நிதிச் சுதந்திரம்-1
இன்றைய இந்தியச் சூழலில், நாம் நிதிச் சுதந்திரம் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமல் வாழ்வது கத்திமேல் நடப்பதற்குச் சமம். நம் முன் தலைமுறையினர் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வாக்கியம், ‘கழுதை மேய்த்தாலும் கவர்மென்ட்டில் மேய்க்க வேண்டும்’ என்பதே. ஆனால் இன்றைய இந்தியா முற்றிலும் வேறாக நம்முன் மாறிநிற்கிறது. இதைப் பற்றிய எனது அறிதல்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.
சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய மிகச்சுருக்கமான அறிமுகத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். நம் முதல் பிரதமர் நேரு மற்றும் அச்சமயம் அவருடன் இயங்கிய அறிவாளிகளும் இந்தியாவை ஒரு இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட நாடாகக் கட்டி எழுப்பக் கணவு கண்டார்கள். அச்சமயம் இரண்டாம் உலகப்போர் முடிவுற்று சீனா, சோவியத் இரஷ்யா போன்ற பெரிய இடதுசாரிச் சர்வாதிகார நாடுகளில் அந்தக் கொள்கை நல்ல பயனளிப்பதை அவர்கள் கண்டார்கள். ஆனாலும் இந்தியாவை ஒரு நல்ல இடதுசாரி ஜனநாயக நாடாக உருவாக்க விரும்பினார்கள். எனவே, ஜனநாயக அரசாங்கமே தொழில்துறை முதல் எல்லா துறைகளையும் கையாண்டது.
கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே அரசாங்க நிறுவனங்கள்தான். பணம் ஓரிடத்தில் குவிவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டிருக்கலாம். இதுவே கிட்டத்தட்ட இந்திராகாந்தி அம்மையார் ஆட்சிவரை நீடித்தது. அதில் உருவானவைதான் இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களும். ஆனால், 1990களில், சோவியத் இரஷ்யா உடைந்து இடதுசாரிக் கொள்கைகளின் மேல் ஒரு சோர்வும் நம்பிக்கையின்மையும் வரத்தொடங்கியது.
அதே சமயம், இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு சில நாட்களுக்கே நீடிக்கும் அளவுக்குப் பாதாளத்தில் போய்க்கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும், இந்தியப் பொருளாதாரம் திவாலாகலாம் என்கிற சூழ்நிலை. அச்சமயம் நரசிம்மராவ் தலைமையில் மன்மோகன்சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கும் தனியாருக்கும் திறந்துவிட்டார். அதிலிருந்து லைசென்ஸ் ராஜ் என்கிற சட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட துறைகளைத்தவிரப் பெரும்பாலானவற்றில் தனியாரின் முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. அதன்பிறகு நாம் இன்று காணும் இந்தியா முதலீடுகளை ஈர்க்கும் பட்டியலில் கடைசியிடங்களிலிருந்து 50-60 இடத்துக்கு முன்னேறியுள்ளது.
எனக்கு முன் தலைமுறையினர் பெரும்பாலான செல்வந்தர்கள் அல்லது வறுமைக்கோட்டுக்கு மேலே வாழ்ந்தவர்கள், பரம்பரைச் சொத்துக்களைக் கொண்டிருந்தவர்கள், அரசு ஊழியர்கள், நிலச்சுவான்தாரர்கள் என மிகச்சிலரே. இதில் மிகவும் சிறிய கூட்டமே தனியார் தொழிலதிபர்கள். அவர்களால் லைசன்ஸ் ராஜ் போன்ற சட்டங்களைத் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. ஆனால் கடந்த இருபது வருடங்களில், இந்தியா இடதுசாரிக் கொள்கைகளைப் பெரும்பாலும் கைவிட்டுவிட்டு வலதுசாரிக் கொள்கைகள் மேலோங்கியுள்ளது.
இதற்குச் சிறந்த உதாரணம், இரண்டு நாட்களுக்கு முன்பாக, இந்தியாவில் 5G அலைக்கற்றை சேவையை நம் பிரதமர் துவங்கிவைத்தார். அதில் சுவாரசியமான செய்தி, இந்தியாவில் முதலில் 5G சேவை வழங்குவது இரண்டு தனியார் பெருநிறுவனங்களே. பொதுத்துறை நிறுவனமான BSNL, இப்போது இழப்பு அதிகமாகி இரண்டு தலைமுறைக் கிழவியான 3G சேவையை மட்டுமே வழங்கிவருகிறது. அவர்களால் தங்களுடைய ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் ஆயிரக் கணக்கானவர்களை VRS மூலம் வெளியேற்றிவிட்டார்கள். 2023ல் அவர்கள் தங்களின் 4G சேவையை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 90களுக்கு முன்பு அரசாங்க ஊழியர்களாக இருந்தவர்களுக்கு, பணவீக்கத்துக்கு மேலான சம்பளமும், ஓய்வூதியம், மருத்துவச்சேவை போன்றவை அவர்களின் சேவைக்காக, அவர்களுக்கும் அவர்களின் துணைக்கும் வாழ்நாளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை ஒருகட்டத்தில் அதிகரித்து, நிறுவனங்களால் இலாபம் பார்க்க இயலாமல், பெரும் நிதிச்சுமையில் சிக்கிக்கொண்டன. இன்றும் பெரும்பாலான பொதுத்துறை மற்றும் அரசாங்க அமைப்புகள் கடும் நிதிச்சுமையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்குமேல் அரசு மற்றும் அரசு சார் துறைகளில், வேலைவாய்ப்பு குறைந்துகொண்டுதான் இருக்கும். அதற்குப்பதிலாகத் தனியார் வசம் அவை ஒப்படைக்கப்படும்.
இதன் விளைவாகத் தனியார்த் துறையில் வேலைசெய்பவர்கள் 60 வயதுவரை கணக்குக்கு இருந்தாலும், பெரும்பாலானவர்களை நிறுவனங்கள் குறைந்த வயதிலேயே வீட்டுக்கு அனுப்பிவிட வாய்ப்புள்ளது. மேலும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு போன்றவற்றை ஊழியர்களே ஓய்வுக்காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதே சமயத்தில், இந்தியாவின் சராசரி வாழ்நாள் 60-70வயதைத் தாண்டிச் சென்றுவிட்டது. மருத்துவ மேம்பாட்டினால் இந்த முன்னேற்றம்.
ஒரு விதத்தில், இது நல்ல விஷயம் என்றாலும், அதிக வயதுவரை வாழ்பவர்களுக்கு ஆகும் தினசரிச்செலவு, மருத்துவச்செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட அரசாங்கம், முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, முதலீட்டாளர்களுக்கு மேலும் வரிச்சலுகைகளை அளித்து, அரசு நடத்தத் தேவையான வரியை அந்நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்களின் வருமானவரியிலிருந்து எடுத்துக்கொள்ளும். இது போதாதென்று, அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தங்களின் வருமானத்தை மேலும் அதிகரிக்க, நுகர்வோரை அதிகமாக வாங்கும்படி ஊக்குவிக்கின்றன.
கடன் அட்டைகள், தனிநபர்க் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் என்று எல்லாவிதங்களிலும் கடன் வழங்கி நம் சம்பளத்தை வீட்டுக்குக் கொண்டுவருவதற்குள்ளேயே உருவி விடுகின்றன. HDFC, ICICI போன்ற இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகள், பெரும்பாலும், தனிநபர்க்கடன்களிலேயே கவனம் செலுத்தி, இவ்வளவு வளர்ந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து எளிதாக ஒரு சிறு அல்லது குறு தொழிற்கடன் நம்மால் வாங்கிவிட முடியாது. மேலும், பொருளாதாரம் உலகமயமானதால், எந்த நாட்டில் ஏற்படும் பிரச்சனைக்கு நம் நாட்டிலும் பாதிப்பு இருக்கும்.
நம் முன் தலைமுறையைச் சேர்ந்தவர்களால், ஒரே துறையில் வாழ்நாளெல்லாம் செயல்பட்டு, அதில் கிடைத்த ஓய்வூதியத்தில் ஓய்வுக்காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் இத்தலைமுறையினர், சற்று சிரமமாக இருந்தாலும், தங்களுக்கு விருப்பமான துறையில் சிறப்பாகச் செயல்படவே விரும்புகின்றனர். மேலும், அவர்களின் கனவுகளும் விருப்பங்களும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். என் விஷயத்தில், எனக்கு மென்பொருள் துறையைவிட இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படவே விருப்பம். வெளிப்படையான விஷயம், இலக்கியம் நம் அகத்தை மட்டுமே மேம்படுத்தும். எந்த வகையிலும், சமூகம் நம் இலக்கிய வாசிப்புக்கோ, படைப்புக்கோ மதிப்பளிக்கப்போவதில்லை. மறந்துகூடக் காதலியிடமும், திருமண ஏற்பாட்டின்போது பெண்வீட்டாரிடமும் நம் இலக்கிய ஆசைகளைப் பற்றி உளறிவிடக் கூடாது. விளைவு பயங்கரமாகவே இருக்கும்.
எனவே இப்போதைக்குச் சோறுபோடும் வேலையை உதறிவிடாமல், சிறப்பாகச் செயல்பட்டு, முடிந்த அளவுக்குச் சிக்கனமாகவும், அதிகமாகவும் சம்பாதித்து, வரும் வருமானத்தை வெறும் சேமிப்பில் வைத்திராமல், இலாபமீட்டும் நிறுவனங்களில் முதலீடு செய்துவைத்தால், அது வளரும். எவ்வளவு வேகமாகவும், இளவயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவு விரைவாக நம் விருப்பமான துறைக்குத் தாவிக்கொள்ள முடியும். நிறுவனங்களுக்கு வேலைசெய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் இலாபத்தில் பங்கெடுத்து, குறைந்த வரியை அரசாங்கத்துக்குச் செலுத்திவிட்டு, நம் விருப்பத்துறையில் சுதந்திரத்துடன் செயல்பட முடியும்.
நிதிச் சுதந்திரம் என்பது ஒரு பெரிய கருத்துப்படிவம். இந்தப் பகுதியில், அதன் அடிப்படைத் தேவைகளைப்பற்றி பதிவிட்டிருக்கிறேன். மேலும் வரும் பதிவுகளில், அதனை நான் எப்படி அடைய முற்படுகிறேன் என்று எழுதுகிறேன்.