Into the Wild - திரைப்படம்
2007ல் வெளிவந்த திரைப்படம். முக்கிய சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. இதன் கதைக்கரு Chris McCandless
என்ற அமெரிக்க பயணியின் உண்மையான அனுபவங்களைத் தழுவி முதலில் நாவலாக வெளிவந்தது. ஒரு வேலைநாளில் முடிவில் இப்படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. இப்பதிவில் எனது திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கதைச்சுருக்கம்
ஒரு 23 வயது இளைஞன் தனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, தனது குடும்பத்துடன் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறான். தாய்க்கு அவன் படித்து பட்டம் பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. விடுதிக்கு செல்லும்போது தனது தோழியையும் அழைத்துச் செல்கிறான். உணவின் மத்தியில் அவனது மேற்படிப்பு ஆர்வத்தை பெற்றோரிடம் விவரிக்கிறான். தந்தை ஆர்வமில்லாமல் அதற்கான மேற்படி செலவுகளை அவர்கள் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார். அவர்கள் சேர்ந்து மகனுக்கு புதிய கார் வாங்கித்தருவதாக சொல்கிறார். அதில் அவனுக்கு ஆர்வமில்லாததை அறிந்து சோர்வடைகிறார்கள்.
மேற்படிப்புக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு தனது பழைய காரில் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறான். வழியிலேயே கையிலிருந்த பணத்தை கொளுத்திவிட்டு, தனது அடையாள அட்டை முதற்கொண்டு எல்லாவற்றையும் கிழித்து எறிந்துவிடுகிறான். பயணத்தில் ஒரு பாலைவனத்தில் காரை நிறுத்திவிட்டு தூங்கிவிடுகிறான். அவனது காரை பெருவெள்ளம் சூழ்ந்துகொண்டு அடித்துச்சென்றுவிடுகிறது. கரை ஒதுங்கியதும், காரையும் அங்கேயே விட்டுவிட்டு நடைபயணம் செல்ல ஆரம்பிக்கிறான். எங்கெங்கோ சென்று வெவ்வேறு வகையான மனிதர்களைச் சந்தித்து விலகிச் செல்கிறான்.
கடைசியாக அவன் விரும்பிய அலாஸ்காவில் தங்க முடிவெடுக்கிறான். உறைந்துகிடந்த ஒரு நதிக்கரையினூடே நடந்துகொண்டிருக்கையில் கரையின்மேலே ஒரு பழைய பேருந்தை கண்டுகொள்கிறான். அதில் யாரோ தங்கிச்சென்ற தடயங்கள் உள்ளன. அதிலேயே தங்கிக்கொள்ள முடிவெடுக்கிறேன். விதவிதமான புத்தகங்களை வாசிக்கிறான். தனது பயண அனுபவங்களை குறிப்பெடுத்துக்கொள்கிறான். சில வாரங்களுக்குப்பிறகு அவன் கையிருப்பில் வைத்திருந்த அரிசியின் அளவும் அவனின் உடல் எடையும் குறைந்துகொண்டே வருகிறது. தனது துப்பாக்கியைக்கொண்டு வேட்டையாடி உண்டு சமாளிக்கிறான். ஒருகட்டத்தில் கையிருப்பில் எதுவும் இல்லாததால், பட்டினி கிடக்கிறான். அப்போது அவனுக்கு மகிழ்ச்சி குறித்தான கேள்வியும் விளைவாக விடையும் கிடைக்கிறது.
சொசைட்டிக்கு வெளியே
பயணத்தினூடே அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் ஏதோ ஒன்றில் தங்களைப் பிணைத்துக்கொண்டு நிலையாக நின்றுவிடுகிறவர்களாகவே அவனுக்குத் தெரிகிறார்கள். எல்லோரும் அவன் அவர்களுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் அவனோ எல்லோரையும் விட்டு விலகிச்செல்லவே விரும்புகிறான். ஒரு கோதுமை அறுவடை செய்யும் குழுவுடன் இனைந்துகொள்கிறான். அங்கே தனது வேலைக்கான ஊதியத்தைப் பெற மறுக்கிறான். அவர்கள் தங்களுடனேயே தங்கிவிடும்படி வற்புறுத்துகிறார்கள். அறுவடைக்குப்பின் கூத்தடிக்கும் அக்குழுவிடம் ஒரு விவாதத்தில், இந்த சொசைட்டியிலிருந்த முழுதும் விலகி பயணிக்க விரும்புவதாக சொல்கிறான். அவர்களின் தலைவன் காவலர்களால் ஏதோ காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டதும் அவர்களிடமிருந்து விலகிச்சென்றுவிடுகிறான்.
வழியில் தொடர் பயணத்திலிருக்கும் ஒரு தம்பதியைச் சந்திக்கிறான். அவர்கள் இருவரும் இருவேறு குடும்பங்களிலிருந்து பிரிந்து பயணத்தினூடே சேர்ந்துகொண்டவர்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு பயணக் குழுவிலும் இனைந்துகொள்கிறான். அங்கே ஒரு பதின்ம வயது அழகான பெண்ணைச் சந்திக்கிறான். அவளுக்கு அவனைப் பிடித்துப்போகிறது. அவள் உறவுக்காக அழைக்கும்போது, அவளிடம் நட்பாகவே இருக்க விழைவதாக அறிவித்து அவளைத்தொடாமல் விலகிவிடுகிறான்.
அங்கிருந்து கிளம்பிச்சென்று ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியைச் சந்திக்கிறான். அவர் எந்த சுவாரசியமுமற்ற வாழ்க்கையில் உழன்றுகொண்டிருக்கிறார். அவரை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச்சென்று, தனக்கு குடும்பம் என ஒன்று இல்லை என்று அறிவிக்கிறான். அவரோ குடும்பமும் சொசைட்டியும் மனிதனுக்கு ஏன் அவசியமானது என்று அறிவுறுத்துகிறார். அவன் கிளம்பிச்செல்லும்போது அவரால் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவனைத் தனது பெயரனாக தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாக சொல்கிறார். அவனோ, தனது பயணத்தை முடித்துவிட்டே அதைப்பற்றி யோசி்ப்பதாக சொல்லிவிட்டு விலகிவிடுகிறான்.
இப்படியாக தான் சந்திக்கும் எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகிக்கொண்டே செல்லும் அவனுக்கு அடிப்படையில் தனது தந்தையால் ஏற்பட்ட அவமானமே முக்கியமான பிரச்சனை. தனது தாய் அவருடன் முறையற்ற திருமணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தனது தாய்க்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை. அவனுடைய கல்லூரித்தோழியும் தாய் தந்தையின் குடும்பப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவள். இவை எல்லாமும் சேர்ந்து அவனை அழுத்தி சொசைட்டியை வெறுக்கச் செய்துவிடுகிறது. அதிலிருந்து சுதந்திரமான வாழ்வென ஒன்று உண்டா என்கிற கேள்விக்கு விடைதேடியே தொடர் பயணத்தில் இருக்கிறான்.
மகிழ்ச்சி
கதாநாயகனுக்கு இருக்கும் வாழ்க்கைத் தேடல் என்பது உண்மையில் இந்த சொசைட்டி அமைத்துக்கொடுக்கும் வசதிகள், நியதிகளுக்கு வெளியே மனிதனுக்கு மகிழ்ச்சி என்ற ஒன்று இருக்க முடியுமா என்பதுதான். ஹிப்பிக்களாக அலைந்துகொண்டிருக்கும் மனிதர்களுமே கூட ஏதோ ஒரு வகையில் நட்புடனோ அல்லது சக பயணிகளுடன் உறவுகளை அமைத்துக்கொண்டோ வாழவேண்டி இருக்கிறது. உண்மையில் இவற்றுக்கு வெளியே மகிழ்ச்சியை எவரும் தேடிச்செல்லவே இல்லையோ என்கிற கேள்வி அவனுக்கு தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு இந்தியத் துறவியின் வாழ்க்கையைத்தான் அவன் நாடிச் சென்றுகொண்டிருந்தான்.
