நீண்டகால முதலீடுகள்-1
நிதிச் சுதந்திரம் பற்றிய சென்ற பதிவுகளில், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மற்றும் குறுகிய கால முதலீடுகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில், நீண்டகால முதலீடுகளின் தேவை என்ன, எப்படித் திட்டமிடுவது என்ற அடிப்படைகளைப் பற்றி அலசுவோம்.
இந்தியாவில், நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சிலவகை முதலீடுகளைப் பற்றி ஒரு அறிமுகத்தைப் பார்ப்போம். முதலீடு என்று வந்தவுடன் நமக்குத் தோன்றுவது, நிலம், வீட்டுமனை, தங்கம், PF, PPF, வீடு போன்றவை. சென்ற சில பத்தாண்டுகளில் இவற்றில் முதலீடு செய்வது பொருத்தமாக இருந்திருக்கக்கூடும். இந்தியா வளர்ந்துகொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில், நம் முதலீடுகளிலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. முதலில் இவற்றை ஒவ்வொன்றாக இன்றைய சூழ்நிலைக்குப் போட்டுப்பார்ப்போம்.
நிலம்
சென்ற காலத்தில், இந்தியா விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி இருந்திருக்கிறது. GDPல் பெரும்பான்மையான பங்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களையே சார்ந்து வந்தது. விவசாயத்திலேயே அதிக மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். ஆனால் இன்றைய இந்தியா தொழிற்துறை உற்பத்தி மற்றும் சேவைத்துறையிலேயே அதிக முதலீடு செய்கிறது.
பெரும்பான்மையான விவசாயக் குடிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்றுக்கொண்டு விவசாயத்திலிருந்து வெளியேறி வருகிறார்கள். விவசாயத்திலும் இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களின் தேவை குறைந்து வருகிறது. பெருவிவசாயிகளைத் தவிர்த்து, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களால், நவீனக் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்ய முடியாமல் அவற்றிலிருந்து வெளியேறுகிறார்கள். இது தொடர்ந்தால், விவசாயம் பெரும் முதலீட்டை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாக மாறிவிடும். அப்போது, அதற்கான நிலமும், பெரியதாகவே தேவைப்படும்.
உலகின் தட்பவெப்ப நிலையும், விரைவாக மாறிவருகிறது. எனவே, மற்ற தொழில்களைவிட விவசாயம் இலாபகரமாக இருக்க வாய்ப்பில்லை, மேலும் ஆபத்துகளை அதிகமாகக் கொண்ட துறையாக மாறிவிடும். மற்ற நிலத்தேவை உள்ள தொழில்கள் பெருமுதலீடுகளையே நம்பியுள்ளன. அத்தகைய தேவையையும் கருத்தில்கொண்டே அரசாங்கம் இடத்திற்கு விலை நிர்ணயம் செய்யும். தொழில்களும் ஓரிடத்தில் நிலையானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நிலத்தை வாங்கிப்போடுவதும், அதனைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமக்குச் சுமையைத்தான் கொண்டுவரும். அதுமட்டுமல்லாமல், நிலத்தை விற்பதற்கு, அல்லது சட்ட சிக்கல்களைச் சந்திப்பதற்கு, நமக்கு மனோதிடம் இருக்க வேண்டும்.
வீட்டுமனை
சமீபகாலமாக வீட்டுமனை விற்பனை பெரு நகரங்களைத் தவிர்த்து மற்ற நகரங்களிலும், கிராம்பபுறங்களிலும் சூடுபிடித்திருக்கிறது. பெருநகரங்களில் மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்துவிட்டார்கள். வீட்டுமனைக்கான தேவை அதிகரிப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட தலைமுறை மக்கள் அதிகமாக இடம்பெயர்வது அல்லது, தனிக் குடும்பம் நடத்துவதற்கும் தொடர்பிருக்கிறது, தேவை வரும்போதுதான் விலையேற்றம் நடக்கும். இப்போது தென் இந்தியாவைக் கருத்தில் கொண்டால், மக்கள்தொகை ஏற்கெனவே குறையத்தொடங்கிவிட்டது.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு, சராசரியாக ~1.7 பிள்ளைகள் இருக்கிறார்கள். இது அடிப்படை மற்றும் உயர்கல்வி அதிகரிக்கும்தோறும் மேலும் குறையக்கூடும். எனவே, வீட்டுமனையின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. மேலும், வீட்டுமனையிலும், விற்பது, பராமரிப்பது, சட்ட சிக்கல்களைச் சந்திப்பது என எல்லாமே சிரமம்தான். இதில் இறங்குவது கிட்டத்தட்ட சோதிடம் மட்டும் பார்த்துவிட்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்குச் சமமானது.
PF மற்றும் PPF
இந்த வகை முதலீடுகள் ஓரளவுக்கு பணவீக்கத்தைச் சமாளிக்க உதவினாலும், நம்மால் முழு வெற்றியைப் பெற முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முதலீடுகளுமே, அரசாங்கத்தை நம்பியிருக்கும் முதலீடுகள், குறிப்பாக PPF. நாம் அரசாங்கம் உருவாக்கும் பணவீக்கத்துக்கு எதிராகப் போராட, அவர்களின் சில சேவைகளையே நம்பியிருப்பது சற்று விபரீதமானதுதான். ஏனென்றால், அவர்கள் அளிக்கும் பணவீக்க அலகுகள் எப்போதும், உண்மைக்குக் குறைவாகவே இருக்கும். இந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நம்மால் உண்மையான பணவீக்கத்தை வெல்ல முடியாது. சமீபமாக PFதொகையில் குறிப்பிட்ட தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இது நம் கட்டுப்பாட்டில் இல்லாத volatilityஐ நமக்குக் கொண்டுவரலாம்.
வீடு
நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டை ஒரு முதலீடாக நம்பிக்கொண்டிருக்கிறோம். சிலர், ஒன்றுக்கு மேல் வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருப்பார்கள். அந்த EMIஐ 20 வருடங்களுக்கு மேல் மெதுவாகக் கட்டிக்கொண்டு வருவார்கள். 20 வருடம் கழித்து வீடு நமக்குச் சொந்தமாகிவிடும் என்று யோசித்து இத்தகைய முதலீட்டில் ஈடுபடுவார்கள். ஆனால், வீட்டின் மதிப்பு எப்போதுமே, அதன் வயதைக் கருத்தில்கொண்டு குறைந்துதான் வரும்.
நாம் கட்டும் EMIக்கு நிகரான வாடகையாவது கிடைக்கிறதா என்றால், அதில் பாதியைக்கூட நம்மால் ஈட்ட முடியாது. எனவே அந்த 20 வருட EMIதவணையை வேறுவகை முதலீடுகளில் செய்துவந்தால், இதைவிட நல்ல இலாபம் பார்க்க முடியும். மேலும், அரசாங்கமும் முடிந்தவரை வீட்டுவிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்பும். அனைவருக்கும் வீடு என்பது அரசாங்கத்தின் லட்சியத்தில் ஒன்று. மேலும், அமெரிக்காவில் நடந்த 2008 பொருளாதார நெருக்கடி மற்றும் 2022ல் சீனாவில் நடந்துகொண்டிருக்கும் நெருக்கடி இரண்டுமே வீட்டுக்கடனில் வந்த பிரச்சனையால்தான்.
தங்கம்
உலகிலேயே தங்கம் இறக்குமதி செய்வதில் முதலில் இருப்பது இந்தியாதான். இந்தியாவில் தங்கம் முக்கியச் செல்வங்களுள் ஒன்று. தங்கம் ஓரளவுக்கு நமக்குப் பாதுகாப்பை அளித்தாலும், அதில் சில பிரச்சனைகளும் உள்ளன.
- ஆபரணங்களைத் தவிர்த்து, தங்கத்துக்கு தொழில்ரீதியானத் தேவை மிகக்குறைவு. மிகச்சில electronic பொருட்களைத் தவிர்த்து, பெரும்பாலும் தங்கம் பயன்படுத்தப்படுவதில்லை.
