7 நிமிட வாசிப்பு

கல்லூரிப்படிப்பு முடித்து 2011ல் வேலைக்குச் சேர்ந்தேன். 2018ல் திருமணம் செய்துகொள்ளும் வரையில் சேமிப்பு, முதலீடு, பங்குச்சந்தை, காப்பீடு, போன்ற வாக்கியங்களைக் கேட்கும்போதே எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்துவிடும். 2018ல் தொடங்கி இன்றுவரை நான் எங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்பதைப்பற்றியே இந்தப் பதிவு.

2011 தொடங்கி 2018 வரை நான் சம்பாதித்ததைச் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்கும், மற்றும் சில சில்லறை விஷயங்களுக்காகவுமே செலவு செய்துவிட்டிருந்தேன். வாசிப்பில் எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தாலும், அதுவரை சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த எந்த புத்தகத்தையும் தொட்டதில்லை. நான் முதன்முதலில் மியூச்சுவல் ஃபண்டுகளைப்பற்றி 2018ன் தொடக்கத்தில்தான் தெரிந்துகொண்டேன். முதல் பரிசோதனையாக இரண்டு பிரபலமான ELSS ஃபண்டுகளில் ரெகுலர் திட்டத்தில் சொற்ப அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். அதுவும் அரசாங்கத்துக்கு 80Cல் கணக்குக் காட்டுவதற்காக. கையில் ஒரு பைசா இல்லாமல்தான் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். முதல் சிலநாட்களிலேயே பதட்டம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

Asan ideas for wealth:

மியூச்சுவல் ஃபண்டு கணக்கு ஆரம்பித்த சிலநாட்களிலேயே, மேலும் தகவல்களைத் தேடி என் முதலீட்டில் உள்ள சில முக்கியச் சிக்கல்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அடுத்த கட்டமாக, regular முறையிலிருந்த SIP திட்டங்களை direct முறைக்கு மாற்றினேன். அதில் கிட்டத்தட்ட 2%க்கும் மேலாக கட்டணமாக கட்டிக்கொண்டிருந்த அதே திட்டத்தை 1% செலவுக்குள் கொண்டுவந்தேன். இதில் கிடைத்த அனுபவம் எனக்கு இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது. நண்பனின் உதவியில் Asan ideas for wealth என்கிற facebook குழுமத்தில் சேந்தேன். வீடு மற்றும் நிலங்களில் செய்யப்படும் முதலீடுகளில் உள்ள முக்கியச் சிக்கல்களை இங்கேதான் அறிந்துகொண்டேன். சென்னையில் ஒரு வீட்டை 2019ன் ஆரம்பத்தில் வாங்கிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த எனக்கு, இந்த குழுமத்தில் நடந்த உரையாடல்கள் நல்ல வழிகாட்டியாக அமைந்தன. மனைவியின் சம்மதத்துடன், வீடு வாங்குவதைத் தள்ளிப்போட்டுவிட்டு முதலில் அதற்கான முதலீட்டில் இறங்க முடிவெடுத்தேன்.

freefincal.com

Asan ideas for wealth குழுமத்தில்தான் freefincal.com நடத்தும் IIT Madrasன் இயற்பியல் பேராசிரியர் பட்டுவைப் பற்றி அறிமுகம் கிடைத்தது. அவரின் வலைத்தளத்தையும் தீவிரமாகப் பின்தொடர்ந்துகொண்டிருந்தேன். அவரின் இரண்டு புத்தகங்களை kindleல் வாங்கி வாசித்தேன். தொடர்ந்து அவரின் retirement குறித்த course ஒன்றிலும் சேர்ந்துகொண்டேன். அதில்தான் முதன்முதலில் நிதிச் சுதந்திரம் பற்றிய அறிமுகம் கிடைத்தது. நீண்டகால முதலீடுகளுக்கும், குறுகிய கால முதலீடுகளுக்கும் என்ன வேறுபாடு, ஏன் அவசரத்துக்குத் தேவையான சேமிப்பை முதலீடாகக் கணக்கிடக் கூடாது என்று பல விஷயங்களை அறிந்துகொண்டேன். நிதிச் சுதந்திரம் குறித்து அறிந்துகொள்ள விழையும் எவரும் பட்டுவின் Youtube கணக்குகளைப் பின்தொடரலாம். மற்ற ஆலோசகர்களைப் போலல்லாமல், இவர் நேரடியாகவும் வெளிப்படையாகவும், தேவையான தகவல்களுடன் அலசுவது எனக்குப் பிடித்திருந்தது.

பட்டுவைப் பொருத்தவரை, அவர் வைத்திருக்கும் சில மென்பொருட்களை வாங்கவில்லையென்றாலும், அவர் வெளியிட்ட புத்தகங்களை எல்லாம் வாசித்திருக்கிறேன், அவர் நடத்திய பட்டரைகளிலும் கலந்துகொண்டு அவரின் ideaஐ அறிந்துகொண்டேன். facebook குழுமத்தில் கேட்கப்படும் அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அவர் எரிச்சலடைந்து ஒரு காணொலியைப் பதிவிட்டாலும், அதில் நேர்மையுடனும் அக்கரையுடனுமே அவருடைய வாதம் இருக்கும். தனது முதலீட்டை வெளிப்படையாக வலைத்தளத்திலேயே வருடந்தோறும் அலசும் அவரிடம், நான் கற்றுக்கொண்டது முதன்மையாக முதலீட்டில் ஒழுக்கம். ஒரு முதலீட்டு வழியை நன்கு அலசி முடிவெடுத்துவிட்டால், அதில்தான் தீவிரமாக ஈடுபடவேண்டும். கண்ட படிக்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எல்லா திட்டங்களையும் நோக்கி நாம் அலைபாய்ந்துகொண்டிருக்கக் கூடாது. அவரை அறிமுகம் செய்துகொள்வதற்குமுன் கிட்டத்தட்ட 6-7 திட்டங்களில் இலக்கில்லாமல் முதலீடு செய்துவைத்திருந்தேன். இப்போதும் குறங்கு மண்டை எதையாவது யோசித்தாலும், அவரை நினைத்துக்கொள்வேன், உடனே தெளிந்துவிடும். பேராசிரியர் வாழ்க!

Emergency funds

பட்டுவிடம் கற்றுக்கொண்டதை வைத்து எனது portfolioஐ தயாரிக்க ஆரம்பித்தேன். முதலில் அவசரக் காலத்துக்குத் தேவையான 6 மாத வீட்டுச் செலவு, அவசர மருத்துவச் செலவுக்குத் தேவையான பணத்தை liquid fund ஒன்றில் சேமிக்க ஆரம்பித்தோம். இந்த சேமிப்பு, எங்களது 3 மாத குழந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது மருத்துவச் செலவுக்குத் தக்க சமயத்தில் உதவியது. காப்பீட்டுத் தொகை கைக்கு வந்தவுடன் மீண்டும் அந்த சேமிப்புக் கணக்கிலேயே போட்டுவிட்டோம். இந்த கணக்கின் இலக்கை இராணுவத்தீவிரத்துடன் கவனித்துவருகிறோம். என்னைப்பொருத்தவரை இத்தகைய கணக்கு எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமாக இருந்தாக வேண்டியது. சேமிப்பின் விதம் மாறினாலும், இதில் இருக்கவேண்டிய முக்கிய விஷயம், அவசரத்தேவை வரும்பட்சத்தில் அதிகபட்சம் 5-6 மணிநேரத்துக்குள் பணம் கைக்கு வந்தாகவேண்டும். அடுத்தது சேமிப்பில் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். இதில் நாம் அதிக risk எடுக்கலாகாது.

ஆயுள் காப்பீடு

என் உறவினர்களில் சிலர் காப்பீட்டுத்துறையில்தான் இருக்கிறார்கள். நான் வேலைக்குச் சென்ற 2011ல் இருந்தே ஒரு காப்பீட்டை எடுத்துக்கொள்ள அவர்களின் வற்புறுத்தல் இருந்தாலும், எப்படியோ அத்தகைய பயனற்ற endonment, moneyback திட்டங்களிலிருந்து தப்பித்துவிட்டேன். அதன் விளைவாக, காப்பீடு என்றாலே தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை மேலே குறிப்பிட்டிருந்த சில வழிகளில் அறிந்துகொண்டதும், முதல் வேலையாக எனக்கு ஆயுள் காப்பீட்டை எடுத்துக்கொண்டேன். முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்ததைப்போலவே, எந்த சிறப்புத் திட்டமும் இல்லாத ஆயுள்காப்பீடு திட்டத்தை எனது 60 வயதுவரை எடுத்துவைத்திருக்கிறேன். அதற்கு வருடம் ஒருமுறை மறக்காமல் சந்தா கட்டிவருகிறேன்.

மருத்துவக் காப்பீடு

என் முதலீட்டுப் பயணத்திலேயே அதிகம் தடுமாறியது இதில்தான். 2020 முதலிலிருந்தே உலகமே கோவிட் தொற்றால் கதறிக்கொண்டிருந்த சமயம். எனது நெருங்கிய உறவினர்கள் சிலர் இதில் சிக்கி இறந்தது, மரணத்தை நெறுங்கிவிட்டு திரும்பியது என்று, மிகவும் பதட்டமாகவும் நிலையழிந்தும் இருந்த சமயம். எப்படியாவது ஒரு நல்ல மருத்துவக காப்பீட்டை வாங்கிவிடவேண்டும் என்று வேலை நேரத்தில் எல்லாம் இணையத்தில் துழாவிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல, பட்டுவின் வலைத்தளத்தில் விலைமதிப்பற்ற சில தகவல்களைச் சேகரித்துப் பட்டியலிட்டிருந்தார்கள். அதன் உதவியுடன் ஒருவழியாக எங்கள் குடும்பத்துக்குச் சொந்த செலவில் முறையான மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்டோம். நாங்கள் வாங்கியது ஒரு பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து, விலையும் கூடுதல்தான். எல்லோரும் தனியார் வழங்கும் காப்பீடே சிறந்தது என்கிறார்கள். எனக்கு இன்னும் அதில் தெளிவில்லை என்பதே உண்மை. இதுவரை நான் வேலைசெய்யும் நிறுவனக் காப்பீட்டுத் திட்டங்களையே நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். என்னைப்போல எல்லோரும் இதில் தடுமாறுவார்களா என்று தெரியவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சொந்த அனுபவம் இதில் ஓரளவுக்குக் கைகொடுக்கலாம். எதற்காக இருந்தாலும், நான் agentகளை நம்புவதில்லை. அவர்களுக்கு கமிஷன் எதில் அதிகம் கிடைக்கிறதோ, அதை நம் தலையில் கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

Index funds

அந்த facebook குழுமம் மற்றும் பட்டுவின் வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது index fundsஆகத்தான் இருக்கவேண்டும். முதலில் சில குழப்பங்கள் எனக்கு இருந்தாலும், விரைவாகச் செயல்பட்டு எனது நீண்டகால முதலீடுகளை index fundsக்கு மாற்றிக்கொண்டேன். இப்போதும் குறைந்த அளவிலான தொகை ELSS திட்டங்களில் சிக்கிக்கொண்டுள்ளது. ஆனாலும் என் முதன்மையான முதலீடு எப்போதும் index திட்டங்களில்தான். அதிலும் எனக்குப் பிடித்தது Nifty மற்றும் Nifty Next 50 index திட்டங்கள்தான். என் முதலீட்டின் equity பாகத்திற்காக இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். எனது ஓய்வூதியம், மகனின் மேற்படிப்பு, வீடு வாங்குவது என்று எல்லா வகையான நீண்டகால முதலீடுகளையும் நான் இந்த முறையிலேயே செய்கிறேன். மற்ற வகை முதலீடுகளைவிடச் செலவு குறைவானது, எந்த குழப்பமும் இல்லாமல் வெளிப்படைத்தன்மை உள்ள திட்டம். எனக்கு இது நன்றாகவே வேலை செய்கிறது.

உங்களுக்கு என்னுடைய முதலீட்டுப்பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவுடன் எனது நிதிச் சுதந்திரம் குறித்த பதிவுகளை முடித்துக்கொள்கிறேன். உங்களின் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு நிதிச் சுதந்திரம் பெற எனது வாழ்த்துகள்.

புதுப்பிக்கப்பட்டது: