சந்தைகள்
நிதிச் சுதந்திரத்தில் நாம் நீண்டகால முதலீடுகளைப்பற்றி சமீபத்திய பதிவுகளில் பார்த்துவருகிறோம். நீண்டகால முதலீடுகளில் பங்குச்சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் பங்குச்சந்தையைப் பற்றிய அறிமுகம் இருக்காது, இருந்தாலும், அதில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே தெரிந்துகொண்டு பயத்தை வளர்த்து வைத்திருப்போம். ஆனால் நம் ஊர்களில் இருக்கும், காய்கறி, மீன், மாடு, ஆடு, பருப்பு, தானியம் என எல்லாவற்றுக்கும் தனித்தனியாக சந்தைகள் உள்ளன. அவற்றில்தான் நாம் தினசரி புழங்கிக்கொண்டிருக்கிறோம். அதுபோல்தான் மற்ற சந்தைகளும். அவற்றைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்த்துவிட்டால் ஓரளவுக்கு நமக்குத் தெளிவு கிடைக்கும்.
நிறுவனப் பங்குகள்
பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வைத்து வர்த்தகம் நிகழும். நாம் விருப்பப்பட்ட பங்குகளை வாங்கி நிறுவனத்தின் முதலீட்டாளர் ஆகலாம் அல்லது விற்பனை செய்து வெளியேறலாம். நிறுவனத்தின் நம் பங்குக்கு ஏற்ப இலாபம் அல்லது நஷ்டம் பிரித்தளிக்கப்படும். சில நிறுவனங்கள் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் பகிர்ந்தளித்துவிடுவார்கள் (dividend). சில நிறுவனங்கள், இலாபத்தை வளர்வதற்காக மேலும் முதலீடுகளில் இறங்குவார்கள் (growth stocks). நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் நிறுவனத்தின் முடிவுகளில் வாக்களிக்கும் உறிமை வழங்கப்பட்டிருக்கும். நிறுவனத்தின் அதிக பங்கு வைத்திருப்பவரால் அந்நிறுவனத்தின் முடிவுகளில் தலையிடமுடியும்.
கடன் பத்திரங்கள்
நிறுவனங்களின் பங்குகளைப்போலவே, அவற்றின் கடன் பத்திரங்களும் சந்தையில் விற்பனை செய்யப்படும். நாம் வாங்கும் பத்திரத்தில், அதற்கான வட்டி விகிதம், வட்டித் தவனை, கால அளவு எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும், அதற்கேற்ப பத்திரத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். இவை நமக்கு நன்கு அறிமுகமான வங்கியின் நிரந்தர வைப்புநிதி (FD) பத்திரத்தை ஓரளவுக்கு ஒத்துப்போகும். பலவகைப்பட்ட கடன் பத்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி நாம் வட்டியில் இலாபம் ஈட்டலாம். பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வந்ததும், அவர்கள் நாம் கொடுத்த முதலையும் திருப்பித் தந்துவிடுவார்கள். இந்தப் பத்திரங்களில் பெரும்பாலும், நாட்டின் அரசாங்கம் வெளியிடும் Soverign Gilt Boldகள் அதிகமாக இருக்கும். நம் அரசாங்கம்தான் கடன் வாங்குவதில் முதலில் நிற்கும் நிறுவனம். இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்கள் குறைந்த அளவிலேயே சந்தையில் கிடைக்கும்.
கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
தற்போதைய உலகத்தேவைக்கு ஏற்ப கனிமங்களின் விலையும் மாற்றம் செய்யப்படும். இவற்றை metal exchange என்று சொல்வார்கள், இவற்றில் கனிமங்கள் வர்த்தகம் செய்யப்படும். காப்பர், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி, லித்தியம் மற்றும் பல தொழில் சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கனிமங்களுக்கு இங்கே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தகம் நிகழும். இங்கும் பணத்தைக்கொடுத்து, கனிமங்களுக்கு உறிமையாளர் ஆகலாம். கனிமங்கள் மட்டுமல்லாமல், மின்சாரமும் கூட சந்தைகளில் விலைகொடுத்து வாங்கமுடியும். இதுபோக, உற்பத்திப் பொருட்களுக்கும் தனித்தனியாக சந்தைகள் உள்ளன. உதாரணம், பருத்தி, சர்க்கரை, சமையல் எண்ணெய், எரிஎண்ணெய், etc.,
சந்தைகளில் பொருட்களை நேரடியாக விற்று/வாங்கவேண்டிய தரகில் நாம் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. முன்பு பார்த்த எல்லாச் சந்தைகளிலும் ஈடுபடுவதற்குத் தகுந்த நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றின் பங்குகளை வாங்குவது அத்தகைய சந்தைகளின் ஈடுபடுவதற்குச் சமம். எடுத்துக்காட்டு, Tata Steel, JSW Steel போன்ற நிறுவனங்கள் உற்பத்தியாகும் இரும்பை இரும்பின் சந்தை மதிப்பில்தான் விற்பனை செய்கின்றன. இரும்பின் விலை ஏறினால், இவர்கள் இலாபம் பார்ப்பார்கள். தங்கம் விலை குறைந்தால், தங்க ஆபரண விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் இலாபம் பார்ப்பார்கள். இதேபோல்தான் மற்ற நிறுவனங்களும்.
நம் நாட்டின் வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகள் பரிசீலிக்கப்படுவது பங்குச்சந்தைகளில்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டுக்காக, சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற அரசியல் பிரச்சனையைப் பார்ப்போம். அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு வந்தவுடன் சில தடாலடிப் பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்தார். ஆனால் மக்களுக்கு அவற்றில் நம்பிக்கையில்லை, சந்தையில் அதை வெளிப்படுத்தினார்கள். அரசாங்கம் வெளியிட்டிருந்த கடன் பத்திரங்களின் மதிப்புகள் கனிசமான அளவுக்குக் குறையத் தொடங்கியது. அதே சமயம் பங்குச்சந்தைகளிலும் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார்கள். ஒருகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கி தலையிட்டு கடன் பத்திரங்களின் வீழ்ச்சியை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டியிருந்தது. பிரதமருக்கு ஆதரவாக இருந்தவர்கள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டார்கள். வேறு வழியில்லாமல் பிரதமர் பதவி விலக நேரிட்டது. நாம் செய்யும் முதலீடு, நமக்கு நிறுவனங்களின் இலாபத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் சில அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளில் தலையிடும் உறிமையையும் மறைமுகமாக கொண்டுவருகிறது.
சரி, நமக்குச் சொந்தமாக வேலை, தொழில், விருப்பம் இருக்கலாம். அவற்றைவிட்டுவிட்டு, இத்தகைய வர்த்தக ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டு, எதில் முதலீடு செய்வது, எவ்வளவு செய்வது, எந்த தேவைக்காக செய்வது, எப்போது வெளியேறுவது என்று பல குழப்பங்கள் இருக்கலாம். இவற்றைப்பற்றிப் பின்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.