- எந்த அரசாங்கமும் இப்போது தங்களின் கரண்சியை தங்கத்திற்கு நிகராக வைத்திருப்பதில்லை. கடந்த மூன்று தசாப்தமாகக் கரண்சியும் தங்கமும் ஒருவிதத்தில் நேர் எதிராகப் பயனப்பட ஆரம்பித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தங்கத்தை இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. பெரும்பாலும் ஆபரணங்களுக்காகவே. இறக்குமதி $ல் நடைபெறும். அதற்கு நிகராக நாம் ஏற்றுமதி $ல் செய்தாக வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே செல்லும். எனவே, இந்திய அரசாங்கத்துக்குத் தங்கம் தேவை இல்லாமல் அதிகமாக இறக்குமதி செய்வது பிடிக்கவில்லை. அதனால், தங்கத்தின் மீது முடிந்தவரை வரியை உயர்த்தியேதான் வைத்திருப்பார்கள். இது நீங்கள் விற்க, வாங்க, அடகு வைக்க என்று எல்லாவிதத்திலும் பாதிக்கும்.
- இந்தியாவில் தங்கம் பெரும்பாலும் ஆபரணங்களாகவே இருக்கிறது. நம் தேவைக்குத் தங்கத்தை விற்க முற்படும்போது, அதில் கழிவு, அது இது என்று கிட்டத்தட்ட 8-10% மதிப்பை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள்.
- பாதுகாப்பு. தங்கத்தைப் பாதுகாப்பது என்பது, கத்திமேல் நடப்பதற்குச் சமம். தினமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். அல்லது lockupல் வைக்கவேண்டுமென்றாலும், அதிலும் சில சிக்கல்களும், செலவுகளும் இருக்கிறது. அரசாங்கத்தில் பதிப்பது, அதில் வீட்டு உருப்பினர்களுக்கு பங்கு பிரிப்பது என்று ஏகப்பட்ட பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளது.
- Volatility. இந்தியர்களுக்குத் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும் என்ற ஒரு என்னம் உள்ளது. தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட இந்தியப் பெருநிறுவனங்களை உள்ளடக்கிய Nifty 50 indexக்கு நிகராகவே volatile ஆக இருக்கும். பலவருடங்களுக்கு அதன் விலையில் பெரும் மாற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக 2012ல் தங்கம் விலை 31050ரூபாயாக இருந்தது. 2019ல் அதல் விலை 35220ஆக இருந்தது. பணவீக்கத்துக்கு எதிரான நம் போராட்டத்தை ஓரளவுக்கு சீர்குலைக்கும் அளவுக்கு இந்த volatility இருக்க வாய்ப்புள்ளது.
மேற்கூறிய சில பிரச்சனைகள் தங்கத்தில் இருந்தாலும், முதலீட்டில் தங்கத்தின் இடம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. சமீப காலமாக நாம் கேள்விப்படும், இலங்கை, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளின் நிதிநிலைமை நமக்குத் திகிலை வரவைக்கிறது. அதேசமயம் எல்லா நாட்டு மத்திய வங்கிகளும் கரண்சியை அதிகமாக அச்சிட்டு அவற்றின் மதிப்பை குறைத்து வருகின்றன. இந்நிலையில் தங்கம் நமக்குக் ஓரளவுக்குக் கை கொடுக்கக்கூடும். தங்கத்தைப் பொருளாக வாங்குவதற்குப் பதிலாக, வேறு வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு நல்ல வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.
சரி, நமக்கு ஏற்கெனவே தெரிந்த முதலீடுகளில் உள்ள பிரச்சனைகளைப் பார்த்துவிட்டோம். நம் எதிர்காலத்துக்கான தேவைக்கு எந்த வகை முதலீடுகளில் ஈடுபடலாம்? அதைப்பற்றி விரிவாக அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம்.