இயற்கையின் குரூரத்தில் சிக்கிக்கொண்டு அலாஸ்காவின் தனிமையில் உணவு கிடைக்காமல் பசியால் வாடிக்கொண்டிருக்கையில், அவனுடைய மகிழ்ச்சி குறித்த கேள்விக்கான விடை கிடைக்கிறது. அவனைப் பெயரனாக தத்தெடுக்க விரும்பிய முதியவர் சொன்ன வாக்கு நினைவுக்கு வருகிறது: பழைய பிரச்சனைகளை மறப்பதால் மகிழ்ச்சி ஒளிகொண்டெழும். அடுத்த அடியை எடுத்துவைக்க இயலாத சமயத்தில் அவன் தனது குடும்பம் மற்றும் நட்புடன் வாழ விரும்புகிறான். தனது கடைசி மூச்சை உள்ளிழுக்கும் முன், அவன் குறிப்பேட்டில் எழுதிவைத்த வாக்கு இதுதான் Happiness only real when shared
.
எனது பயணங்கள்
நான் அதிகம் தனிப்பயணங்களை விரும்புகிறவன். திடீரென்று முடிவெடுத்து டிக்கெட் கிடைத்தால் கிளம்பிவிட விரும்புவேன். என் திருமணத்தை ஒத்திப்போட்டதற்கு எனது பயண விருப்பை முதற்காரணமாக சொல்லலாம். திருமணமாகி, 5 மாத கர்ப்பவதியான மனைவியை சென்னையில் விட்டுவிட்டு, நான் வடகிழக்கு இந்தியாவுக்கு ஒரு பயணம் செய்தேன். பயணத்தினூடே மனதுக்கு அவ்வப்போது தோன்றிய இடத்துக்கெல்லாம் சென்றுகொண்டே இருந்தேன். குடும்பத்தை கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தேன். கிடைத்ததை உண்டு, சத்திரங்கள், இரயில் நிலையங்கள், ஊர் சுற்றிகள் தங்கும் சிறிய அறைகள் என்று கிடைத்த இடங்களிலெல்லாம் தங்கிக்கொள்வேன். மிகச் சொற்ப காசையே கையிருப்பில் வைத்திருந்தேன். அவ்வளவு மனித முகங்கள், மொழி தெரியாவிட்டாலும், அவ்வளவு அணுக்கமாக உணரமுடியும். வெறும் சிலமணிநேரங்களோ, நிமிடங்களோ நீடிக்கக்கூடிய நட்பு.
எனக்கு இப்படியான தத்துவக் கேள்விகள் உள்ளுக்குள் இருந்ததில்லை என்றாலும், தற்காலிகமாக சொசைட்டியிலிருந்து விலகிக்கொள்வது மகிழ்வளிக்கிறதா என்றால் நிச்சயமாக ஆம் என்றே சொல்வேன். நாம் வாழும் சூழலிலிருந்து சற்று விலகி அதை நோக்கும்போதுதான் அதிலுள்ள அபத்தங்கள் நமக்குப் புலப்படுகின்றன. அதேசமயம் குடும்பவாழ்வை முழுவதுமாக அனுபவிக்காத ஒருவனுக்கு அதிலிருந்த முழுமையாக விலகுவதும் சாத்தியமற்றதே.
இத்திரைப்படத்தில் கதாநாயகன் சந்தித்த மனிதர்களை நானும் எனது பயணங்களினூடாக சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அவனைப்போலவே அச்சந்தர்ப்பங்களுக்கு எதிர்வினையாற்றிவிட்டு விலகியும் இருக்கிறேன். அவ்வகையில் என்னை அவனுடன் இணைத்துக்கொள்ள முடிகிறது. இத்திரைப்படம் எனது இனிய நினைவுகளை கிளறிவிட்டிருக்கிறது.
பயணங்களை விரும்புகிறவர்களுக்கு இத்திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.