8 நிமிட வாசிப்பு

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இருப்பதிலேயே மருத்துவக் காப்பீடுதான் நிதிச் சுதந்திரத்தை நாடிச்செல்பவர்களுக்குக் கடினமான கரிமலையேற்றப் பகுதி. கடப்பதற்குள் நிறைய தன்னீர் குடிக்க வேண்டிவரும். சோர்வடையாமல் கவணத்துடன் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. இந்தப் பதிவில் இதை எப்படி எதிர்கொள்வதென்று பார்ப்போம்.

ஏன் மருத்துவக் காப்பீடு நமக்கு முக்கியம்? இது தேவைப்படும் தருனத்தில், மனிதன் தன்னுடைய பொருளாதாரத் திடம் மட்டுமல்லாமல், மன உறுதியையும் சுயபரிசோதனை செய்துகொள்கிறான். தனக்கோ, அல்லது தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ மருத்துவச் சிக்கல் வரும்போது, நிதானத்துடனும் சரியாகவும் முடிவெடுப்பவர்கள் மிகவும் அறிதானவர்கள். மேலோட்டமாக யோசித்தால், குடும்பத்தில் சிலரது தவறான பழக்க வழக்கங்களால்தான் வருமையோ, கடனோ வந்துசேரும் என்ற முடிவுக்கு வருவோம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் தங்களின் பெரும்பகுதி செல்வத்தை இழந்து, கடனாளியாகி, வருமையில் வீழ்வது இத்தகைய சூழ்நிலைகளில்தான். மருத்துவச் செலவுகளும் மன உளைச்சல்களும் நம் வாழ்வை புரட்டிப்போடும் ஆற்றல் கொண்டவை. இந்தியாவில் பெரும்பாலான குடும்பம் இதற்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் மருத்துச் செலவுகளைத் தவிர்த்துவிட்டு, நிதிச் சுதந்திரம் பற்றி எந்தக் குடும்பமும் யோசிக்கவே முடியாது,

சரி, இதற்கு எப்படி நம்மைத் தயார்செய்துகொள்ள வேண்டும்? முதலில், நம் கையிருப்பில் உள்ள செல்வத்தை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாது என்று உணர வேண்டும். அதற்காகத் தனி budget போட்டாலும் நம்மால் சமாளித்துவிட முடியாது. இத்தகைய தருனங்களுக்காக நம்மைத் தயார்செய்துகொள்ள மருத்துவக் காப்பீடு நல்ல நண்பனாக இருக்க முடியும். சென்ற பகுதியில் ஆயுள் காப்பீடு பற்றிக் கற்றுக்கொண்ட அறிவு, இதற்குப் பயன்படுமா என்றால், 10%க்கு மேல் பயனளிக்காது என்பதே உண்மை.

ஏன் அப்படி? ஆயுள் காப்பீடு ஒரு குறிப்பிட்ட வயதுவரை குடும்பத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே எடுத்துக்கொள்வது. ஆனால், மருத்துவக் காப்பீடு என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இது கணக்கில் எடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சந்தா கட்டவேண்டியது. அடுத்து, ஆயுள் காப்பீடு எடுத்த முதல் தவணையிலிருந்து கடைசித் தவணைவரை ஒரே தொகைதான். எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. ஆனால் மருத்துவக் காப்பீட்டுத் தவணை விலை கூடிக்கொண்டே செல்லும். இந்தச் செலவு சிலவருடங்கள் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வரக்கூடும்.

மருத்துவக் காப்பீட்டில் உள்ள அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன?

  1. காப்பீடு எடுத்துக்கொள்ளும் நபர், வயது கூடக்கூட தவணைத்தொகை கூடிக்கொண்டே போகும். சில குறிப்பிட்ட வயதுக்குமேல், விலை வழக்கத்தைவிட பல மடங்கு கூடிவிடும். ஆனாலும், காப்பீடு அவசியம்.

  2. எவ்வளவு இளம் வயதில் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்கிறோமோ, அவ்வளவு நல்லது. குடும்ப உருப்பினர்களில், 50 வயதை நெருங்கிக்கொண்டோ அல்லது தாண்டியோ இருந்தால், அவர்களுக்குக் காப்பீடு எடுப்பது மிகச் சிரமமாகவே இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் காப்பீட்டை வழங்க மறுத்துவிடுவார்கள். கொடுத்தாலும், அதிகத்தொகைக்கு அதிக கட்டுப்பாடுகளுடனே வழங்குவார்கள்.

  3. காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நபரின் உடல்நலம். இளம் வயதில் காப்பீடு எடுத்துக்கொண்டால், நம் ஆரோக்கியத்தைக் கணக்கில்கொண்டு எளிதாகக் காப்பீடு வழங்கிவிடுவார்கள். வயது கூடக்கூட நமக்கும் உடல்நலக் கோளாறுகள் அதிகமாகும். அப்போது நம் உடல் நலனைப் பொருத்து விண்ணப்பம் நிராகரிக்கப்படவோ அல்லது மிகுந்த நிபந்தனைகளுடனோதான் ஏற்கப்படும்.

  4. புதிதாக விண்ணப்பித்துப் பெறப்பட்ட காப்பீட்டில், நமக்கு ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்குச் சில வருடங்களுக்குப் (பெரும்பாலும் 2-4) பணம் தரமாட்டார்கள். காத்திருப்பு காலம் முடிந்தபிறகே அந்நோய்களுக்கான சிகிச்சைப் பணம் பெற முடியும். மற்ற நோய்களுக்கு முதல் நாளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

  5. நோயுற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிய குறைந்தது 24 மணிநேரம் ஆகும் பட்சத்தில் மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இவை தவிர்த்து, மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சில நோய்களுக்குச் சிகிச்சை நேரம் 24 மணிநேரங்களுக்குள் வந்தால், அந்த சிகிச்சை காப்பீட்டு நிறுவனத்தின் Daycare Treatment பட்டியலில் இருந்தால் மட்டுமே காப்பீடு வழங்குவார்கள். இல்லையென்றால், உங்களால் காப்பீடு வாங்க முடியாது. சாதாரண OPD மருத்துவத்துக்கு காப்பீடு பொதுவாக வழங்க மாட்டார்கள், வழங்கினாலும் அந்த பாலிஸி விலை அதிகம் இருக்கும்.

  6. விபத்து போன்ற சமயங்களைத் தவிர்த்து, அழகுக்காக செய்யப்படும் Plastic surgery போன்ற மருத்துவத்துக்கு, காப்பீடு கிடைக்காது. ஆச்சரியமாக பெரும்பாலான பாலிஸிகளில், கண், பல் போன்ற உருப்புகளின் சிகிச்சைகளும் காப்பீட்டுக்குள் வராது. அப்படி வந்தாலும், விலை அதிகமாக இருக்கும்.

  7. நாம் நினைப்பதைவிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு நம்மைப் பற்றி அதிகம் தெரியும் என்ற உண்மை நமக்குத் விளங்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, நமக்கு இருக்கும் நோய்களை மறைக்காமல், எல்லாத் தகவல்களையும், தகுந்த ஆவணங்களுடன் வழங்கிவிட வேண்டும். இல்லையென்றால், காப்பீடு வழங்கப்பட்டாலும், ஒருவேளை அவர்கள் நீங்கள் வழங்காத தகவல்களைப் பற்றி அறிய நேர்ந்தால், உங்களின் claim நிராகரிக்கப்படலாம். அல்லது உங்களின் காப்பீடே திரும்பப்பெறப்படலாம். நீங்கள் கட்டிய சந்தாவும் திருப்பித்தர மாட்டார்கள். மற்றொரு காப்பீடு வாங்குவதிலும் சிக்கல் வரலாம்.

  8. மருத்துவக் காப்பீடு இரண்டு வகையில் வழங்கப்படுகிறது. Floater மற்றும் individual. Floater காப்பீட்டில், குடும்ப உருப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே பாலிஸி இருக்கும். பாலிஸித் தொகை எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும், தவணையும் சற்று குறைவாக இருக்கும். Individual வகையில், பாலிஸியில் உள்ள settlement தொகை குடும்ப உருப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்படும். விலையும் அதிகமாகும். எ.கா., 10லட்சம் floater பாலிஸியில், ஒரு வருடத்தில், குடும்ப உருப்பினர்கள் அனைவரும் சேர்த்து, 10 லட்சத்திற்கு claim செய்துகொள்ளலாம். அதே individual பாலிஸியில் குடும்ப உருப்பினர் ஒவ்வொருவருக்கும் 10லட்சம் claim கிடைக்கும்.

  9. Floater பாலிஸியில் தவணைத் தொகை, குடும்ப உருப்பினர்களில் முதியவரின் வயதைப் பொருத்து நிர்ணயிக்கப்படும். Individual பாலிஸியில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தவணைத்தொகை நிர்ணயிக்கப்படும்.

