4 நிமிட வாசிப்பு

சென்ற பகுதியில் இதுவரை நமக்குத் தெரிந்த பழக்கமான சில நீண்டகால முதலீடுகளைப் பற்றியும் அவற்றில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். ஆனால் முதலில் எவை எல்லாம் நீண்டகால முதலீடுகள், அவற்றில் என்னென்ன வகைகள் உள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியம். அதைப்பற்றி இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஓய்வுக்காலம்

நீண்டகால முதலீடுகள் என்று வந்தவுடன் நமக்கு முதலில் அத்தியாவசியமானது, நம்முடைய பணிமுடிந்த ஓய்வுக்காலம்தான். நாம் ஏற்கெனவே அறிந்துகொண்டதுபோல, மனிதனின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நாம் ஓய்வுபெறும் வயது குறைந்துவிட்டது. நாம் நீண்ட நாட்களுக்கு வேலையில்லாமல் ஓய்வில் இருக்கப்போகிறோம். அது ஒருவகையில் மகிழ்ச்சிக்குறியது என்றாலும், இன்னொறு விதத்தில் சிக்கலானதும் கூட. நல்ல ஆரோக்கியமானவர்களுக்கே 60 வயதைத் தாண்டியதும் உடல்நலச் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அச்சமயத்தில் நமக்கு மருத்துவக்காப்பீடு இருந்தாலும், கையில் பணமில்லாமல், நம் அடுத்த சந்ததியை நம்பி வாழ இயலாது. அவர்களுக்கு ஏற்கெனவே சுமை அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பார்த்தால் நமக்கு நன்றாகத் தெரியும். எனவே, நாம் நம் ஓய்வுக்காலத்துக்காக இப்போதிருந்தே சேமிக்கவேண்டும். சிலர், இளம் வயதிலேயே வேலையை விட்டுவிடுகிறார்கள். தங்கள் ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு முடிந்ததும், சம்பிரதாயமான வேலையை உதறிவிட்டு, தனக்குப் பிடித்தமான துறையில் இறங்கிவிடுகிறார்கள். இத்தகைய இலக்கு உள்ளவர்களுக்கு முதலில் அவசியமானது, ஓய்வூதியம்தான். அரசாங்கத்தை நம்பிப் பலனில்லை.

பிள்ளைகளின் உயர்கல்வி

இப்போதெல்லாம், உயர்கல்விச் செலவு வருடத்துக்கு 10-15% வளர்ந்துவருகிறது. அப்படியிருக்க நம் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை முடிந்தவரை ஏற்பது இந்தியாவில் அவசியமாகிறது. நம் சேமிப்பு ஓரளவுக்கு உதவினால், அவர்கள் இளம் வயதிலேயே அதிகக் கடன் சுமைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில், பள்ளிக்கல்வி இலவசமாகவும் நல்ல தரத்துடனும் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை மொத்தமாக அவர்கள் உயர்கல்வியில் வாங்கிவிடுகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியே வரும்போது, கடனாளியாகிவிடுகிறார்கள். இந்தியாவிலும் இது இப்போதே தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு நம்மைத் தயார்செய்துகொள்வது அவசியம். நம் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களின் உயர்கல்விக்கு நாம் தனித்தனியாக சேமிக்க ஆரம்பிக்கவேண்டும்.

வீடு

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய நிதிச்சிக்கல் வீடு கட்டுவதுதான். இது ஒரு அடிப்படைத் தேவை என்பதால், பலரால் இதனைத் தவிர்க்க இயலாது. பலர் தங்களின் 20 அல்லது 30களிலேயே வீட்டுக் கடனுக்குள் சிக்க்கிவிடுகிறார்கள். அவர்களால் EMI தவிர்த்து எந்த சேமிப்பிலும் அடுத்த 20 வருடங்களுக்கு ஈடுபட முடிவதில்லை. தைரியமாக வேலை மாற்றுவது முதற்கொண்டு இதனால் சிக்கல் வந்துவிடுகிறது. கடைசியில் அந்தக் கடனை அடைப்பதிலேயே அவர்களின் ஆயுள் முடிந்துவிடுகிறது. முடிந்தவரை வீடு வாங்கவதையோ/கட்டுவதையோ தவிர்த்துவிட்டு, அதற்கான முதலீட்டில் ஈடுபடலாம், குறிப்பிட்ட தொகை கைக்கு வந்தவுடன் மொத்தமாக சொந்தப்பணத்தை வைத்தோ அல்லது குறைந்த அளவுக் கடனுடனோ இதனைச் சாத்தியமாக்க முடியும். ஒருவேளை வீடு உடனடியாக அவசியப்படுகிறது என்றால், அந்த EMIஐக் கட்டிக்கொண்டே எப்படி வேறுவகை முதலீடுகளில் ஈடுபட முடியும் என்று யோசிக்கவேண்டும்.

வாகனம்

இந்தியாவில் கார் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்குப் பல்வேறு சுற்றுச்சூழல், சமூகச்சூழல் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதே சமயம் அரசும், ஒரு வாகனம் 15 வருடங்களுக்கு மேல், சாலையில் பயன்படுத்தப்படக் கூடாது என்று சட்டம் போட்டுவிட்டது. ஒருவேளை நம்மிடம் வாகனம் ஏற்கெனவே இருந்தாலோ அல்லது எதிர்காலத்தில் புதிதாக வாங்கும் திட்டம் இருந்தாலோ, நாம் நம்மைத் தயார்செய்துகொள்ள முதலீடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம்.

மற்ற செலவுகள்

மற்ற எந்தச் செலவும் குறைந்தது 5 வருடங்களுக்குப் பிறகு வரும் என்றால், நாம் அத்தகைய செலவுகளைச் சமாளிக்க, இப்போதிருந்தே நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

முதலீட்டின் வகைகள்

நீண்டகால முதலீட்டில் இரண்டு வகைகள் உண்டு. நம் ஓய்வூதியம் முதல் வகையில் வருவது. அதில் நம் முதலீட்டை ஒரேயடியாக எடுத்துச் செலவழிக்க வேண்டியதில்லை. பணிமுடிந்து ஓய்வுக்காலத்தில் நம் ஆயுட்காலம் முழுவதுமாக அடிக்கடி எடுத்து பயன்படுத்துப்படி அந்த முதலீட்டைத் திட்டமிடவேண்டும். மேலே குறிப்பிட்ட மற்ற எந்த செலவுக்கும், நாம் பணத்தை, மொத்தமாக எடுத்துச் செலவழிக்கவேண்டிவரும். எனவே, அவற்றுக்கு ஏற்றபடி முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த நீண்டகால முதலீட்டுக்கும், இலக்கு இருக்கவேண்டும். நம் எல்லா இலக்குகளையும் தனித்தனியாக கணக்கிட வேண்டும். வருடம் இரண்டுமுறை ஒருமணிநேரம் செலவழித்து அவற்றைச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் போதுமானது. எந்தெந்த முறையில் நாம் நீண்டகால முதலீடுகளில் ஈடுபடலாம் என்று அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: