Power And Progress - Our Thousand-year struggle over Technology and Prosperity - எனது வாசிப்பு
ரோமானிய, பாபிலோனிய பேரரசுகள் தொடங்கி 21ம் நூற்றாண்டின் சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி வரையில் தொழில்நுட்பம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது, எப்படி சாமானியர்களை பாதித்துள்ளது, 2010க்குப் பிறகு AI எடுத்திருக்கும் விஸ்வரூபம் எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது, அதனை சரியான வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பயன்படுத்த என்ன செய்யலாம் என்று விரிவாகவே எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ள புத்தகம்தான் Power and Progress. இப்பதிவில் எனது வாசிப்பை பகிர்ந்துகொள்கிறேன்.
தொழில்நுட்பமும் வசதியானவர்களும்
இப்புத்தகத்தில், முக்கியமாக பேசப்பட்டுள்ளது தொழில்நுட்ப முன்னேற்றம் வசதியானவர்களுக்கு எவ்வாறு சாதகமாகவும், சாமானியர்களுக்கு எதிராகவும் வெவ்வேறு காலங்களில் செயல்பட்டுள்ளது என்பதுதான். வசதியானவர்களால் மட்டுமே தொழில்களைத் தொடங்கி நடத்த முடிவதாலும், தொழில்நுட்ப வசதி அவர்களின் கைக்கே விரைவில் கிடைக்கப்பெறுவதாலும், அவர்கள் தங்களிடம் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்த முடிகிறது. வசதியானவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், அரசியலிலும் அவர்களின் செல்வாக்கு உயரும்போது, சாமானியர்கள் மேலும் முடக்கப்படுகிறார்கள். வரலாறு நெடுகிலும் இது இப்படியே இருந்தாலும், சில காலங்களில் அது தொழிலாளர்களின் வசதிக்காக செயல்பட்டபோது ஏற்பட்ட சமுதாய முன்னேற்றங்களையும் விரிவாக விளக்கியுள்ளார்கள் நூலாசிரியர்கள்.
ஐரோப்பாவில் காலனித்துவத்துக்கு முன்னர் கிருத்துவ அமைப்புகள்
நான் சமீபத்தில் வாசித்து முடித்த கரமசோவ் சகோதரர்கள் நாவலில் கிருத்துவ அமைப்புகளின் அதிகாரம் பற்றி அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஊரிலும், கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில் வரும் வருமானமானது நேரடியாக சபைக்கு அளிக்கப்பட்டு அதில் உள்ள பிஷப்புகள் கிட்டத்தட்ட செல்வந்த வாழ்வில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். அதேசமயம் ஊரில் பட்டினியும் இருந்திருக்கிறது. இதைவிட தீவிரமான பிரச்சனை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்திருப்பதை இப்புத்தகத்தைப் படித்தபோது அறிந்துகொண்டேன். அப்போது ஐரோப்பாவில், மன்னர் ஆட்டிதான் இருந்தது. ஆனால், மன்னர்களைவிட செல்வாக்குடன் இருந்தவர்கள் பிஷப்புகள்தான். ஏனென்றால், நாட்டின் பெரும்பாலான செல்வம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தேவாலயத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அந்நிலங்களில் வேலை செய்த ஊழியர்கள் குறைந்த வருமானத்தில் வறுமையில் வாடியிருக்கிறார்கள். அதை மன்னராலுமே தட்டிக்கேட்க முடிந்திருக்கவில்லை.
அத்தகைய நிலங்களில் வேலைசெய்த ஊழியர்கள் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு தங்களின் வேலையை எளிதாக்கிக்கொள்ள முயன்றபோது, உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களை வேலையை விட்டும் வெளியேற்றியிருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டில், மக்காச்சோளங்களை உரிப்பதற்காகச் சிறிய இயந்திரங்களை வடிவமைக்க முயன்ற ஊழியர்களை நிலத்தின் உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தண்டனையும் விதித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அத்தனை நிலமும் தேவாலயத்துக்கே சொந்தமாக இருந்ததால், ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்டவர் அடுத்த இடத்தில் வேலைக்கு சேர்வது ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளாமல் இயலவில்லை. எனவே, பெரும்பாலான பொதுமக்கள் கடினமான வேலைகளில் குறைந்த ஊதியத்தில் காலந்தள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் ஏகபோகமாக வாழமுடிந்திருக்கிறது.
சுரங்கங்களில் நிலைமை இன்னும் மோசமானதாக இருந்திருக்கிறது. எந்த காரணத்துக்காகவும், பொதுமக்கள் எளிதாக குற்றம்சாட்டப்பட்டு தேவாலயத்தில் வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டு சுரங்கங்களில் அடிமைகளாக வேலைசெய்திருக்கிறார்கள். ஏனென்றார், சட்டம் முழுக்க பிஷப்புகளின் கையிலிருந்தது. அவர்களை எதிர்ப்பவர்கள் எவரானாலும், அவர்களிடமே விசாரணைக்கு அனுப்பப்பட்டு தண்டனை வழங்கப்படும். பெரும் புரட்சியில்தான் அரசர்களாலும், சாமானியர்களால் ஓரளவுக்காவது உரிமைகளையும் அதிகாரத்தையும் அடைய முடிந்திருக்கிறது.
சூயஸ் மற்றும் பனாமா கால்வாய்ப் பணிகள்
சூயஸ் கால்வாய் அமைக்கும் பணியை ஃபெர்டினன்ட் டெ லெஸ்ஸெப்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கிறார்கள். அவர் அரசியலிலும், பணக்காரர்கள் மத்தியிலும் செல்வாக்குடன் இருந்தவர். அவருக்கு உழைப்பாளர்களைப் பற்றிய எந்த அக்கரையும் இருக்கவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், தன் திட்டத்தை முதலாளிகளிடம் வாக்களிக்கப்பட்ட நாட்களுக்குள் முடித்து ஒப்படைப்பது மட்டுமே. கால்வாய் அமைப்பதற்கு பெரும்பாலும் உடல் உழைப்பையே நம்பியிருந்தார்கள். அதில் வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு அந்த நிலத்தின் தட்பவெப்ப நிலையைப் பற்றிய முன்றன்றிவோ தயாரிப்போ இருக்கவில்லை. அவர்களுக்கு தரமற்ற உணவும், மிகக் குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்பட்டது. எனவே, வேலை நடந்து முடிவதற்குள்ளாக நிறைய வேலையாட்கள் மாண்டுபோனார்கள். ஆனால், லெஸ்ஸெப்ஸ் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தொடங்கிய வேலையை எந்த இழப்பிற்காகவும் பின்வாங்க முடியாது என்று முறண்டு பிடித்தார். வேலை முடிந்ததும், அதன் முதலீட்டாளர்களின் மத்தியில் நன்மதிப்பை அவரால் ஈட்ட முடிந்தது.
அந்த நன்மதிப்பு அவருக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத்தந்தது. இந்தமுறை பனாமா கால்வாய் தோண்டும் பணி. முதலீட்டாளர்கள் அவரின் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், அவரோ தனது முதல் முயற்சியில் கிடைத்த வெற்றியால் மிதந்துகொண்டிருந்தார். சென்ற முறை செய்த தயாரிப்புகளிலிருந்து எந்த முன்னேற்றத்தையும் அவர் செய்யவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால், அந்த திட்டத்தை அப்படியே எடுத்து இதற்கு போட்டுவிட்டார் எனலாம். திட்டமிடல் இப்படியிருக்க, இந்த நிலச்சூழலோ முற்றிலும் வேறானதாக இருந்தது. இதில் ஈடுபடுத்தப்பட்ட வேலையாட்களுக்கு வினோதமான காய்ச்சல் ஏற்பட்டு விரைவில் கொத்து கொத்தாக மாண்டுபோனார்கள். லெஸ்ஸெப்ஸ் அதற்கும் சளைக்காமல், முதலீட்டாளர்களிடம் வழக்கமாக விடுக்கும் உறுதிமொழியையே கடைப்பிடித்திருக்கிறார். ஒருகட்டத்தில், தொடங்கப்பட்ட வேலை எதிர்பார்த்த வேகத்தில் நடக்காதது அறிந்த முதலீட்டாளர்கள் மேலும் தகவல்களைத் தேடும்போதுதான் அவரின் திட்டத்திலிருந்த ஓட்டைகள் கண்டடையப்பட்டது. கால்வாய்ப் பணியும் தேவையான முதலீடு கிடைக்காததால் பாதியிலேயே நின்றுபோனது. இத்தகைய உதாரணங்களை புத்தகம் முழுக்க அடுக்கிக்கொண்டே போகிறார்கள். நான் செயல்படும் துறையில் இப்போதுமே இதே நிலைதான் என்பதால், புத்தக ஆசிரியர்கள் வைக்கும் வாதத்தை மறுக்கவே இயலவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரயில்வே மற்றும் சுரங்கத்தில் தொழில்நுட்பப் புரட்சி
உலகம் முழுக்க தொழிலாளர்களின் நிலை வறுமையை ஓட்டியே இருந்த சமயம் சில தொழில்நுட்பப் புரட்சி அவர்களின் வாழ்வில் ஒளிக்கீற்றைக் காட்டியிருக்கிறது. அதில் முக்கியமானது இரயில்வேயில் ஏற்பட்டது. தொழில்நுட்பம் பெரும்பாலும் வசதியானவர்களின் கைகளிலிருந்த சமயத்தில், படிப்பறிவற்ற தொழிலாளர்களும் சில தொழில்நுட்ப முயற்சியில் ஈடுபட்டு சிறிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அதற்கான தேவையும் இருந்தது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மருத்துவத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மக்கள் நகரங்களில் நெருக்கி வாழ்வதால் ஏற்பட்ட கொள்ளை நோய்களைச் சமாளிக்க மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு, மக்கள்தொகை புதிய உயரத்தை எட்டியது. இதனால், அதிக மக்களுக்கு தேவையானவற்றை நகரத்துக்கு வெளியே இருந்து விரைவாக கொண்டுவரவேண்டியிருந்தது. இதனை பூர்த்தி செய்ய வசதியானவர்களால் இயலவில்லை. எனவே, மற்றவர்களும் களம் இறங்கினார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் ஸ்டீபன்சன். இவர் முறையாக பொறியியல் கல்வி கற்றவரல்ல. அவரின் குடும்பம் ஏழ்மையில் உழன்றது. ஆனால், இரயில்வே எஞ்சின்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்து அவர் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார். முறையான கல்வியில்லாவிட்டாலும், தனது அனுபவப் பாடத்தில் அவரால் சோபிக்க முடிந்தது.
இதே கால கட்டத்தைச் சேர்ந்த ஹம்ப்ரி டேவி தனது ‘பாதுகாப்பான விளக்கு’ கண்டுபிடிப்புக்கான உயரிய விருதைப் பெற்றார். சுரங்கங்களில் அபாயகரமான வாயுக்கள் வெளியேறுவதால் எளிதாக தீப்பற்றி அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கை. விளைவாக நிறைய சுரங்கத் தொழிலாளர்களும் இறந்து போனார்கள். இவர் கண்டுபிடித்த பாதுகாப்பான விளக்கு, அத்தகைய சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடித்து தீவிபத்தைத் தவிர்த்தது. ஸ்டீபன்சனைப்போலவே, இவரும் வறுமையான குடும்பச்சூழலில் வளர்ந்தவர்தான். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த கீழ் நடுத்தரவர்க்கத்தினரும் தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கி சமூகத்தில் முன்னேற்றம் அடைந்தனர். இதுபோல பல உதாரணங்கள் இப்பத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப முன்னேற்றமும் அதில் மக்கள் பங்களிப்பும்
அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு தனது உற்பத்தியை பெருக்குவதில் புதிய முயற்சியைக் கைக்கொண்டது. அதன் விளைவாக அவர்களால் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய முடிந்தது. அவர்களின் வாகனங்களுக்காக தேவையும் அதிகரித்துக்கொண்டே சென்றதால், உற்பத்தியை மேலும் அதிகரிக்க, வழக்கமாக வழங்கப்படும் ஊதியமான <2$ ல் இருந்து 5$க்கு அதிகரித்து ஊழியர்களை தன்பால் ஈர்க்க ஆரம்பித்தது நிறுவனம். இதன் காரணமாக, மற்றவர்களுன் இவர்களைப் பின்தொடரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில், ஊழியர்களின் வேலைநேரம், பாதுகாப்பு போன்றவற்றில் அதிக கவனம் இல்லாமல் பிரச்சனையைச் சந்தித்து வந்தாலும், அவர்களால் ஓரளவுக்கு சம்பளத்தை குடும்பத்தில் கொண்டு சேர்க்க முடிந்தது. இதன் விளைவாக, மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்தது. ஒருகட்டத்தில், ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை ஒன்றுசேர்ந்து நிர்வாகத்திடம் வைக்கும் நோக்குடன், யூனியன்களை அமைக்கத்தொடங்கினார்கள். அதன் விளைவாக, தொழிலில் விளையும் இலாபத்திலும் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வரத்தொடங்கியது. நிறுவனம் அதிக இலாபம் ஈட்டும்போது, அதில் அவர்களாலும் பங்கெடுக்க முடிந்தது.
Automation
ஊழியர்களின் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, நிறுவனங்கள் தானியங்கு தொழில்நுட்பத்தைக் கொண்டுவரத் தொடங்கியதும், தொழிலாளர்களின் கை சரியத்தொடங்கியது. தேவைக்காக கொண்டுவரத் தொடங்கிய மாற்றம், படிப்படியாக தொழிலாளர்களை வெளியேற்றுவதில் கொண்டுசேர்த்தது. மனிதர்களுக்கு உதவியாக அவர்களின் வேலையை இலகுவாக்குவதற்காக செயல்படுத்த வாய்ப்பிருந்தும், நிறுவனங்கள் பணியாளர்களை வெளியேற்றுவதற்கே தானியங்கிக் கருவிகளை சந்தைக்கு கொண்டுவருவதில் அதிகமாக முதலீடு செய்யத்தொடங்கின. மில்டன் ஃப்ரைட்மேன் வழிவந்த பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, சந்தையில் இயங்கும் நிறுவனத்தின் ஒரே இலக்கு இலாபம் ஈட்டுவதாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய, சமுதாய, உலக நலன்களின் மீது அவற்றுக்கான அக்கரை தேவையற்றது என்று வாதாடினார்கள். அவர்களின் செல்வாக்கு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதிகரித்ததால், நிறுவனங்கள் Automationக்காக செலவை அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.
என்னதான் ரோபாட்டுகளும் மற்ற கணிப்பொறி நிரலிகலும் இருந்தாலும், மனிதன் செயல்படும் அளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடனும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்வதும், அவைகளால் இயலாமல் போனது. இதனால், நிறுவனங்கள் தாங்கள் எதிர்பார்த்திருந்த உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறின. குறிப்பாக ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இத்தகைய சிக்கல்களில் சிக்கி நட்டமடைய ஆரம்பித்திருந்த சமயம், ஜப்பானைச் சேர்ந்த டோயோடா நிறுவனம் தனது முதலீட்டை முழுவதுமாக தானியங்கி ரோபாட்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்யாமல், ஊழியர்களின் திறனை அதிகரிக்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களுக்கு உதவியாக சில மென்பொருட்களையும் கருவிகளையும் பயன்படுத்த ஆரம்பித்ததில், அவர்களின் தரம் மற்றும் உற்பத்தி அதிகரித்தது. ஒரு கட்டத்தில், நட்டமடைந்த அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அந்நிறுவனங்களின் நின்றுபோயிருந்த தொழிற்சாலைகளில்கூட இவர்களால் உற்பத்தியை மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக இயங்க முடிந்திருக்கிறது.
அதேபோன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மீனவர்கள் கொண்டுவரும் மீன்களை விற்பதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஒரு கிராம சந்தையில் அதிகமாக விற்காமல் கிடக்கும் மீன்களால் வியாபாரிகளும் மீனவர்களும் நட்டமடைந்திருக்கும் சமயம், பக்கத்து கிராமத்து சந்தையில் அதற்கான தேவை அதிகரித்து விலை அதிகமாக விற்றுக்கொண்டிருக்கும். அப்போது விலை மலிவான கைப்பேசி சந்தைக்கு வந்ததுடன் எல்லோருக்கும் அத்தொழில்நுட்பம் அறிமுகமானது. விளைவாக, மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல தொடர்பு வசதி சாத்தியமானது. உணவுப் பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்பட்டு சரியான விலையும் உற்பத்தியாளர்களுக்கு சென்று சேர்க்க முடிந்திருக்கிறது.
இப்படி நிறைய வெற்றிகரமான உதாரணங்கள் மனித-இயந்திர கூட்டுக்கு இருந்தாலும், நிறுவனங்கள் தொடர்ந்து முதலீட்டை தானியங்கி கருவிகளுக்கு அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. இதனால், ஊழியர்கள் தாங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் வேலையையும் விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். குறிப்பாக 1970க்குப் பிறகு மின்னணு சாதனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்ததிலிருந்தே இப்போக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. சொத்துக்களை உறிமைகொண்டாடுவதில் மீண்டும் வசதிபடைத்தவர்கள் கைக்குள் கொண்டுவந்தனர். சாமானியர்கள் பின்தங்க ஆரம்பித்தனர். ஆனால் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் Automationஐ வேண்டுமென்றே இந்த வழியில் கொண்டுசென்றதில் பெரும் பணக்காரர்கள் வெற்றியடைந்து, அரசியலிலும் அதிகாரத்தை நிலைநாட்டிவருகிறார்கள்.
இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, அமெரிக்காவிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்தவரை விலக்கவேண்டுமென்று அமெரிக்காவின் தொழிலதிபர் பில் ஆக்மன் ஒரு பிரச்சாரம் நடத்தி அதில் வெற்றியும் அடைந்தார். காரணம், அத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கான முதலீடுகளை இத்தகைய பெரும் தொழிலதிபர்களே வழங்குகிறார்கள். இதற்கு அவர்கள் கைமாறாக அந்த நிறுவனங்களின் அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் விரும்பும் விதத்திலேயே ஆராய்ச்சி நடத்தப்படும், அதன் விளைவுகளே சந்தைகளிலும் எதிரொளிக்கும். இப்படியாக 21ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியானது, பெரும் பணக்காரர்களை மேலும் செல்வந்தர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் அதே சமயம் மற்ற பெரும்பான்மை மக்களை ஏழைகளாகவும் வருமைக்கு கீழும் தள்ளிக்கொண்டிருக்கிறது.
Artificial Intelligence
முதலில் Automationல் கொஞ்சம் ருசிபார்த்த நிறுவனங்கள், சமீபமாக தங்களின் முதலீடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பக்கமாக திருப்பிவிட்டிருக்கிறார்கள். இது மனிதனுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்களை அப்படியே பிரதியெடுக்க முயல்கின்றன. அத்தகைய படிமுறைத் தீர்வுகள் அதிகமான அளவில் தகவல்களைத் தின்று விழுங்கும். அளவுக்கு அதிகமான தகவல்களைச் சேகரிக்க பெரிய நிறுவனங்களால் மட்டுமே முடிகிறது. அவர்கள் உலக அளவில் செயல்பட்டுவரும் எல்லா வலைதளங்களிலிருந்தும் அப்படியே தகவல்களைப் பதிவிறக்கவேண்டியுள்ளது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் மனித மூளையின் கூட்டு முயற்சியால்தான் சாத்தியமாகியுள்ளது. ஆனால் அவை அவர்களுக்கு எதிராகவே மடைமாற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய படிமுறைத் தீர்வுகளை பெருநிறுவனங்களே உருவாக்க முடிவதால், அளவுக்கு அதிகமான அதிகாரம் அவர்களின் கைகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. விளம்பர நிறுவனங்களான கூகிள் மெட்டா போன்றவை, தங்களது சேவைகளை இலவசமாக வழங்குகிறோம் என்கிற பெயரில், மக்களை மறைமுகமாக கண்காணிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட நொடிக் கணக்கில் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டே அவர்கள் படிமுறைத் தீர்வுகளையும் உருவாக்கி அவர்களை மேலும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். விளைவாக அவர்கள் பூதாகரமாக வளர்ந்து அரசியலிலுமே செல்வாக்கு நடத்துமளவுக்கு வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு சிறிய எடுத்துக்காட்டு, முகபுத்தகத்தில் நடத்தப்பட்ட பிரச்சாரங்களால் அமெரிக்காவில் ட்ரம்ப் வெற்றி, எகிப்தில் புரட்சி, ஈரானில் புரட்சி என்று அதிகாரத்தை அவர்கள் விரும்பும்வகையில் கொண்டுவர பெறு நிறுவனங்களால் முடிகிறது.
இதன் பிரச்சனை வெறும் நிறுவனங்களுடன் நிற்கவில்லை. நாட்டின் அரசாங்கமும் தனது பிரஜைகளின்மீது அதீத கண்காணிப்பில் ஈடுபட வாய்ப்பாகிறது. குறிப்பாக சீனாவில் மக்களின் எல்லா நடத்தையும் வெளிப்படையாகவே கண்காணிக்கப்பட்டு அவர்களின் தவறுகளுக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது. அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தொடங்கி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுவரை அவர்களால் முடிவெடுக்க முடிகிறது. விளைவாக, அதிகாரம் மேலும் செறிவாக குறுகிய வட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களிடம் சென்று சேர்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலேயே கூட இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பெகாஸஸ் என்கிற நிரலியைப் பயன்படுத்தி அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் எதிரிகளைக் கண்காணிக்க முடிந்திருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றம்
வளர்ந்துவரும் Automation மற்றும் Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்களால் மக்கள் வேலைவாய்ப்பு இழப்பதால், அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள அரசாங்கம் சில சலுகைகளை வழங்கவேண்டும் என்று அதிகம் பேசப்படுகிறது. அதற்கான தொகையை பெருநிறுவனங்களிடமிருந்து வரியாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. மக்கள் வேலைசெய்யாமல் பெற்றுக்கொள்ளும் எதுவும், அவர்களை மேலும் புதைகுழிக்குள்தான் இட்டுச்செல்லும். சுற்றுச்சூழல், சமுதாயம் போன்றவற்றில் அக்கறையற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பெருநிறுவனங்களை நம்பி வாழ்பவர்களாகவும் மாறிப்போக நிறைய வாய்ப்புள்ளது.
பெருநிறுவனங்களின் அதிகாரங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளில் இறங்கவேண்டியது கட்டாயமாகிறது. இது கடந்தகாலங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் Standard Oil மற்றும் AT&T நிறுவனங்கள் தங்களின் போட்டியாளர்களை நசுக்கி மொத்த சந்தையையும் கைப்பற்றிக்கொண்ட சூழ்நிலையில் அரசாங்கம் தலையிட்டு அவற்றை சிறு நிறுவனங்களாக பிரித்து ஆரோக்கியமான போட்டியுள்ள சந்தைக்கு வழிசெய்துள்ளன. அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் துணிவுள்ள அரசாங்கம் இப்போதைய தேவையாகிறது.
முடிவாக
இப்புத்தகத்தில் லேசான இடதுசாரி நெடி வீசுவதை உணர முடிகிறது. ஆனால் இது இக்காலகட்டத்தில் அவசியமாகிறது என்றே படுகிறது. உலகெங்கிலும் எதேச்சதிகாரம் தலைதூக்கியிருக்கும் நிலையில், மக்கள்தொகையில் சிறுபான்மையானவர்களான வசதிபடைத்தவர்களிடம் அதிகாரமும் செல்வமும் குவியும்போது, சாமானியர்கள் துன்புறுவது கண்கூடாகவே எல்லா நாடுகளிலும் நிகழ்கிறது. இந்நிலை மாறவேண்டுமென்றால், மக்கள் விழித்துக்கொண்டு, பெருநிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், அதேசமயம் பொதுமக்களின் அதிகாரத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தை நிறுவ வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் இப்புத்தகம் தனது வேலையை செவ்வனே செய்துள்ளது.
இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பாக நான் உணர்வது இவற்றைத்தான்:
- அதிகாரம் என்பது எவ்வாறு வரலாற்றில் கையாளப்பட்டிருக்கிறது
- செல்வமும் அதிகாரமும் மக்கள்தொகையில் சிறுபான்மையினரான செல்வந்தர்களிடம் சென்று குவிவதால் என்னென்ன விளைவுகள் நிகழ்ந்துள்ளன.
- தொழில்நுட்பம் எவ்வகையில் அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட மக்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறது.
- Automation மற்றும் Artificial Intelligence எவ்வாறு மனித உழைப்பை மறைமுகமாக உறிஞ்சிக்கொண்டு அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன.
- தொழில்நுட்பம் ஒருவேளை அதிகாரத்தை குவிப்பதற்குப் பதிலாக பரவலாக்குவதற்கு பயன்பட்டிருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
- பெருநிறுவனங்கள் மற்றும் எதேச்சதிகாரத்திலிருக்கும் அரசாங்கங்களால் ஏற்படும் விபரீத விளைவுகள், அவற்றைச் சரிசெய்ய தேவையான ஒருசில நடவடிக்கைகள்.
வழக்கத்துக்கு மாறாக இரண்டுமாதகாலம் எடுத்து இப்புத்தகத்தை விட்டுவிட்டு வாசிக்க நேர்ந்தது. காரணம், இடையில் சில புனைவுகளை வாசிக்கச் சென்றுவிட்டேன். ஆனாலும், இப்புத்தகம் பேசும் கறு மனதுக்குள் ஆழமாக பதிந்துவிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வாசித்தாலும், எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளதால், விரைவாகவே வாசிக்க முடிகிறது. உலக வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆர்வமிருப்பவர்கள் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய புத்தகம்.