10 நிமிட வாசிப்பு

வெவ்வேறு துறைகளில் வேலைசெய்துகொண்டு நிதிச் சுதந்திரத்தை அடைவதில் நாட்டம் உள்ளவர், மற்ற எல்லா நீண்டகால முதலீட்டு வழிகளையும் அறிந்துகொண்டு, கடைசியாக வந்து சேரவேண்டிய முதலீட்டுத் திட்டம் Index திட்டம்தான். Index திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Index வகை முதலீடுகள் என்னால் என்ன?

நாம் ஏற்கெனவே பார்த்த மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் திட்டங்களில் ஒரு வகையே Index திட்டம். மற்ற திட்டங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், இதில் முதலீடு செய்யவேண்டிய நிறுவனங்களையும் அவற்றின் முதலீட்டுச் சதவிகிதத்தையும் முடிவெடுப்பது ஒரு வெளிப்படையான formula. அந்த வெளிப்படையான formulaஐ பின்தொடர்வதைத் தவிர, திட்ட மேலாளருக்குப் பெரிய வேலையில்லை. இந்த வகை முதலீடுகளை நாம் passive முதலீடுகள் என்று அழைக்கிறோம். முதலீட்டை மட்டும் செய்துவிட்டு, நாம் நம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடலாம். அடிக்கடி கண்காணிக்கவேண்டிய அவசியமில்லை.

எடுத்துக்காட்டாக Nifty 50 என்கிற indexஐ எடுத்துக்கொள்வோம். இந்த indexல் Nifty பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 50 நிறுவனங்கள் இடம்பெறும். பங்கு கொண்டிருக்கும் மூலதனத்தின் (free float market capitalization) அடிப்படையில் இந்த நிறுவனங்கள் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நம் முதலீட்டு விகிதமும் அந்த indexஇலேயே வரையறை செய்யப்பட்டிருக்கும். indexல் உள்ள முதல் நிறுவனத்துக்கு நம் முதலீட்டின் அதிக சதவிகிதம் செல்லும். அப்படியே அடுத்தடுத்த நிறுவனங்களுக்கான சதவிகிதம் குறைந்துகொண்டே வரும். இந்த பட்டியல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்படும். பட்டியலுக்கு ஏற்ப அந்த index திட்டம் தனது முதலீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Index முதலீட்டில் உள்ள நன்மைகள்:

  1. வெளிப்படைத்தன்மை ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதனைக் கண்காணிப்பது, அது சரியாகச் செயல்படாமல் போனால், மற்ற திட்டங்களுக்குத் தாவுவது என்று நமக்கு நிறைய முதலீட்டுச் சிக்கல்கள் உள்ளன. பொதுவெளியில் நன்கு அறிமுகமான, எல்லோரும் பயன்படுத்தும் ஒரு formulaஐ நாம் முதலீட்டுக்கு எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், நமக்கு இத்தகைய சிக்கல்கள் கணிசமாகக் குறைந்துவிடுகின்றன. நாம் எல்லோருமே வெவ்வேறு துறைகளில் செயல்படுபவர்கள். பங்குச்சந்தையை அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இதில் இல்லை.

  2. திட்ட மேலாளரின் வேலை பொதுவாக ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக இருந்தால், இதுவரை எவ்வாறு செயல்பட்டிருக்கிறது, யார் அதை நிர்வகிக்கிறார், அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கட்டணம் என்ன என்று நிறைய விஷயங்களைப் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவேளை அந்த மேலாளர் நாம் முதலீடு செய்தபிறகு மாற்றப்பட்டாலோ, அல்லது அவர் வேறு நிறுவனத்துக்குத் தாவிவிட்டாலோ, புதிதாக வரும் மேலாளர் எப்படிச் செயல்படுவார் என்று நமக்குக் குழப்பம் வரும். இந்த பிரச்சனை indexல் இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு indexஐ பின்தொடர முடியும்.

  3. செலவு குறைவு ஒரு பொது formulaஐ பின்தொடரும் index திட்டங்களுக்கு ஆகும் செலவு, மற்ற திட்டங்களுக்கு ஆகும் செலவைவிடக் கணிசமாகக் குறையும். ஒரு திட்ட மேலாளர் தன்னுடைய actively managed திட்டத்துக்காக வைத்திருக்கும் formulaக்கு எடுத்துக்கொள்ளும் கட்டணம் மிக அதிகம். அவருக்குச் செலுத்தும் கட்டணத்தில் நாம் அதிக முதலீடுகளைச் செய்யலாம். Index திட்டங்களுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை. எனவே சிக்கலும் குறைவு, அதன் விளைவாக விலையும் குறைவாகவே கிடைக்கும்.

  4. Benchmarking எல்லா முதலீட்டு formulaக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க indexஐத்தான் பயன்படுத்துவார்கள். 2008ல் உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warran Buffet, அந்நாட்டு hedge fundகுழுமங்களுக்கு ஒரு பந்தயத்தை வைத்தார். அந்த பந்தயத்தில் அவர் அமெரிக்காவில் பிரபலமான S&P500 என்கிற indexல் 1மில்லியன் டாலரை முதலீடு செய்தார். அவரை எதிர்த்த hedge fund 1 மில்லியன் டாலரைத் தனது formulaல் முதலீடு செய்தது. 2018ல் வெளிவந்த முடிவில், Warran Buffetதான் வென்றார். அவர் வென்றதற்கான முதற்காரணம், அவர் தேர்ந்தெடுத்த எளிமையான செலவு குறைந்த முதலீட்டு வழிதான். பொதுச் சந்தையில் கிடைக்கப்பெறும் திட்டங்களில் 80%க்கும் மேல், அவர்களே ஒப்பிடும் ஒரு indexஐ தொடர்ந்து வென்றதில்லை. எதிர்த்து வெல்வதில் உள்ள வழிகளைவிட, அந்த benchmark indexஇலேயே முதலீடு செய்யலாம்.

  5. Diversification உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில துறைகள் சில வருடங்களுக்கு நல்ல இலாபம் ஈட்டும். மற்றவை சுமாராகவோ அல்லது நஷ்டத்துடனோ இயங்கும். இந்த வகையான மாற்றங்கள் நம் முதலீட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மியூச்சுவல் ஃபண்டுகள் இத்தகைய சூழ்நிலைகளைக் கணித்து அதற்கேற்ப தங்களின் உத்தியை மாற்றிக்கொள்வார்கள். indexல் உள்ள வரிசைப்பட்டியலில் இது எப்படித் தானாகவே வேலைசெய்கிறது என்று பார்ப்போம். அதிக இலாபம் ஈட்டும் நிறுவனம் வரிசையில் மேலே ஏறிக்கொண்டேவரும். நன்றாக இலாபம் ஈட்டாத நிறுவனம் வரிசையில் பின்செல்லும். நாம் எந்த சிக்கலும் இன்றி, இலாபம் ஈட்டும் நிறுவனத்தில் முதலீட்டை அதிகரிக்கிறோம். இலாபம் குறையும் நிறுவனத்தில் முதலீட்டைக் குறைக்கிறோம். இது எல்லாம் எளிதாக நடப்பதால், நாம் நிம்மதியாக நமது துறையில் கவனத்தைச் செலுத்தலாம்.

Index வகை passive முதலீட்டில் ஈடுபடும்போது நாம் என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும்?

மற்ற திட்டங்களைப்போல் அல்லாமல், இவற்றில் நாம் கவனிக்கவேண்டியவை குறைவாகவும், எளிமையானதாகவும் இருப்பதே Index திட்டங்களின் சிறப்பு. நாம் முன்பே பார்த்ததுபோல் பல்வேறு AMC நிறுவனங்கள் ஒரே Indexக்கு திட்டங்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக Nifty 50 Indexஐ எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட எல்லா AMC நிறுவனங்களுமே இந்த Indexக்கு ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். அதில் நமக்குச் சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க, பின்வரும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் போதுமானது.

  1. திட்டத்தில் முதலீட்டு அளவு (Asset under management) ஒரு Index திட்டம் ஏற்கெனவே பெற்றிருக்கும் முதலீடும் நமக்கு முக்கியமானது. நம் முதலீட்டை விற்று வெளியேறவேண்டிய சூழ்நிலை வந்தால், அந்த பங்குகளை அன்றைய சந்தை விலைக்கு யாராவது வாங்கிக்கொண்டு பணத்தை நமக்கு அளிக்கவேண்டும். மிகவும் குறைந்த முதலீட்டை பெற்றுள்ள திட்டத்தில் நாம் முதலீடு செய்யும்பட்சத்தில், இத்தகைய சூழ்நிலையில் நம்மால் விரைவில் வெளியேற முடியாது போகலாம். எனவே, குறைந்தது 500கோடிகளைக் கையாளும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல 3000 கோடிகளுக்கு மேல் முதலீட்டைக் கையாளும் திட்டத்திலும் சேருவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம், அவ்வளவு அதிக தொகையைக் கையாளுவதற்கு அந்த திட்ட மேலாளருக்குக் கடினமாக இருக்கும். இதனால் திட்டம் Indexஐத் தொடர்வதில் சில சிக்கல்கள் வரலாம். இந்த 500-3000கோடி சட்டகத்துக்குள் பொருந்தும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

  2. செலவுத் தொகை (Expense ratio) மற்ற முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் Index திட்டங்களில் ஆகும் செலவு நமக்குக் குறைவாகவே இருக்கும். ஆனால், ஒரே Index முதலீட்டுக்கு, நிறுவனங்கள் வெவ்வேறு விலையை வைத்திருப்பார்கள். அதில் விலை மிக அதிகமாக உள்ள திட்டத்தை நாம் நேராகவே தவிர்த்துவிடலாம். விலை குறைவாக வைத்துள்ள நிறுவனங்கள் சில உத்திகளைக் கையாள்வார்கள். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, அவர்கள் செலவுத் தொகையைக் குறைவாகவே வைத்திருப்பார்கள். இதில் அவர்கள் நஷ்டத்தில் இயங்கக்கூடும். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் தொகையை எட்டியவுடன் விலையை ஏற்றிவிடுவார்கள். அது முதலீட்டாளர்களை எரிச்சலடையச்செய்யும். இந்த சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க, நாம் செலவுத்தொகையை ஓரளவுக்குக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், செலவுத்தொகை மிகவும் குறைவாக உள்ள திட்டங்களைச் சந்தேகத்துடனே கையாள வேண்டியுள்ளது.

  3. Tracking error ஒரு Indexக்கும் திட்டம் செயல்படும் விதத்துக்கும் வேறுபாடு குறைவாக இருக்கவேண்டும். Indexல் ஒரு நிறுவனம் 1% முதலீட்டிலிருந்து 1.1% முதலீட்டுக்கு மாறினால், அந்த மாற்றம் நம் திட்டத்தில் எவ்வளவு வேகமாகச் செய்யப்படுகிறது என்பது முக்கியம். கூடுமானவரை Indexஐச் சரியாகப் பின்தொடரும் திட்டத்தையே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும், இந்த tracking error குறைவாக உள்ள திட்டங்களைத்தான் நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  4. முதலீட்டுக் கட்டுப்பாடுகள் ஒரு திட்டத்திலிருந்து வெளியேறவோ அல்லது, புதிய முதலீடுகளைச் செய்துகொள்ளவோ நமக்கு எளிதாக இருக்கவேண்டும். சில திட்டங்களில், ஒரு வருடகாலத்துக்குள் நம் முதலீட்டைத் திரும்பப்பெறுவதாக இருந்தால், முதலீட்டின் குறிப்பிட்ட % தொகையை நாம் கட்டணமாகச் செலுத்த நேரிடலாம். இத்தகைய கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் திட்டத்தில் நம் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. அதேபோல, மொத்தமாகவும், மாதம் ஒருமுறையும் முதலீடு செய்வதற்கு வசதிகளைத் திட்டம் வழங்கவேண்டும். அதில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கும் பட்சத்தில், அந்த திட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

Index vs ETF:

Index திட்டங்கள் இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகின்றன. Index fund மற்றும் Exchange Traded Fund. வழக்கமாக நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தாலோ அல்லது அதனை விட்டு வெளியேறினாலோ, நம் கணக்கில் மாற்றம்பெற ஓரிரு நாட்கள் ஆகும். ஆனால் Exchange Traded Fund என்பது நாம் ஒரு நிறுவனத்தின் பங்கை எப்படி சந்தையில் வாங்கி விற்கிறோமோ அதேபோல ETF திட்டமும் சந்தையில் நேரடியாக வாங்கி விற்றுக்கொள்ளும் வசதியை அளிக்கிறது. ஆனால் அதில் உள்ள முதன்மைச்சிக்கல், நமக்கு பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கான தரகுக் கணக்கு வைத்திருக்க வேண்டியிருக்கும். இரண்டாவது சிக்கல், இந்தியாவில் ETFகளில் மக்கள் அவ்வளவாக முதலீடு செய்வதில்லை. அதனால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் ETFகளில் அதிகமாகவே இருக்கும். எனவே இந்தியாவைப் பொருத்தவரை Index fundகள்தான் சிறந்தவை. ETFகளில் பின்வரும் வருடங்களில் முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றில் முதலீடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம்.

Indexல் Equity vs Debt:

இத்தகைய Indexகள் இந்தியாவில் பெரும்பாலும் Equity வகைக்கே மிகப்பொருந்துகின்றன. கடன் பத்திரங்களுக்கும் Index இருந்தாலும், அவை இன்னமும் பிரபலமாகவில்லை. மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் அதிகம் உள்ளன. நம் முதலீட்டில் debt பகுதிக்கு மட்டும் நாம் நல்ல நிறுவனத்தின் actively managed fundஐத் தேர்ந்தெடுப்பதே இப்போதைக்கு நல்லது. Equity பகுதிக்கு நாம் நிச்சயமாக Indexஐத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது.

அடுத்தடுத்த பதிவுகளில் என்ன எதிர்பார்க்கலாம்?

இதுவறை நிதிச் சுதந்திரத்தில் குறித்த தொடர் எனது தொடர் பதிவுகளில், முதன்மையாக அதன் தேவை என்ன, அதனை அடைவதற்கு நம் கைவசமுள்ள பல்வேறு வழிமுறைகள், அவற்றில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்று விரிவாக பார்த்தோம்.

ஆனால் வேறொரு துறையில் செயல்படும் எனக்கு இந்தத் துறையில் மற்றவர்களுக்கு முதலீட்டு ஆலோசனை வழங்கும் அளவுக்கு பயிற்சியோ, பட்டறிவோ கிடையாது. நான் SEBIல் பதிவுசெய்துகொண்ட அலோசகனும் அல்ல. மேலும் கடந்த 4-5 வருடங்களாகவே ஒரு தேர்ந்தெடுத்த வழிமுறையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அவற்றைக் கண்காணிக்கவும் கற்றுக்கொண்டு செயல்படுத்தியும் வருகிறேன். இதில் தவறுகள் இருக்கலாம். அவற்றை நான் என் அனுபவம் மூலமே சரிசெய்துகொள்ள முடியும்.

எனவே அடுத்துவரும் பதிவுகளில் நான் எதற்கு, எப்படி இங்கு வந்து சேர்ந்தேன், என்னுடைய இப்போதைய முதலீட்டுப்பயணம் எப்படி இருக்கிறது, எனக்கு உகந்த திட்டங்களை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்பதை மட்டும் பதிவிட முடிவு செய்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் DIY முறையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவராக இருந்தால், என் முதலீட்டுப்பயணம் உங்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

என் முதலீட்டுப் பயணம் குறித்த அடுத்தடுத்த பதிவுகலுக்காக ஆவலாக உள்ளேன்.

புதுப்பிக்கப்பட்டது: