கடன் பத்திரங்கள்
நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டுப் பணத்தை இரண்டு வகைகளில் பெற்றுக்கொள்ளுகிறார்கள். முதல் வகையான பங்குகளைப்பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இந்தப்பதிவில், நிறுவனங்கள் எப்படி கடன் வாங்குகிறார்கள், அவற்றில் எப்படி நாம் முதலீடு செய்து வட்டியைப் பெற்று இலாபம் அடையலாம் என்பது குறித்து இந்தப்பதிவில் பார்ப்போம்.
கடன் பத்திரங்களைச் சுருக்கமாக அறிந்துகொள்வதென்றால், அவற்றை நாம் வங்கிகள் வழங்கும் வைப்புநிதித் திட்டங்களுடன் ஒப்பிடலாம். நாம் வைப்புநிதித்திட்டத்தில் முதலீடு செய்தால், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வட்டியைத் திட்டத்தின் காலாவதியாகும் நாள்வரை வங்கி நமக்கு வழங்கும். அதேபோல பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களை வாங்கி அதில் வட்டி மூலம் இலாபம் அடையலாம். கடன் பத்திரங்களில் உள்ள கூடுதல் வசதி, ஒருவேளை நமக்குப் பத்திரம் காலாவதியாகும் வரை காத்திருக்க முடியாது என்றால், அந்த பத்திரங்களை நாம் வெளிச்சந்தையில் விற்றுக்கொள்ளலாம். கடன் பத்திரங்களில் என்னென்ன வகைகள் உள்ளன என்று பார்த்துவிடுவோம்.
அரசாங்கக் கடன் பத்திரங்கள்
ஒரு நாட்டில் அதிகம் கடன் வாங்குபவர் அந்நாட்டின் அரசாங்கம்தான். அவர்கள் கொண்டுவரும் திட்டங்களுக்குத் தேவையான நிதியை வரி மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசூலித்துவிட முடியாது. எனவே அவர்கள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு வட்டி தனியார் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களுக்கான வட்டியைவிடக் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் மற்ற தனியார் நிறுவனங்களைவிடத் திவாலாவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கும். அரசாங்க பத்திரங்களை ஆங்கிலத்தில் gilt bonds என்று குறிப்பிடுவார்கள். இந்த பத்திரங்களின் வயது சில மாதங்களில் தொடங்கி 20-30 ஆண்டுகளுக்குக் கூட இருக்க வாய்ப்புள்ளது.
வங்கிகளின் கடன் பத்திரங்கள்
பொதுவாக வங்கிகளுக்குத் தேவையான பணத்தை அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். வாடிக்கையாளர்கள் வைப்புநிதியாகச் செலுத்தும் தொகையை வங்கிகள் பெற்று, மற்றவர்களுக்கு அதிக வட்டிக்குக் கடன் வழங்குவார்கள். வாடிக்கையாளர் சேமிப்புக்கு அதிகமாகக் கடன் கொடுக்கும் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களைப்போலவே, தங்களுக்குத் தேவையான தொகையை ரிசர்வ் வங்கியிடமிருந்தோ அல்லது பொதுச்சந்தைகளில் கடன் பத்திரங்களை வெளியிட்டோ பெற்றுக்கொள்வார்கள். இந்த வகைக் கடன் பத்திரங்கள் அரசாங்க கடன் பத்திரங்களின் வட்டி அளவைவிடச் சற்றே அதிகமாக வழங்கும்.
நிறுவனங்களின் கடன் பத்திரங்கள்
நிறுவனங்களுக்கு முதலீடு தேவைப்படும் பட்சத்தில், பொதுவாகச் சந்தையில் அதிக பங்குகளை வெளியிட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப்பெற்றுக்கொள்வார்கள். தேவை தீர்ந்ததும் buy back மூலம் பங்குகளைச் சந்தையிலிருந்து வாங்கி, பங்கு எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வார்கள். இதுவே பங்குகளுக்கான அடிப்படை. சிலநேரங்களில் அவர்களால் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டு தேவையான நிதியைத் தீட்ட முடியாமல் போகும். அப்போது வெளியே வட்டிக்குக் கடன் வாங்குவார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கான கடன்களைப் பெரிய வங்கிகளிடமிருந்து வட்டிக்கு வாங்குவார்கள். நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறன், ஸ்திரத்தன்மை போன்றவற்றைப்பொருத்து, அவர்கள் வாங்கும் கடனுக்கான வட்டி நிர்ணயிக்கப்படும். சிலநேரம் வங்கிகளுக்குப்பதிலாக, நேரடியாகவே கடன் பத்திரங்களைச் சந்தையில் வெளியிடுவார்கள். பத்திரத்தில் அதன் தொகை, கடனுக்கான வட்டி, காலாவதியாகும் தேதி போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். சந்தையில் நாம் பத்திரங்களை வாங்கிக்கொண்டு அவற்றுக்கான வட்டியைப் பெற்றுக்கொண்டு இலாபம் அடையலாம். நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் சில வகைகள் உண்டு. சில பத்திரங்களைக் காலாவதியாவதற்குள்ளேயே நிறுவனங்களால் திரும்பப்பெற முடியும். நாம் பத்திரங்களை வாங்கும்முன் அதில் உள்ள விதிமுறைகளை நன்கு வாசித்துவிடவேண்டும்.
பாதுகாப்புத் தன்மை
மேலே குறிப்பிட்ட வரிசையில் அவற்றின் riskம் அதிகரிக்கும். அரசாங்கப் பத்திரங்கள் பொதுவாகப் பாதுகாப்பானவை. ஒருவேளை அரசாங்கம் திவாலாகிவிட்டால், பத்திரத்தில் முதலீடு செய்த பணத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. வங்கிகள் வழங்கும் பத்திரங்களும் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை, குறிப்பாகப் பெரிய வங்கிகள். ஏனென்றால் அவற்றில் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தைச் சேமித்துவைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரேநேரத்தில் பணத்தைக் கேட்காதவரை வங்கி எளிதில் திவாலாகாது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளும் அவற்றுக்கு உள்ளதால் அவை ஓரளவுக்குப் பாதுகாப்பானவை. ஆனால் வங்கிகளிலும் சிறிய தனியார் வங்கிகள் வழங்கும் பத்திரங்கள் திவாலாவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்தான். கடைசியாகத் தனியார் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்கள். இதில் நிறுவனத்தின் பல்வேறு அலகுகளைப் பொறுத்து அவை வெளியிடும் வட்டி விகிதம், பாதுகாப்புத்தன்மை எல்லாம் மாறுபடும். பொதுவாகவே, வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிடத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகவே வழங்கியாக வேண்டும். ஆனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிறையபேர் முதலீட்டை இழந்துவிடுவார்கள். நிறுவனம் திவாலானால், அந்தப் பத்திரமும் மதிப்பிழப்பதற்கான சாத்தியம் மிக அதிகம். எனவே பத்திரத்தை வாங்கும் முன் அதனை வழங்கும் நிறுவனத்தைப் பற்றியும் அவர்கள் எந்தக் காரணத்துக்காகப் பத்திரம் வெளியிடுகிறார்கள், எப்படி கடனை அடைக்கப்போகிறார்கள் என்பதுபற்றி முழுவதும் ஆராய்ந்துவிட்டே அதில் முதலீடு செய்ய வேண்டும்.
-
மதிப்பீட்டு நிறுவனங்கள். நாம் எல்லோருக்கும் CIBIL என்கிற credit rating agency வழங்கியிருக்கும் மதிப்பீட்டைப் பொறுத்தே நமக்கு வழங்கப்படும் கடன் அளவு, வட்டிவிகிதம் போன்றவற்றை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. அரசாங்கம், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையைப் பொருத்து அவற்றுக்கான மதிப்பீடுகளைச் சில நிறுவனங்கள் வெளியிடுகின்றன. கடன் பத்திரங்களில் இந்த மதிப்பீடுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நாம் ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட கடன் பத்திரத்தை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். சிலநாட்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பீடுகள் குறைந்தால், அந்தப் பத்திரத்தின் மதிப்பும் குறைந்துவிடும். ஒருவேளை நாம் அந்தப் பத்திரத்தைச் சந்தையில் விற்க விரும்பினால், நட்டத்திலேயே விற்றுவிட்டு வெளியேற நேரிடும்.
-
ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதம். ஒரு எடுத்துக்காட்டுடன் இதைப் பற்றி அறிந்துகொள்வோம். அரசாங்கம் வெளியிட்ட 7% வட்டி வழங்கும் ஒரு கடன் பத்திரத்தை நாம் வாங்குகிறோம். அந்தப் பத்திரத்தை நாம் வாங்கியபோது ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4% ஆக இருந்ததாக வைத்துக்கொள்வோம். இப்போது அந்த 20 வருடப் பத்திரத்தை நாம் சந்தையில் விற்றாக வேண்டிய சூழ்நிலை. ஆனால் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6%ஐ எட்டிவிட்டிருந்தால், நம்மால் நாம் வாங்கிய விலையைவிடக் குறைவாகவே அந்தப் பத்திரத்தை விற்க நேரிடும். ஏனென்றால், குறைந்த கால கடன்களுக்கே இப்போது 7%க்கு அதிகமாக வட்டி கிடைக்கும். அந்தப் பத்திரம் வெறும் 1% வட்டியை அதிகமாக 20 வருடங்களுக்கு வழங்கப்போகிறது. பொதுவாகக் கடன் பத்திரத்தின் காலம் அதிகரிக்க அதிகரிக்க இந்த வகை interest rate riskன் அளவும் அதிகரிக்கும். அரசாங்கத்தின் gilt கடன் பத்திரங்களில் உள்ள முதன்மையான அபாயம் இதுதான், ஏனென்றால் அரசு வெளியிடும் கடன் பத்திரங்கள் பொதுவாகவே அதிக காலத்துக்குத்தான் வழங்கப்படும்.
கடன்பத்திரங்களின் இலாபத்திற்கான வரி
கடன் பத்திரங்களில் இரண்டுவகை இலாபங்களை நாம் ஈட்டுகிறோம். முதன்மையாக நமக்குக் கிடைப்பது அதன் வட்டிதான். வைப்புநிதி திட்டத்தில் என்ன வரி விதிக்கிறார்களோ, அதே விகிதத்திலேயே கடன் பத்திரங்களுக்கான வட்டியும் இருக்கும். இரண்டாவதாக நாம் பத்திரங்களைச் சந்தையில் விற்பதன் மூலமாக ஈட்டலாம். இதற்கு நாம் தனியாக வரி கட்டவேண்டியிருக்கும். இந்த அலகுகள் அடிக்கடி மாற்றம் பெறுவதால், அந்தப் பட்டியலை இங்கே கொடுக்கவில்லை. பொதுவாகக் கடன் பத்திரங்களில் நாம் ஈட்டும் இலாபத்திற்கு, நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதால் ஈட்டும் இலாபத்தைவிட அதிக வரிகட்ட வேண்டிவரும். ஏனென்றால், கடன் பத்திரங்கள் நிறுவனப் பங்குகள் அளவுக்கு ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதில்லை.
நாம் ஏன் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்?
நமக்குக் கடன் பத்திரங்களில் கிடைக்கும் இலாபத்தில் அதிக வரி கட்டவேண்டிவரும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதேசமயம் இதில் வரும் இலாபமும் நிறுவனப் பங்குகளைவிடக் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நாம் ஏன் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்? நிறுவனப் பங்குகளும், கடன் பத்திரங்களும் சில நேரங்களில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும். அதாவது, ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதம் அதிகமாக இருக்கும்போது, நிறுவனங்கள் அதிக முதலீடு செய்யமாட்டார்கள், அவர்களின் இலாபம் குறையும். ஆனால் அப்போது வெளியிடப்படும் கடன் பத்திரங்கள், அதிக வட்டியை வழங்கும். வட்டிவிகிதம் குறையும்போது நிறுவனங்களின் இலாபம் அதிகரிக்கும், அவர்களின் பங்கு மதிப்பும் அதிகரிக்கும். இதனை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, முதலீடுகளை மாற்றிக்கொண்டால் நம்மால் அதிக இலாபம் ஈட்ட முடியும்.
ஒரு நீண்டகால முதலீட்டாளராக, நாம் நல்ல கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துவைக்க வேண்டும். நிறுவனப் பங்குகளை நேரடியாக வாங்குவதில் இருக்கும் சிக்கல்களை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதேபோலக் கடன் பத்திரங்களை வாங்கி விற்பதிலும் மேற்கண்ட சிக்கல்கள் உள்ளன. இதுபோக நாம் நேரத்தைச் செலவிட்டு இவற்றைக் கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு, குறைந்த நேரச்செலவில் எப்படி பலனை அடைவது என்பது குறித்து மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிய அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக அறிந்துகொள்வோம்.