நிதிச் சுதந்திரம்-2
சென்ற பதிவில், நிதிச் சுதந்திரம் ஏன் தேவை என்று எழுதியிருந்தேன். இந்தப் பதிவில், எவை எல்லாம் இந்தப் பயணத்திற்கு முக்கியம் என்று பார்ப்போம்.
முதலில், பணவீக்கம். இந்த வாக்கியம் எனக்கு முதலில், சில செய்தி அறிக்கைகளை வாசிக்க அறிமுகமானது. ஆனால், வழக்கம்போல இதைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தாமல், மற்ற சொற்றொடர்களினூடாக, மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால், இதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுவது, நம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடும் அளவுக்கு முக்கியத்துவமானது என்று சமீபமாகத்தான் தெரிந்துகொண்டேன்.
சுருக்கமாகச் சொன்னால், நம் கையிருப்பில் இருக்கும் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே செல்வதுதான் பணவீக்கம். இன்று ஒரு பொருள் 10ரூபாக்கு கிடைக்கிறது என்றால், அடுத்த வருடம் அதன் விலை 11 ரூபாயாக அதிகரித்திருந்தால், இதில் பணவீக்கம் 10% ஆகும். இது வெறும் பொருட்களுக்கு மட்டுமல்ல. மருத்துவம், கல்வி போன்ற சேவைகளுக்கும் பொருந்தும். குறிப்பாகப் பணவீக்கம், சேவைகளிலேயே அதிக பாதிப்பை இந்தியாவில் உருவாக்கிவிடுகிறது. ஆனால் அதை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
மருத்தும், கல்வி, நீதிமன்ற வழக்குச் செலவு, போக்குவரத்து, தரகு போன்றவற்றில் 10% க்கும் அதிகமாகப் பணவீக்கம் இந்தியாவில் இருக்கிறது. எனவே, பணத்தைப் பெட்டியில் பூட்டிவைத்திருந்தால், அது வளராமல், ஒருகட்டத்தில் மதிப்பிழந்துவிடும். நான் பள்ளியில் படிக்கும்போது, 10கிமீ பேருந்துப் பயணத்துக்கு ஆன செலவு, 1.45ரூ. இப்போது 15ரூ. அப்போது ஒரு இலக்கிய நாவலின் விலை 80ரூ, இப்போது 500ரூ. பெட்ரோல் அப்போது 25ரூ, இப்போது 102ரூ. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தப் பணவீக்கப் பிரச்சனையைச் சரியாகச் சமாளிக்க, நாம் முதலில் செய்ய வேண்டியது, அதைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வதே. இந்த விஷயமான எந்தப் புத்தகமும் நமக்குச் சுவாரசியத்தை அளிக்கவில்லை என்றாலும், தேவைக்காகவேனும் படித்துவிடுவது நல்லது. நேரத்தைச் சேமிக்கிறேன் பேர்வழி என்று, அடுத்தவரிடம் அறிவுரை கேட்டு அதன்படி செல்வது மிகவும் ஆபத்தானது. அவ்வளவு நேரம் உண்மையிலேயே இல்லை என்றால், அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களைப் பணம் செலுத்தி அமர்த்திக்கொள்ளலாம். அதிலும், ஆலோசகரின் தகுதி, பின்புலம், வருமானம், முதலீடுகள் எல்லாவற்றையும் தெரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து அதன்படி முடிவெடுப்பது நல்லது. நேராக ஆலோசகரிடம் செல்லாமல், முதலில் நாமே முயன்று பார்க்க முடியுமா பார்க்கலாம் என்றால், இந்தக் கட்டுரையை மேலும் வாசிப்பது ஓரளவுக்கு இதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவக்கூடும்.
நம் கையிலிருக்கும் 10ரூ, அடுத்த 10 வருடத்துக்குள் இரட்டிப்பாகி 20ரூ ஆகவில்லை என்றால், நாம் அதனை இழந்துவிட்டோம் என்றே அர்த்தம். நாம் இன்று சம்பாதிக்கும் வருவாய், முதலீடாகாமல், வங்கிக் கணக்கிலோ அல்லது, வைப்புநிதியாகவோ இருந்தால், நாம் இந்தப் பந்தயத்தில் முதலிலேயே தோற்றுவிட்டோம். இதனைத் தவிர்க்க எந்த வகையான முதலீடுகள் எல்லாம் உதவும் என்பது நமக்கு வரும் முதற்கேள்வி. எந்த முதலீடு எல்லாம் சராசரியாக 10%க்கு மேல் வளருகிறதோ, அவற்றை எல்லாம் நாம் முயன்று பார்க்கலாம். அதற்காகக் கந்து வட்டி, போன்சி, சீட்டு என்று இறங்கி அடிவாங்க வேண்டிய அவசியமில்லை.
அரசாங்கமும், சட்டமும் வழிகாட்டியிருக்கும் முறைகளிலேயே நம் முதலீடு அமைய வேண்டும். சரியாக நம்மால் எந்த அளவுக்கு ஆபத்தைக் கையாள முடியும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப முறையான முதலீட்டில் இறங்க வேண்டும். நம் பெற்றோர் நம்பிவந்த பெரும்பாலான முதலீடுகளான வீடு, மனை, நிலம், தங்கம் போன்றவை ஓரளவுக்குமேல் நமக்குப் பயனளிக்கப்போவதில்லை. அவற்றில் வரவும் குறைவு, மற்றும் பிரச்சனைகளும் அதிகம். எனவே எப்படி முறையாக நம் முதலீடுகளை ஆரம்பிப்பது?
முதலில் நம்மை எதிர்பாராத சிக்கல்களுக்குத் தயார் செய்துகொள்ள வேண்டும். ஆபத்துக் காலத்தில் நமக்குத் தேவையான பணத்தை மட்டும், உடனே வெளியே எடுக்கும் வகையில் சேமிக்க வேண்டும். அதுவும், பணவீக்கத்தை மீறிச்செல்லவில்லை என்றாலும், தாக்குப்பிடிக்கும் வகையிலாவது இருக்க வேண்டும். அப்போதுதான், வருங்காலத்தில் நம் ஆபத்துகளை எதிர்கொள்ள முடியும். இங்கே பெரும்பாலான அனுபவசாலிகள் சொல்வது, அடுத்த 6-9 மாதங்களுக்காக மொத்தக் குடும்பச் செலவைக் கணக்கிட்டு, அவற்றை எளிதில் கிடைக்கும் வகையில் சேர்த்துவைக்க வேண்டும். அடுத்த இலக்கு குடும்பத்தின் முதன்மை சம்பாத்தியக்காரருக்கு ஆயுள் காப்பீடு மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடக்கிய மருத்துவக்காப்பீடு. இந்தக் காப்பீடுகள் அனைத்தும், நாம் வேலைசெய்யும் நிறுவனமே வழங்கினாலும், சொந்தமாகச் செலவழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக முதலீடு. இலக்கு வைத்துக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால், பணவீக்கத்தை மீறிய வருவாயை அளிக்கும் எந்த முதலீடும் நமக்குக் கூடவே இலாபத்துக்கு இணையான ஆபத்தையும் கொண்டுவரும். ஒருவேளை நமக்குத் தேவையான நேரத்தில் நாம் செய்த முதலீடு உதவவில்லை, ஆனால் 15%க்கு மேல் வருங்காலத்தில் இலாபம் ஈட்டித்தரும் என்றாலும், அதனால் பயனில்லை. நம் இலக்குக்குச் செய்யும் முதலீட்டில் நம்மால் ஓரளவுக்கு, முதலீடு செய்யவேண்டிய அளவு, காலம், வகை ஆகியவற்றுடன், நம் முதலீட்டுப் பயணம் சரியான திசையில் செல்கிறதா என்றும் கணக்கிட முடியும். தேவையென்றால், அதில் சில மாறுதல்களையும் செய்துகொண்டு முன்னேற முடியும். இலக்கில்லாத பயணம் விடுமுறை நாட்களுக்கு மட்டுமே நல்லது. முதலீட்டில் அதையே போட்டால் ஆபத்துதான்.
நான் மேலே குறிப்பிட்டிருந்தவற்றைப் பற்றித் தனித்தனியாகவும், விரிவாகவும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.