபித்துக்கொண்டு அவனது கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறார். அடிபட்ட பணியாளன் எதிர்ப்பைக்காட்டாமல் அழுதுகொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். எந்த அவசியமும் இல்லாமல் தனக்குக் கோபம் வந்ததற்காக, தனது பணியாளனை அவமானப்படுத்தியது குறித்து அன்றிரவு வேதனைப் படுகிறார். மறுநாள் அவர் அழைத்திருந்த சண்டைக்குச் செல்லவேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் நண்பன் வற்புறுத்தவே, கிளம்பத் தயார் ஆகிறார். கிளம்பும் முன் தனது பணியாளிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுகிறார். சண்டையின்போதும், முதல் குண்டை தனது முகத்தின் ஓரத்தில் வாங்கிக்கொண்டாலும், எதிர்த்துச் சுட மறுக்கிறார். தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்போவதில்லை என்றும், முடிந்தால் எதிராளி என்னைச் சுட்டு வீழ்த்தலாம் என்றும் அறைகூவுகிறார். சண்டை சமாதானமாக முடிந்த கையோடு வேலையை உதறிவிட்டு மடாலயத்தில் சேவைசெய்யச் சேர்ந்துகொள்கிறார். இளம் வயதில் தனது அண்ணன் அவனுக்காகவும் சேர்த்து இவரை வாழ வாழ்த்தியதை நினைவுகூர்கிறார்.
தனக்கும் கொலைக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், தனது தந்தையின் இறப்பை விரும்பியதாலேயே அதற்கான கொலைப்பழியை ஏற்க வேண்டும் என்று சிந்தித்து தன்னை வருத்திக்கொள்ள முனைகிறான் இவான். இத்தனைக்கும் அந்த எண்ணம் அவனுக்குள் முதலில் உதிக்கவில்லை. ஸ்மெர்ட்டியாகோவே அதனைச் சொல்லி இவானை மிரட்டுகிறான். இப்படிச் சொன்னால் இவான் மிரன்டுவிடுவான் என்பதை ஸ்மெர்ட்டியாகோவ் தெரிந்துவைத்திருந்தது வியக்கவைக்கிறது.
குருசென்கா தன்னை ஆத்மார்த்தமாக விரும்பவில்லை. மாறாக அவள் மனம் முழுதும் தன்னை அலைக்கழிப்பதில்தான் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், தனது ஈனத்தனமாக நடத்தையையும் மீறி தன்னைத் தீவிரமாக காதலிக்கும் நன்னடத்தையுடைய காத்ரினாவை விடுத்து, திமித்ரி குருசென்காவின் பின்னாலே அலைக்கழிகிறான். அவளை மகிழ்விக்க எந்த அளவுக்கும் இறங்கிச்செல்ல விழைகிறான். அதற்கு எதிராக வரும் தனது தந்தையை கொலைசெய்யவும் துனியும் அதே வேளையில், குருசென்காவை அந்த ஊருக்குக் கொண்டுவந்த அவளின் முந்நாள் காதலரான வயதான கிழவர் சாம்சனோவ் மீது அவன் நம்பிக்கையுடன் அணுகுவதும் திமித்ரியின் உளவியல் விந்தைக்குரியதுதான்.
இல்யூஷாவின் தந்தையைச் சந்திக்கும் அல்யோஷா, அவர்களுக்கு காத்ரினா மூலம் பண உதவிசெய்ய முன்வருகிறான். தனது மகளுக்குத் தேவையான மருத்துவச் செலவுக்கும், அவர்களின் அத்தியாவசியச் செலவுக்கும் அந்த பணம் தேவைப்பட்டாலும், இல்யூஷாவின் தந்தை பணத்தைப் பெற மறுத்துவிடுகிறார். பணத்தைப் பெற்றுக்கொள்வதால் தனது மகனை இழிவுசெய்துவிடுவதான தந்தை நினைக்கிறார். அதைப் புரிந்துகொள்ளும் அல்யோஷா பொறுமையாகக் காத்திருக்கிறான். பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த பணம் வழங்கப்படுகிறது. இல்யூஷாவின் தந்தைக்கும் அல்யோஷாவின் தந்தைக்கும் மலையளவு வித்தியாசத்தை ஆசிரியர் காட்டுகிறார்.
தனக்கு ஏற்பட்ட கடந்தகால இழப்புகளால் மிகவும் பாதித்திருக்கும் குருஷென்கா தன்னை நோக்கி வரும் எல்லா ஆண்களையும் அலைக்கழிக்கிறாள். பெண்களையும் அவமானப்படுத்த முற்படுகிறாள். திமித்ரியை தன்னிடம் விட்டுவிடுமாறு காத்ரினா செய்ய முற்படும் சமாதானத்தில், அவளிடம் முத்தம் கொடுக்காமல் வேண்டுமென்றே காயப்படுத்திவிட்டு அங்கிருந்து விலகிவிடுகிறாள் குருஷென்கா. தன்னை விட்டுப்போன கணவன் ஐந்துவருடம் கழித்து மீண்டும் வந்து இவளுடன் சேர்ந்துகொள்ளுமாறு கேட்கும்போது, யோசிக்காமல் புரப்பட்டுவிடுகிறாள். ஆனால் அவன் இவளிடம் பணத்துக்காகத்தான் திரும்பி வந்திருக்கிறாள் என்பதை அறிந்தபிறகு அவள் மனம் முழுவதுமாக திமித்ரியிடம் திரும்பிவிடுகிறது. திமித்ரி கொலைக்குற்றம் சாட்டப்பட்டுக் காவலில் வைக்கப்படும்போதுதான் அவனை இவள் முழுவதுமாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறாள். அவனுடன் தண்டனைபெற்று சைபீரியாவுக்கும் செல்ல முடிவெடுக்கிறாள்.
ஸ்மெர்ட்டியாகோவின் உளவியல் இன்னும் ஆழமானதாகவும் புதிராகவும் இருக்கிறது. அவன் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பதுடன், அறிவாளியாகவும் கருதிவருகிறான். தனது சமையல் திறமையால் தந்தை கரமசோவின் நன்மதிப்பையுமே பெற்றுவிடுகிறான். ஆனால் அவனுக்கு மற்றவர்களைப்போல பணத்தில் ஈடுபாடே இல்லை. தனக்கு இருக்கும் வலிப்பு நோயைப் பயன்படுத்தி எப்படி தந்தையைத் தீர்த்துக்கட்டிவிட்டு, திமித்ரியை பழியில் சிக்கவைக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறான். அதனை முன்னர் சூசகமாக இவானிடமும் சொல்லும் தைரியம் அவனுக்கு இருந்திருக்கிறது. ஆனால் கடைசியில் தனது வேலை முடிந்ததும், தற்கொலை செய்துகொள்கிறான்.
இறுதியாக
வெண்முரசு தவிர்த்து நான் முழுமையாக வாசித்து முடித்த முதல் செவ்வியல் நாவல் கரமசோவ் சகோதரர்கள்தான். இதற்குமுன் போரும் அமைதியும், அண்ணா கரினினா, விஷ்ணுபுரம் என்று நீளும் பட்டியலில் எதையும் இதுவரை முழுமையாக வாசித்து முடித்ததில்லை. போரும் அமைதியும் தமிழில் வாசிக்க ஆரம்பித்து 80%ல் நிற்கிறது. விஷ்ணுபுரம் இரண்டுமுறை முயன்று 65% முடித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்து அண்ணா கரினினா 40%ல் தொங்கிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து இந்த நாவலைக் கூட்டாக வாசிக்கப்போவதாகவும், என்னையும் இனைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தவே, மிகுந்த யோசனைக்குப்பிறகு, மேற்கொண்ட நிபந்தனைகளை எனக்குள் விதித்துக்கொண்டே வாசிக்க ஆரம்பித்தேன். வேலைச்சுமை காரணமாக இடையில் தடைப்பட்டாலும், இவ்வருட மழைவெள்ளம் காரணமாகக் கிடைத்த ஓய்வில், ஒரு வேகத்தில் வாசித்து முடித்தேன்.
இலக்கியம் வாசகராகத் தன்னை நம்பும் எவருக்கும் செவ்வியல் இலக்கியங்களை வாசிப்பது அவசியமாகிறது. வேறெந்த படைப்பிலும் இல்லாத விரிவும், சமநிலையும், பொதுத்தன்மையும், வாசக இடைவெளியும் நமக்கு செவ்வியல் படைப்புகளே அளிக்கின்றன. அவற்றுக்கான சிறிய தடங்கல்களைச் சமாளித்துவிட்டால், நமக்குக் கிடைப்பதெல்லாம் விலைமதிப்பில்லாத அனுபவங்கள்தான். அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் வாசிப்பு எனக்கு புதிய திறப்புகளை வழங்கியிருக்கிறது. இதற்குப்பிறகு நான் வாசிக்கத் தொடப்போகும் படைப்புகளிடம் எனது எதிர்பார்ப்பு என்பது வேறாகத்தான் இருக்கப்போகிறது. கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள தமிழ் பதிப்பையே நான் வாசித்தேன். வாசிப்பது ஒரு மொழிபெயர்ப்புதான் என்று அறியாத அளவுக்குக் கதை ஒழுகிச்செல்கிறது. புத்தகத்தை எடுத்தால் வைக்காமல் வாசிக்கும் அளவுக்கு நம்மை இழுத்துக்கொள்கிறது. மொழிபெயர்ப்பாளருக்கு வாசகனாக வாழ்த்துகளும் நன்றிகளும். இந்நாவலை வாசித்துவிட்டு கிட்டத்தட்ட ஒருவாரம் தூக்கத்தைத் தொலைத்தேன். இவ்வனுபவம் மறுவாசிப்புக்கு என்னை இழுக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்.