6 நிமிட வாசிப்பு

எந்த மியூச்சுவல் பண்டு, மற்றும் காப்பீடு தொடர்பான விளம்பரத்திலும், ஒருவர் கடைசி 5 வினாடிகளில் வேகமாக எதையோ உளறிவிட்டுச் செல்வார். அதில் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்ற வாக்கியம் மட்டுமே நம் மனதில் நிற்கும். சரி, இவ்வளவு அபாயம் உள்ள சந்தையைப் பற்றி நாம் ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்? அவற்றில் உள்ள சிக்கல் என்ன? இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

நிதிச் சுதந்திரத்தில், நமக்கு நன்கு அறிமுக நீண்டகால முதலீடுகளைப்பற்றியும் அவற்றில் உள்ள சில சாதக பாதகங்களைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். பணவீக்கத்தால் நமக்கு இருக்கும் அபாயமும் நாம் அறிந்ததே. எனவே, இதில் இருந்து தப்பித்து நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கு நமக்கிருக்கும் ஒரு சில ஆயுதங்களில் நிறுவனப் பங்குகளும் ஒன்று. ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மற்ற முதலீடுகளைப்போல நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துவிட்டு அமைதியாக இருக்க முடியாது.

பங்கு முதலீடுகளில் நேரடியாக ஈடுபடுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

பங்கின் விலைமதிப்பு

சந்தையில் மதிப்புமிக்க நிறுவனத்தின் (bluechip stock) பங்குகளும்கூட நமக்கு கணிசமான நஷ்டத்தைக் கொண்டுவந்துவிடும். எடுத்துக்காட்டுக்கு, மாம்பழ சீசனில் நாம் விரும்பும் பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ 100ரூபாய்க்குள் கிடைக்கும், ஆனால் சீசனில்லாத சமயத்தில் அதன் விலை 3-4 மடங்கு அதிகமாக இருக்கும். நமக்கு சீசனைப்பற்றித் தெரிந்திருக்கவேண்டும், பொருமையும் இருக்கவேண்டும். பொதுவாக மதிப்புமிக்க, கடனில்லாத, அதிக இலாபம் பார்க்கும் நிறுவனம் சந்தையில் விலைமதிப்புடனே நடத்தப்படும். அவை பல்வேறு காரணங்களுக்காக, வருடத்தில் சில நாட்கள், அல்லது சில மனிநேரங்களே விலை குறைவாகக் கிடைக்கும். அச்சமயத்துக்காக காத்திருக்கவேண்டும். நிறுவனத்தின் மதிப்புக்கு அதிக விலையில் வாங்கப்படும் பங்கு நமக்கு பெரும்பாலும் நஷ்டத்தையே கொண்டுவந்துவிடும். நமக்கு நிறுவனத்தை சரியாக மதிப்பிடவும் தெரிந்திருக்கவேண்டும்.

சீசன் பங்குகள்

சில நிறுவனங்கள் சில சீசன்களிலேயே நல்ல இலாபம் பார்க்கும். குறிப்பாக வங்கிகள், கட்டுமானம் சம்பந்தமான நிறுவனங்கள். எ.கா., இரும்பு, சிமென்ட் போன்ற நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சமயத்தில் நல்ல இலாபம் பார்ப்பார்கள். வாகனங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களும் இன்னொறு எடுத்துக்காட்டு. இருசக்கர வாகனம், டிராக்டர் போன்றவை, வங்கி வட்டிவிகிதம், கிராம்பபுற சூழ்நிலை, மழை, வெப்பநிலை போன்றவற்றைச் சார்ந்துள்ளது. இத்தகைய சீசன் பங்குகளை குறிப்பிட்ட சமயத்தில் விலை குறைவாக நமக்கு வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேசமயம் அவற்றைச் சரியான நேரத்தில் இலாபத்தில் விற்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

உறிமையாளர்

நிறுவனத்தில் பெரும்பங்கை முதலீடு செய்திருக்கும் உறிமையாளரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர்களின் நம்பகத்தன்மை முக்கியம். அவர்கள் தங்களின் பங்குகளை வங்கிகளிள் அடகு வைத்து பணம் பெற்றிருந்தால், அது நமக்குத் தேவையற்ற பிரச்சனையைக் கொண்டுவரலாம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் NDTV நிறுவனம் அதானி நிறுவனத்தின் கைக்குச் சென்றதுதான். NDTVன் உறிமையாளர், தன் பங்குகளை அடகுவைத்திருந்தார், அதற்கு வட்டி கட்ட முடியாத நிலையில் அந்த மொத்தக் கடனையும் அதானி நிறுவனம் கையில் எடுத்துக்கொண்டது. இப்போது NDTVஐ அதானி நிறுவனமே உறிமைகொள்கிறது. முதலீட்டாளராக, நாம் வேடிக்கைமட்டுமே பார்க்க முடியும். நம் பங்குகளும் கணிசமான அளவுக்கு இழப்பைச் சந்திக்கும்.

Dilution

நிறுவனங்கள் தங்களின் முதலீட்டுக்குத் தேவையான பணத்தை இரண்டு வகையில் கொண்டுவருவார்கள். முதல்வகை புதிய பங்குகளை வெளியிடுவது, இரண்டாவது வெளியில் கடன் வாங்குவது. இரண்டுமே பிரச்சனையைக் கொண்டுவருவதற்குச் சாத்தியமுள்ளது. புதிய பங்குகளை வெளியிடுவதில் உள்ள முதல் பிரச்சனை, ஒருவேளை திரட்டப்பட்ட பணம், தேவையற்ற, இலாபமீட்டாத தொழில் என்றால், நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கும். இரண்டாவது பிரச்சனை, நம் பங்கின் மதிப்பு இழப்பு.

கடன்

நிறுவனங்கள் வங்கிகளிலும், அல்லது பொதுச் சந்தையிலும் கடன் வாங்குவார்கள். சில சமயம் வெளிநாட்டிலும் வேறு கரண்சியில் கடன் வாங்குவார்கள். இத்தகைய கடன், பல்வேறு சூழ்நிலைகளில் பிரச்சனையைக் கொண்டுவரும். இதற்குச் சிறந்த உதாரணம், Ford, GM போன்ற நிறுவனங்கள் 2008ல் சந்தித்த பிரச்சனைதான். சமீபத்தில் Softbank நிறுவனம் தனது கடனைச் சமாளிப்பதற்காக, மதிப்புமிக்க ARM நிறுவனத்தை விற்க முன்வந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII)

பெரும்பாலும் இத்தகைய முதலீட்டாளர்கள், நல்ல மதிப்புள்ள, இலாபம் பார்க்கும் நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்துதான் முதலீடு செய்வார்கள். அவர்களின் அதிக அளவில் முதலீடு செய்வது, பங்கின் விலையை கணிசமான அளவுக்கு உயர்த்திக் கொண்டுசெல்லும். அதேசமயம், உலகப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக அவர்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேற நேறிடலாம். அப்போது பங்கின் விலை நிறுவனத்தின் மதிப்புக்குக் குறைவாகவே குறைந்துவிடும்.

அரசாங்கம்

சில நிறுவனங்கள் அரசாங்கத்தின் திட்டங்களை நம்பி இருக்கும். பாலம், சாலை அமைப்பது போன்ற கட்டுமான நிறுவனங்கள், அரசாங்கம் ஒதுக்கும் தொகைக்கு ஏற்பவே செயல்பட முடியும். ஒருவேளை பணி முடிவதற்குள் அரசாங்கம் மாறிவிட்டால், வேலை தாமதமாகலாம், அல்லது நிறுத்தப்படலாம். நிறுவனத்துக்குச் சேறவேண்டிய தொகையிலும் குளறுபடிகள் நேரலாம். சில நிறுவனங்களின் பங்குகள் அரசாங்கம் கொண்டுள்ள கொள்கை முடிவுகளால் பாதிக்கப்படும். குறிப்பாக, மது, புகையிலை, உரம், உணவு சம்பந்தமான நிறுவனங்கள்.

அரசியல்

அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று கொள்கைகளைக் கொண்டுள்ளன. மக்களின் தற்போதைய தேவைக்கேற்ப அவர்களின் கொள்கைளில் சிறிய மாற்றங்களுடன் தேர்தலை அணுகுகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசாங்கத்தின் கொள்கைகளிலும் மாற்றம் தெரியும். அது சந்தையிலும் எதிரொலிக்கும். சில நிறுவனங்களின் மதிப்பு உயரும். சிலவற்றின் மதிப்பு குறையும்.

Concentration risk

குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வது, நமக்கு Concentration riskஐ அதிகப்படுத்தும். மேலே குறிப்பிட்ட பல காரணிகளால், நாம் வெவ்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்களைத் தேர்வுசெய்து அவற்றில் முதலீடு செய்யவேண்டும். அத்துறையைப்பற்றிய மேலோட்டமான அறிவும் நமக்கு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், குறைந்த volatilityஉடன் நேரான முன்னேற்றத்தை நம்மால் பார்க்க முடியாது.

Dividend vs Growth

நம் நீண்டகாலத் தேவைக்கு Growth பங்குகள் நல்ல பலனைக் கொடுக்கக்கூடும். ஆனால், Dividend வழங்கும் பங்குகள் நம்முடன் இலாபத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. அதில் வரும் இலாபத்தை நம்மால் மேலும் சில நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். இவற்றில் உள்ள சாதக பாதகங்களைத் தெரிந்து, ஒவ்வொருவருக்கும் உகந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

மேலே குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல், மேலும் சில காரணங்களும் நம்மை பங்கு முதலீட்டில் இறங்குவதில் இருந்து ஒதுக்கி வைக்கின்றன. ஆனாலும், இதில் கிடைக்கும் இலாபம் நம்மைப் பணவீக்கத்தில் இருந்து காப்பாற்றி விரைவில் நிதிச் சுதந்திரம் அடைய வழிசெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வேகமாக வளரும் பொருளாதாரத்தில். நம் சொந்த வேலையையும் தொழிலையும் வைத்துக்கொண்டு, இத்தகைய சந்தை முதலீடுகளில் ஈடுபடுவது மிகவும் சிரமமானதும் கூட. சில எளிய வழிமுறைகளில் நேரடியாக சந்தையில் ஈடுபடாமல், பங்கு முதலீடுகளில் ஈடுபட முடியும். அவற்றைப்பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: