11 நிமிட வாசிப்பு

முந்தைய பதிவில், மருத்துவக் காப்பீட்டின் அடிப்படைகள், தேவைகளைப் பற்றித் தெறிந்துகொண்டோம். இந்தப் பதிவில், மருத்துவக் காப்பீட்டில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சனைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சி, தொழில்நுட்ப முன்னேற்றத்தால், நாள்தோறும் ஒரு வகையான நோய் கண்டடையப்பட்டு, அதற்கான தீர்வுக்கு ஆய்வுகள் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாகவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சராசரி ஆயுள் 30-40களில் இருந்து இப்போது 60-70களுக்கு முன்னேறியிருக்கிறது. அதாவது, சராசரி ஆயுள் இரட்டிப்பாகியுள்ளது. இந்த முன்னேற்றம், சில ஆரோக்கியமான சிக்கல்களையும் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மருத்துவக் காப்பீட்டுத் துறையில்.

Daycare procedure:

நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த Daycare procedureன் பட்டியல் இப்போது காப்பீட்டில் வளர்ந்துகொண்டே செல்கிறது. இதில் நமக்குத் தெளிவு அவசியப்படுகிறது. ஏன்? நாம் எடுக்கும் காப்பீட்டின் எழுத்துப்படிவத்தில் அவர்கள் சேர்த்துக்கொண்ட Daycare procedureன் பட்டியலை நாம் நிச்சயம் அலசிப்பார்க்க வேண்டும்.

கைப்பேசி வாங்குபவர்களை ஏமாற்றுவதற்காக நிறுவனங்கள் சில உத்திகளைக் கையாளுவார்கள். குறிப்பாக விலை குறைந்த கைப்பேசிகளில் இதை அடிக்கடி பார்க்கலாம். கைப்பேசியில் இருப்பிதலேயே மிகவும் சிக்கலானதாகவும், ஏல்லோரையும் திருப்தியளிப்பது கடினமானதுமான cameraவில்தான் அவர்கள் விளையாடுவார்கள். ஒரு camera எல்லா வேலையையும் செய்ய முடியும். ஆனால் அதன் தொழில்நுட்பத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. குறுக்கு வழி, ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொரு camera கொடுப்பார்கள். மொத்தம் 4-5 என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். உண்மையில் அதில் எதுவும் திருப்திகரமாக வேலை செய்யாது. வாங்கும்போது நமக்கு, பட்டியல்தான் முதலில் தென்பட்டு, ஆசையில் வாங்கிவிடுவோம்.

சிலசமயம் குறைவானது நல்லதும்கூட. மருத்துவக் காப்பீட்டில் Daycare procedure பட்டியல் சிறியாதாக இருந்து, அதில் பொதுப்படையான அறிவிப்பும் இருந்தால் (எ.கா, . தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்துக்கு மேலாகும் சிகிச்சை, தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ சில மணிநேரத்தில் முடிந்தால், அதனையும் நாங்கள் காப்பீட்டில் எடுத்துக்கொள்வோம். ) நாம் அந்தப் பாலிஸியை நம்பலாம். பட்டியல் மிகவும் பெரியதாக இருந்தால், அதில் ஒரே வகையான நோயின் உட்பிரிவுகளை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு அடித்து விட்டிருக்கிறார்களா என்று மேலோட்டமாக வாசித்துப் பார்க்க வேண்டும்.

No-claim Bonus/Discount:

நம் காப்பீட்டை அதிக காலத்துக்குப் பயன்படுத்தவில்லை என்றால், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று பொதுவாக அர்த்தம். எனவே, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் காப்பீட்டை பயன்படுத்தாமல் இருந்தால், அடுத்த வருட தவணையில் விலையில் சலுகை, அல்லது அதே விலையில் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொடுப்பது என்று சில சலுகைகளை வழங்குவார்கள். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உண்டு.

நாம் சென்ற வருடம் காப்பீட்டை உபயோகிக்கவில்லை, அதற்கு வழக்கமாக 10லட்சம் காப்பீட்டிற்கு இந்த வருடம் அதே விலையில் 12லட்சம் (bonus) காப்பீடு வழங்குகிறார்கள் என்றால், ஒருவேளை இந்த வருடம் நாம் காப்பீட்டை உபயோகித்தால், அடுத்த வருடத்தில் காப்பீட்டு தொகையில் என்ன மாற்றம் இருக்கும் என்று பார்க்க வேண்டும். அதேபோல இந்த வருட discountஆல் அடுத்த வருடத் தவணையில் என்ன விலைமாற்றம் இருக்கும் என்று தெரிந்துகொள்வது அவசியம். இதில் நமக்குச் சாதகமாக இல்லாமல், பெயரளவில் இருக்கும் பாலிஸிகளை நம்ப வேண்டாம்.

இலவச உடல் பரிசோதனைகள்:

மருத்துவத் தேவைகளைத் தாண்டி, நாம் குறிப்பிட்ட இடைவெளியில், முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்ள காப்பீட்டில் வசதி இருக்கும். நம் உடல் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு, முடிவுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தால், சோதனைக்கான தொகையை நமக்கு அளிப்பார்கள். இதில் பலன் யாருக்கு என்று பார்த்தால், நமக்கல்ல!. காப்பீட்டு நிறுவனத்துக்கே இதில் பலன் உண்டு. எப்படி? பாலிஸியை வழங்கியதும், அவர்களால் அடிக்கடி உங்களின் உடல்நலன் பற்றியத் தரவுகளைக் கேட்டுப் பெற முடியாது.

உங்களின் உடல்நலன் பற்றி அடிக்கடி தெரிந்துகொண்டால், அடுத்த வருடத் தவணையில் விலையை ஏற்றிவிட அவர்களுக்கு வாய்ப்புள்ளது. முடிந்தவரை இந்தச் செலவுகளை நாமே செய்துகொள்ளலாம். எனவே, இத்தகைய சலுகைகளை காப்பீ்ட்டு நிறுவனம் வழங்கினாலும், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அல்லது, அவ்வாறு சலுகை வழங்காத பாலிஸியைத் தேர்வு செய்துகொள்ளலாம். விலையும் சற்று குறைவாக இருக்கும்.

Co-pay:

உங்கள் காப்பீட்டுப் படிவத்தில், இந்தப் பகுதி முழுக்க வெற்றிடமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நாம் வாங்கும் காப்பீடு 10லட்சத்திற்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறோம், மருத்துவச் செலவு 5லட்சம் ஆகிறது. காப்பீட்டு நிறுவனம் மொத்த 5லட்சத்தையும் வழங்க வேண்டும். அப்படி இல்லாமல், செலவில் 90% அவர்களும், மிச்சத்தை நாமும் செலவழிக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். இன்னும் சில பாலிஸிகளில், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மருத்துவச் செலவு அதிகமாகும் பட்சத்திலேயே அவர்கள் செலவுகளை ஏற்பார்கள் என்றெல்லாம் இருக்கும் (deductible). அத்தகைய எந்தக் கட்டுப்பாடுகளும் உங்கள் பாலிஸியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது முடிந்தவரை கட்டுப்பாடு குறைவான பாலிஸியை எடுப்பது நல்லது.

Room-rent caping:

இந்தப் பகுதியும் முடிந்தவரை வெற்றிடமாக இருக்க வேண்டும். அல்லது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பெயரளவில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் 10லட்சம் காப்பீடு வைத்திருக்கிறீர்கள். உங்கள் மருத்துவச் செலவு, சாதாரண அறையில் இருந்தால் 5லட்சம் ஆகும் என்றால், தனிநபர் அல்லது ACஅறைகளில் அதே மருத்துவச் செலவு 7லட்சத்துக்கு மேல் ஆகும்.

ஏன் இப்படி? உங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளைத் தவிர்த்து, அறை வாடகை, செவிலியர் சேவை, மருத்துவர் சேவை, என எல்லாவற்றிலும் மருத்துவமனை விலையை ஏற்றிவிடும். ஆனால் உங்கள் காப்பீட்டில் தனிநபர் அறைக்கோ அல்லது AC அறைக்கோ coverage இல்லை என்றால், நிறுவனம் அந்த மருத்துவத்துக்கு ஆகும் உங்களுக்கு அடிப்படைச் செலவான 5லட்சத்தை மட்டுமோ அல்லது அதற்கும் குறைவாகவோ உங்களுக்குக் காப்பீடு வழங்கிவிடும். மிச்சத்தை உங்கள் சொந்த செலவில்தான் பார்த்துக்கொள்ள வேண்டிவரும். எனவே இந்தப் பகுதியைக் கவணமாக வாசித்துப் பார்க்கவும்! இங்குதான் பணவீக்கம் விளையாடும். எனவே, முடிந்தவரை கட்டுப்பாடற்ற பாலிஸி நல்லது.

Sub-limits:

ஒரு உதாணத்தைப் பார்ப்போம். உங்கள் பாலிஸித் தொகை 10லட்சம். உங்கள் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு மருத்துவச் செலவு 5லட்சம். அந்தக் குறிப்பிட்ட சிகிச்சைக்கு உங்கள் காப்பீட்டில் sub-limit 50% இருந்தால், உங்களுக்கு 2.5லட்சமே காப்பீட்டில் கிடைக்கும். மீதமுள்ள 2.5லட்சத்தை உங்கள் சொந்த செலவில் பார்த்துக்கொள்ள நேரிடும். முதலில், இத்தகைய எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத பாலிஸிதான் நல்லது. அதிலும் உஷராகவேண்டிய நேரம் %ல் கட்டுப்பாடுகள் இருந்தால். ஏன்? பணவீக்கம் ஏறிக்கொண்டே செல்லும். எனவே, நீங்கள் %ல் sublimit உள்ள பாலிஸியை எடுத்துக்கொண்டால், உங்களுக்குத் தலைவலிதான்.

Exclusion:

இந்தப் பகுதியும் முடிந்தவரை வெற்றிடமாகவோ அல்லது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டோ இருக்க வேண்டும். இதில் இரண்டு வகைக் கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. முதல் வகை, பாலிஸி எடுத்துக் குறிப்பிட்ட காலத்துக்குச் சில நோய்களுக்குக் காப்பீடு வழங்கமாட்டார்கள். இதைச் சென்ற பகுதியில் குறிப்பிட்ட pre-existing disease/conditionஉடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தப் பட்டியல் முழுக்க நிறுவனத்தால் வழங்கப்படுவது. இரண்டாவது வகை, நிரந்தரமாகவே காப்பீட்டில் தவிர்க்கப்பட்ட நோய்கள். குறிப்பாக வாழ்நாள் முழுக்க சிகிச்சை எடுக்கவேண்டிய நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்குக் காப்பீடு வழங்கமாட்டார்கள். இந்த இரண்டு வகைகளிலுமே எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பாலிஸியே நமக்குச் உகந்தது.

Critical Illness:

புற்றுநோய், உறுப்புகள் செயலிழத்தல், உறுப்பு மாற்று போன்ற பிரச்சனைகள் இந்த வகையில் அடங்கும். இவற்றில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை இத்தகைய தருனங்களிலேயே தலைகீழாகும். குறைந்தது, பணச்செலவுகளாவது சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும். உறுப்புத் தானம் அளிப்பவருக்கும் சேர்த்து மருத்துவச் செலவை உங்கள் பாலிஸியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். இத்தகைய மருத்துவத்துக்கு சோதனைச்செலவுகள் முதல், மருந்து செலவுகள்வரை வழக்கத்தைவிட விலை பலமடங்ககுகளாகத்தான் இருக்கும். சிலசமயம் இத்தகைய நோய்களுக்கென்று தனியாகக் காப்பீடு வழங்கப்படுகிறது. ஒருவேளை பொது மருத்துவக் காப்பீட்டுத் தொகை இந்தப் பகுதியை இணைத்தால் அதிகமாகிவிடுகிறது என்று நீங்கள் யோசித்தால், இந்த வகை யோய்களுக்கு பிரத்தியேகமாக உள்ள காப்பீடுகளை வாங்கிக்கொள்ளலாம்.

Mental health:

மிகச் சமீபமாகக் காப்பீட்டு நிறுவனங்கள் உடல்நலம் மட்டுமல்லாமல், மனநலம் சார்ந்த நோய்களையும் காப்பீட்டில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மனநல மருத்துவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடப்பதில்லை. உங்கள் வழக்கமான வேலைகளுடன் மருந்துகளோ அல்லது சில பயிற்சிகளோ நீண்டகாலம் எடுக்கவேண்டி வரும். இத்தகைய செலவுகள் இன்னும் சரியாகப் பட்டியலிடப்பட்டு பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தத் துறையும் வேகமாக மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. எனவே, உங்கள் காப்பீட்டில் இந்தப்பகுதி, அதிக கட்டுப்பாடுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மனநலம் நிச்சயமாக உங்கள் காப்பீட்டினுள் வந்தாக வேண்டும்.

Aayush:

ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நவீன மருத்துவம் வளர்வதற்கு முன்னரே இருந்தவை. ஆனாலும், அவற்றைக் காப்பீட்டில் எடுத்துக்கொள்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே, உங்கள் காப்பீட்டில், இதில் உள்ள கட்டுப்பாடுகள் குறைவாகவும் தளர்த்தப்பட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவை சேர்க்கப்பட்டிருந்தாலும் ஓகே, இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தொழில், பொழுதுபோக்கு:

மருத்துவக் காப்பீட்டில் எப்படி எங்களின் தொழிலோ அல்லது பொழுதுபோக்கோ விளையாட முடியும்? உங்கள் தொழில் அபாயகரமான சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலோ, அல்லது உங்கள் பொழுதுபோக்கு அபாயம் நிறைந்ததாக இருந்தால் (எ.கா., bike race, scuba diving, மலையேற்றம்), நீங்கள் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இத்தகைய சூழ்நிலைகளில் காப்பீடு கிடைப்பதே அறிது. கிடைத்தாலும் அதிக கட்டுப்பாடுகளுடன் அதிக விலையில்தான் கிடைக்கும். சிலநேரம் உங்களின் காயம் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது என்று அவர்களுக்குத் தெரியவந்தால், உங்கள் claim முழுவதுமாக நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம். எனவே, உங்கள் காப்பீட்டு படிவத்தில் உள்ள கட்டுப்பாடுகளை முழுக்க வாசித்துப் பார்க்கவும்.

Wellness Benefits:

நீங்கள் தினமும் உடற்பயிற்சியோ அல்லது ஆரோக்கியம் காக்கும் எந்த விஷயத்தையும் செய்துகொண்டு, அவற்றைப் பற்றி உங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல்களைத் தெரிவித்தால், அவர்கள் உங்கள் தவணைத்தொகையிலோ அல்லது வேறுவகையிலோ சில சலுகைகளை வழங்க முன்வருவார்கள். சமீபமாகப் பல நிறுவனங்கள் இத்தகைய வசதியை அளிக்கின்றன. தனிப்பட்ட முறையில், இந்த வசதிகளின் எனக்கு நாட்டமில்லை. அவர்களுடன் என் உடல் நலம் பற்றிய எந்த விஷயத்தையும் நானாகப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. இது அவரவர் விருப்பம் பொருத்தது.

மேலே குறிப்பிட்ட சில தொழில்நுட்ப பிரச்சனைகளில் தெளிவு வந்தவுடன், நமக்கு எந்த நிறுவனத்திலிருந்து மருத்துவக் காப்பீடு வாங்க வேண்டும், காப்பீடு இருந்தாலும் நாம் எந்த வகையில் எல்லாம் எதிர்கால ஆசாதாரண சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தயாராக வேண்டும் என்று பார்ப்போம்.

Settlement Ratio:

மேற்குறிப்பிட்ட எல்லா வசதிகளும் இருந்து, நிறுவனம் உங்களுக்கு settlement வழங்க முடியாத சூழ்நிலையில் இருந்தால், எந்தப் பலனும் இல்லை. எனவே, சந்தையில் நன்கு அறிமுகமாகி அதிக வாடிக்கையாளர்களையும், அதிக network hospitalம், அதிக cashless claimவழங்கும், அதே சமயம் அதிகமான claimகளை ஏற்றுக்கொண்ட நிறுவனமாகவும் இருந்தாக வேண்டும். இவற்றை IRDAI ன் இணையதளம் மற்றும் சந்தையில் நம்பகத்தன்மையுள்ள சில தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சரிபார்க்கலாம்.

தன்முணைப்பு:

மருத்துவக் காப்பீடு இருக்கிறது என்கிற பெயரில், கண்ட உணவை, நேரக்கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக, நீண்ட நாட்களுக்கு உட்கொண்டு வருதல், கட்டுப்பாடில்லாத மதுப்பழக்கம், புகைப்பழக்கம், என்று நம் உடலையும் மனதையும் கெடுக்கும் விதத்தில் எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவந்தால், நாம் உருப்பட வழியே இல்லை. இதில் மருத்துவக் காப்பீடு குறிப்பிட்ட அளவுக்குமேல் நமக்கு உதவப்போவதில்லை. ஆரோக்கியமான உடல், சரியான தூக்கம், கட்டுப்பட்டுடன் வேலை, பொழுதுபோக்கு நேரம் போன்றவை, நம் உடல் மற்றும் மனநலன் காக்கும்.

என் சொந்த அனுபவத்தில், மருத்துவக் காப்பீடு பற்றித் தெரிந்தவற்றை இங்குப் பகிர்ந்துள்ளேன். உங்களின் சொந்த ஆராய்ச்சிக்கும், காப்பீடு தொடர்பான விழிப்புணர்வுக்கும் எனது வாழ்த்துகள். முதலீடுகைப் பற்றி, அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: