6 நிமிட வாசிப்பு

நான் ஒரு வருடகாலமாகச் சில சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறி வருகிறேன். முதலில் Whatsappதான். அடுத்து Facebook, Instagram, Clubhouse. LinkedInல் அவ்வளவு Dopamineஐ உறிஞ்சுவதில்லை, எனவே இதுவரை விட்டுவைத்திருக்கிறேன். இப்போதைக்கு Twitter தளத்தில்தான் என் நேரம் வீணாகிறது. அதிலிருந்தும் மெல்ல வெளியேறிவிட வேண்டும் என்று யோசித்துவருகிறேன். Youtubeல் நான் அதிக நேரம் செலவிடுவதில்லை என்றாலும், அதிலிருந்து வெளியேறுவது எனக்குக் கடினமாகவே இருக்கப்போகிறது.

கடந்த 6-7 வருடங்களாக மிகத்தீவிரமாக அவற்றில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். அவற்றை முழுமையாக வெறுத்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. அவற்றிலிருந்து சில நன்மைகளையும் அடைந்துள்ளேன். குறிப்பாக Facebook. அதில்தான் Asan Ideas for Wealth என்கிற ஒரு குழுமம் உள்ளது. என் நண்பன் பரிந்துரைத்ததால் அந்தக் குழுமத்தில் 2018ல் இனைந்தேன். அவர்கள் மூலமாகவே பொருளாதாரம், Investment, Inflation, FIRE (Financially Independent Retire Early), Term Insurance, Health Insurance, Equity, Debt, Liability, Asset, Mutual Funds, Index Funds, ETF, மற்றும் பங்கு வர்த்தகம் என்று எல்லாவற்றையும் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஏன் நாம் மிக இளமையிலிருந்தே காப்பீடு மற்றும் பங்கு முதலீடுகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் கற்றுக்கொண்டேன். அந்தக் குழுமத்தில் இருக்கும், Pattu, Ashal Ji, Subramoney போன்றோர்களை அறிமுகம் செய்துகொண்டேன். அவர்களின் சில புத்தகங்களையும் படித்து அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள், அதன் நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பற்றி விரிவாகவே ஆராய்ந்து என் சொந்த காப்பீடு மற்றும் முதலீடுகளை ஆரம்பித்தேன்.

Youtube உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான். வேலை முன்னேற்றம், தொழில்நுட்பக்கல்வி, பொருளாதாரம், கணிதம், அறிவியல் என்று எதை எடுத்தாலும், என்னால் நல்ல தரமான channelகளை பின்தொடரவும் அவற்றின் மூலமாகக் கற்கவும் முடிகிறது. அதில் காட்டப்படும் விளம்பரங்கள் நிச்சயமாக நேர விரயம்தான். அதனைத் தவிர்க்கக் கட்டணம் செலுத்தியும் நமக்குப் பயன் உண்டுதான். அதேபோல Twitter தளத்திலேயே என்னால் சில தொழில்நுட்ப வல்லுநர்களைத் தொடர முடிகிறது. அதன்மூலமாக என்னைத் துறை ரீதியாக ஓரளவுக்கு up to date என்று சொல்ல முடிகிறது.

இவற்றின் சேவைகளை முற்றிலும் இலவசமாகவோ அல்லது சொற்ப தொகையைச் செலுத்தியோ நம்மால் நல்ல பயனை அடைய முடியும். Spotifyல் நல்ல Podcastகள் கிடைக்கின்றன. நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது அவற்றைக் கேட்டு நாட்டு நடப்புகளையும், மற்றும் சில பயனுள்ள தகவல்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது. Clubhouse தளத்தில், Thyrocare முன்னாள் தலைவர் Dr. Veeramani அவர்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்களின் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதுதான். அதுவும் நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது.

சமூக ஊடகங்கள் இந்த அளவுக்குப் பயனளித்தாலும், நான் பிரச்சனை என்று உணர ஆரம்பித்தது, எனக்கு Dopamine தேவை அதிகரித்துக்கொண்டே சென்றபோதுதான். அத்தகைய வலைத்தளங்கள் மேற்கூறிய நல்ல விஷயங்களை வெறும் 10% அளவுக்கே நமக்குக் காண்பிக்கின்றன. மற்ற நேரம் நாம் முழுக்க வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக நிதர்சன வாழ்க்கை நமக்குச் சலிப்பு தட்ட ஆரம்பிக்கும்போது, அபாய கட்டத்தை நெருங்கிவிடுகிறோம். எனக்கு நினைவிலிருந்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். நான் பெரும்பாலும் எந்த ஊடகத்திலும் பதிவுகளைப் போடுவதில்லை. மற்றவர்களுடைய பதிப்புகளுக்கே வினையாற்றுவேன்.

ஒருமுறை 2015ல் நான் வேலைசெய்த நிறுவனத்தில் எனக்கு விருது கொடுத்தார்கள். அதனை Facebook தளத்தில் பதிவிட்டுவிட்டு, இரண்டு நாட்களாக எனக்கு எவ்வளவு Likeகள் வருகின்றன, யார் யாரெல்லாம் வினையாற்றி இருக்கிறார்கள் என்று 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் தூக்கத்திலும் விழித்திருந்த உணர்வே இருந்தது.

அதன்பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நான் Facebookல் மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருந்ததாக நினைக்கிறேன். அந்தப் போராட்டம்குறித்து எந்தப் பதிவு வந்தாலும், உடனே என் சுவரில் பகிர்ந்து கொள்வது, அவற்றை like செய்வது என்று, என் நண்பர்களுக்கே எரிச்சல் வரும் அளவுக்கு நடந்துகொண்டேன். அதன்பிறகு வேலைநாட்களில் சக ஊழிய நண்பர்களுடன் மதிய சாப்பாட்டிலும் சரி, தேநீர் இடைவேளைகளிலும் சரி, ஏதாவது Trend ஆகிக்கொண்டிருக்கும் Memeகளையும், பிரபலங்களையும் பற்றி மட்டுமே பேசிக்கொள்வேன். அவற்றை நினைத்தால் இப்போது விந்தையாக இருக்கிறது.

ஒருகட்டத்தில், என்னால் மற்றவர்களுடன் உரையாட இவற்றைத் தவிர்த்து எதுவுமே இல்லையா என்று யோசித்தபோதுதான், மண்டையிலேயே சுத்தியலில் அடித்ததுபோல உணர்ந்தேன். அதற்குள் இலக்கியங்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆசிரியர் ஜெயமோகன் தளத்தை 2011 முதல் வாசித்து வருகிறேன். அவர் தொடர்ந்து இந்தத் தளங்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தாலும், என்னால் முயன்றும் வெளியேற இயலவில்லை.

அந்நாட்களில் எப்படியும் வாரத்துக்கு ஒரு புத்தகமாவது வாசித்து முடித்திருப்பேன். நான் வாசித்த புத்தகங்களைப் பற்றிச் சில பதிவுகளை இட ஆரம்பித்திருந்தேன். அவற்றுக்கு ஒரு எதிர்வினையும் இருக்காது. மெல்ல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் வாசிப்பு மற்றும் எழுத்துக்கான பயிற்சிப் பட்டரைகளில் தொடர்ந்து கலந்துகொள்ள ஆரம்பித்து, இலக்கியத்திலும், என் மேற்படிப்பு மற்றும் வேலையிலும் ஈடுபாட்டை அதிகரித்து, இந்த ஊடகங்களிலிருந்து மெல்ல வலிக்காமல் வெளியேறினேன்.

முதலில் Whatsapp. அதிலிருந்து வெளியேறுவதுதான் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாகக் குடும்ப சுற்றத்தார். அப்போதுதான், Facebook தனது கட்டுப்பாடுகளை Whatsappல் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. மேலும் யோசிக்காமல் அதையே காரணம் காட்டி வெளியேறிவிட்டேன். பிறகு Facebookல் நுழைவதைக் குறைத்துக்கொண்டேன். முதலில் வாரம் பிறகு மாதங்களாகியது. கடைசியாகக் கணக்கையே முடித்துக்கொண்டேன். மொத்தமாக வெளியேறும்போது எந்த வலியும் இல்லை. இப்போதைக்கு Twitter கணக்கில்தான் சற்று தடுமாறிக்கொண்டிருக்கிறேன். அடுத்த குறி Twitterதான்.

வழக்கமான சினிமாக்களையும், கிரிக்கெட் விளையாட்டுகளையும், தொலைக்காட்சித் தொடர்களையும் பின்தொடர்வதை நிறுத்திவிட்டேன். முன்பெல்லாம் BBC Earth, Discovery, Animal Planet, National Geography என்று சில தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். Webseriesகளில் முதலிலிருந்தே எனக்கு நாட்டம் இருந்ததில்லை. இப்போதெல்லாம் மிகவும் மதிப்பிடப்பட்ட கலைப்படைப்புகளையோ அல்லது ஆவணப்படங்களையோ பார்ப்பதோடு சரி. இப்போது என்னால் எந்த நூலையும் கவனக்குறைவு இல்லாமல் மணிக்கணக்கில் வாசிக்க முடிகிறது. எந்த வேலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடிகிறது. இப்போதும் சில தாவல்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஒரு புத்தகத்தை எடுத்துப் பாதி படித்துவிட்டு, மற்றொரு புத்தகத்துக்குத் தாவுவது மெல்லக் குறைத்துக்கொண்டு வருகிறேன். இதில் முன்னேற்றம் அடைய முடியும் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வளவு மாற்றங்களையும் நான் எனக்குள் முன்னேற்றமாகக் கண்டாலும், மற்றவர்களின் கண்களுக்கு, நான் வேரொரு தனிமையான உலகத்தில் உழல்வதாகத் தோன்றிவிடுகிறது. அவர்களுடன் என்னால் பெரும்பாலும் எந்தச் சுவாரசியமான உரையாடலையும் மேற்கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய உலகும் என்னுடைய உலகும் இப்போதைக்கு வேறுவேறு திசைகளில் சுழல ஆரம்பித்திருக்கின்றன. இதுவும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.