  10. மேலே குறிப்பிட்ட முக்கிய இரண்டு வகைகளைத் தவிர்த்து, மேலும் பல வகைகளில் Addon பாலிஸிகள் உள்ளன. இந்தப் வகைப் பாலிஸிகள், தனியாகக் கிடைக்காது, floater அல்லது individual பாலிஸிக்கு Addon அல்லது மதிப்புக்கூட்டப்பட்ட பாலிஸியாக வழங்கப்படும். இதில் முக்கியமானது Topup பாலிஸி. இதன் பலன், முதன்மைப் பாலிஸியை நாம் முழுவதும் உபயோகித்து விட்டால், இந்தப் பாலிஸி செயல்படத்தொடங்கும். இதன் தவணைத்தொகை குறைவாக இருக்கும், அதே சமயம் அதிகத் தொகை காப்பீடு செய்துகொள்ளலாம். முதன்மைக் காப்பீடு மற்றும் Topup பாலிஸிகளை ஒரே நாளில் வாங்க வேண்டும். வெவ்வேறு நாட்களில் வாங்கினால், நிறைய சிக்கல்கள் வரும்.

  11. முதன்மைப் பாலிஸிகளுக்கு மட்டும் பணமில்லாச் சேவையை நிறுவனங்கள் வழங்கும். அதாவது, நீங்கள் நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், செலவுகளுக்கு, நீங்கள் தொகையைச் செலுத்தவேண்டியதில்லை. இந்தச் சேவை, குறிப்பிட்ட மருத்துவமனைகளிலேயே வழங்கப்படும், அவற்றை Network hospital என்று நிறுவனம் குறிப்பிட்டிருக்கும். மற்று மருத்துவமனைகளில், நீங்கள் அனுமதிக்கப்பட்டால், மருத்துவச்செலவை, நீங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு, எல்லா ஆவணங்களையும் மருத்துவமனையில் இருந்த விடுவிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் (பெரும்பாலும் 15) அவர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் பரிசீலனை செய்து தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள்.

  12. Topup பாலிஸிகளில், பெரும்பாலும் நீங்கள் செலவை முதலில் செய்துவிட்டு, பிறகு உரிய ஆவணங்களை அவர்களுக்குச் சமர்ப்பித்து, தொகையைப் பெறவேண்டிவரும். மருத்துவமனை காப்பீட்டு நிறுவனத்தின் Network Hospital வகைக்குள் வந்தாலும், உங்களால் பணமில்லாச் சேவையைப் பெற முடியாது.

  13. முதன்மை மற்றும் Topup பாலிஸிகளை ஒரே நிறுவனத்தில்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஒரே நாளில் வாங்குவது நல்லது.

  14. நீங்கள் வைத்திருக்கும் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ, அவர்கள் உங்கள் ஊரில் சேவை வழங்கவில்லை என்றாலோ, அல்லது எந்தக் காரணத்தாலோ, நீங்கள் காப்பீட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். காத்திருப்பு காலம், மற்றும் மற்ற பலன்கள் அனைத்தும் எந்தப் பாதிப்புமின்றி மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பும் நிறுவனம் அதே பாலிஸியையோ அல்லது அதற்கு இணையான பாலிஸியையோ வழங்குவார்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

  15. ஒரு காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளரைப் பொருத்தவரை முன்று பகுதிகளில் செயல்படுகிறது. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வது, காப்பீட்டை வற்பனை செய்வது. Claimகளை பரிசீலனை செய்து உறிய தொகையை வாடிக்கையாளருக்கு வழங்குவது. முதல் பகுதியில் நீங்கள் காப்பீட்டு தரகர்களையும் மருத்துவ பரிசோதனை மையங்களையும் சந்திப்பீர்கள். அவர்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்ல, ஒப்பந்ததாரர்கள். இரண்டாவது பகுதியை நிறுவனமே மேற்கொள்ளும். மூன்றாவது பகுதியைப் பெரும்பாலும் TPA (Third Party Adminstration) ஒப்பந்ததாரர்கள்தான் செய்வார்கள். இந்த தகவல்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டவை, எனக்குத் தெரிந்த சில அடிப்படைத் தகவல்கள். நான் சிலவற்றைத் தவறவிட்டிருக்கலாம் அல்லது காலாவதியாகியும் இருக்கலாம்.

சரி, இப்போது சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம். ஆனால், வெறும் அரைக் கிணறுதான் தாண்டியுள்ளோம். இனிதான் முழுப்பிரச்சனை ஆரம்பிக்கப்போகிறது. நமக்கு இன்னும் பல மருத்துவத் தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: