8 நிமிட வாசிப்பு

இது நிதிச் சுதந்திரம் பற்றிய மூன்றாவது பதிவு. முதல் இரண்டு பதிவுகளை பதிவு 1, பதிவு 2 வாசித்துவிடுவது ஒரு தொடர்ச்சியைக் கொடுக்கும். இந்தப் பதிவில் ஆயுள் காப்பீடு என்றால் என்ன, அது ஏன் அவசியப்படுகிறது, எவரெல்லாம் காப்பீடு செய்துகொள்ளவேண்டும், எவ்வளவுக்கு, எந்த வயதுவரை எடுக்கவேண்டும், என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

ஆயுள் காப்பீடு என்பது, சுருங்கச் சொல்லவேண்டும் என்றால், ஒருவர், தன்னை காப்பீடு செய்து கொண்டுவிட்ட பிறகு, ஏதோ காரணத்தால், இறக்க நேரிடும்போது, அவரைச் சார்ந்தோருக்கு உதவிடும் வகையில் காப்பீட்டு ஒப்பந்தப்படி உரியத் தொகையை அவர்களுக்கு அளிப்பது. அந்தத் தொகை, அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படலாம்.

இந்தியாவில் பல்வேறு வகையில் ஆயுள் காப்பீடு விற்கப்படுகிறது. பெரும்பாலானவை, நிதிச் சுதந்திரம் நோக்கிப் பயணிப்பவர்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காதவை. குப்பைகளிலிருந்து, தங்கத்தைத் தோண்டி எடுக்கும் அளவுக்கு பொறுமையும், கவனமும் ஆயுள் காப்பீடு வாங்குபவருக்கு அவசியம். அல்லது, நம் நிம்மதியையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் தொலைப்பது உறுதி. முதலில் எவையெல்லாம் ஆயுள் காப்பீட்டில் அடங்காது என்று பார்த்துவிடுவோம். சந்தையில் கிடைக்கும் 98% காப்பீடுகள், வெறும் குப்பைகளே. அவற்றைக் கடந்து, அடுத்த 2%ஐ அடைவதில்தான் நம் திறமை உள்ளது.

முதல் விதி, காப்பீடு என்று மனதுக்குள் வந்ததும், சுற்றம் மற்றும் நண்பர் குழுவில் இருக்கும் ஒரு தரகர் நம் கண் முன்னே வந்து போவார். அவரை முதலில் மறந்துவிடவேண்டும். எந்த ஆலோசகரும், தரகரும் தனக்கு இலாபம் அளிக்கும் ஒன்றை நம் தலையில் கட்டத்தான் பார்ப்பார். ஒன்று அவர்களை அணுகாமல் காப்பீட்டை வாங்கிவிட முடியும் என்று நம்மை முதலில் நம்பவேண்டும். அல்லது அவரைகளை வைத்துத்தான் வாங்குவேன் என்றால், அவர்களுடன் சரியான தகவல்களுடன் உரையாடும் அளவுக்கு அறிவுச் சரக்கு இருக்க வேண்டும்.

மேற்கூறிய 2%ஐப் பற்றி ஆராய்வதற்குமுன். நமக்கு எதற்கு காப்பீடு அவசியம் என்று பார்ப்போம். பொதுவாக குடும்பத்தின் முக்கியமான வருவாயைக் கொண்டுவருபவர், தன்னை காப்பீடு செய்துகொள்வது அவசியமானது. ஒருவேளை எதிர்பாராத விதமாக குடும்பம் அவரை இழக்க நேரிட்டால், மொத்தமாகத் தெருவில் நிற்க நேரிடும். ஒருவேளை குடும்பத்தில் ஒருவருக்குமேல் சம்பாதித்தாலும், முதன்மைச் சம்பளதாரரை இழப்பதால், குடும்பத்துக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிக்கட்டும் வகையில் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்குக் காப்பீடு பொதுவாக அவசியப்படாது.

இந்தியாவில் இன்றைய சராசரி ஆயுள் 60-70ல் உள்ளது. ஆனால் நம் சம்பாதிக்கும் சக்தி, 60க்கு முன்னரே குறைந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்குள் நம் நிதிச் சுதந்திரத்தை அடைந்திருக்கவேண்டும். எனவே காப்பீடு செய்துகொள்பவர் ஒரு குறிப்பிட்ட வயதில் வேலையிலிருந்து ஓய்வெடுப்பதாகக் கணக்கிட்டால், அந்த வயதுவரை மட்டும் அவர் காப்பீடு செய்துகொண்டால் போதுமானது. யோசிக்கச் சிரமமாக இருந்தால், பொதுவாக 60வயதை இலக்காக வைத்துக்கொள்ளலாம்.

ஏன் அதற்குமேல் காப்பீடு அவசியப்படாது? நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்ட ஒரு குடும்பம், தன் தேவைகளை ஏற்கெனவே ஈட்டிய செல்வத்திலிருந்தே அவர்களின் வாழ்நாளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சராசரி ஆயுளை நெருங்க நெருங்க, காப்பீட்டுத் தொகையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அந்த வீண் செலவையும் நாம் தவிர்த்துவிட்டு, முதலீட்டில் கவனம் செலுத்தலாம்.

இப்போது, நமக்கு எவர், எந்த வயதுவரை, எந்த காரணத்துக்காகக் காப்பீடு செய்துகொள்ளவேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. அடுத்தது, எந்த தொகைக்குக் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று பார்ப்போம். தொகையை முடிவுசெய்வதற்கு நாம் பின்வருவனவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலில், பணவீக்கம். இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பணவீக்கம் 6-7ல் இருக்கிறது. நாம் 8-10%க்கு கணக்கிட்டுக்கொள்வது நல்லது.

அடுத்தது, குடும்பத்தின் வருடத்துக்கு ஆகும் தற்போதைய செலவு. குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆகும் கூடுதலான செலவுகளின் தோராயக் கணக்கு. குடும்பத்தில் உள்ள மொத்தக் கடன் (தவணை காலத்தின் மொத்த வட்டியும் சேர்த்து), படிப்புச் செலவுகள், திருமணச் செலவுகள், இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு, அடுத்த 20-25 வருடங்களுக்கான மொத்தச் செலவைச் சேர்த்தால் வரும் தொகையில், குடும்பத்தின் முதன்மை சம்பளதாரரைத் தவிர்த்து மற்றவர்களால் இப்போது ஈட்டப்படும் வருட வருமானத்தை அதே ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு, கழித்துக்கொண்டால் வரும் தொகைக்கு காப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

இதனை எளிதாகக் கணக்கிட இணையதளத்தில் நிறையச் செயலிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் காட்டப்படும் காப்பீட்டுத் தொகையைப் பார்த்து முதலில் பயந்து ஓடிவிடாமல் இருக்கவேண்டும். பெரும்பாலும், இது சில கோடிகளில் வந்து நிற்கும். இங்கே சந்தையில் கிடைக்கும் காப்பீடுகள், சில லட்சங்களுக்கே அதிகத் தவணை எதிர்பார்ப்பார்கள். அந்த 98% காப்பீட்டுக் குப்பைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு எப்படி நமக்கான காப்பீட்டை, சரியான விலையில் வாங்குவது என்று பார்ப்போம்.

ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு கீழ்வரும் படிகள் முக்கியமானவை:

  1. காப்பீடு செய்துகொள்ளும் நபர், இறந்தால், குடும்பத்துக்குச் சேரவேண்டிய தொகை எந்த பிடித்தமும், சட்ட சிக்கல்களும் இல்லாமல் சென்றாகவேண்டும். அதாவது, நிறுவனமும் சரி, பாலிஸியும் சரி, நம்பகமானதாக இருக்கவேண்டும்.
  2. ஒருவேளை காப்பீடு செய்துகொண்ட நபர் காப்பீட்டுக் காலத்தைத் தாண்டி வாழ்ந்தார் என்றால், அவர் நிறுவனத்திலிருந்து எந்த மறைமுகப் பலனையோ, தொகையையோ எதிர்பார்க்கக் கூடாது. அதுவரை அவர் செலுத்திவந்த சந்தா காலாவதியாகிவிடும். அவ்வளவுதான்.
  3. காப்பீட்டுச் சந்தாவை, வருடம் ஒருமுறை மட்டும் செலுத்துமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற முறைகளான, ஒரே முறையில் அனைத்து சந்தாக்களையும் செலுத்திவிடுவது, மாதம் ஒருமுறை செலுத்துவது எல்லாம், காப்பீட்டு நிறுவனத்துக்குத்தான் இலாபம் சேர்க்கும்.
  4. மேலே கணக்கிட்ட தொகையைத் தாண்டியோ, குறைத்தோ காப்பீடு எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை பின்னர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அதிகத் தொகையை சந்தாவாக செலுத்த நேரிடும்.
  5. விண்ணப்பப் படிவத்தில், காப்பீடு செய்யும் நபரிடம் நிறுவனம் எதிர்பார்க்கும் எல்லாத் தகவல்களும் உண்மையுடனும், தெளிவுடனும் பதிவிடவேண்டும். ஏமாற்றுகிறேன் பேர்வழி என்று சொதப்பிவைத்தால், காப்பீடு இரத்து செய்யப்படுவதற்கும், சேரவேண்டிய பலன் குடும்பத்தைச் சேராமல் போவதற்கும் வழிவகுத்துவிடும்.
  6. எந்த தரகரும், ஆலோசகரும் இல்லாமல், நேராக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியோ, அல்லது இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து, பாலிஸி கைக்கு வரும்வரை, நிறுவனத்தின் எந்தவித வியாபார உத்திக்கும் மசியாமல், நம் கணக்கில் கவணமாக இருக்கவேண்டும்.
  7. ஒருவேளை நிறுவனம், இரத்தப் பரிசோதனைகளையோ அல்லது மருத்துவரின் சான்றிதழையோ கோரினால், யோசிக்காமல் ஒத்துழைக்கவேண்டும். இதில் நாம் காட்டும் சுனக்கம், தேவையில்லாமல் அவர்களை சந்தேகம் கொள்ளச் செய்துவிடும்.
  8. எந்த விதமான rider சேவைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நமக்குத் தேவை, ஆயுள் காப்பீடு. அதில் விபத்துக் காப்பீடு, அது இது என்று சேர்த்துக்கொள்வது அவசியமற்றது. அவை எல்லாம் நிறுவனத்துக்குத்தான் இலாபமாகும். அவசியமென்றால் அவற்றை நம்மால் தனியாக விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள முடியும்.

சில இணையதளங்கள் பல்வேறு நிறுவனங்களின் பாலிஸிகளையும் அவற்றின் சாதக பாதகங்களையும் பட்டியலிட்டு, அவற்றுக்கு ஆகும் செலவையும் காட்டுவார்கள். அவற்றை நாம் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் காப்பீட்டு நிறுவனத்தை அணுகும்போது, நாம் எதிர்பார்க்கும் தொகைக்கு அவர்களை மசியவைக்க இவை உதவும். ஆனால் அதில் நிதானமும், கவனமும் அவசியம். குறிப்பாக, இந்த இணையதளங்கள் உங்கள் கைப்பேசி எண்ணையோ அல்லது, மின்னஞ்சல் முகவரியையோ கேட்பார்கள். ஒருவேளை சரியான தகவல்களை நீங்கள் அளித்தால், இரண்டு நாட்களுக்குத் தூக்கம் கெடுவதும், கடைசியில் காப்பீடே வேண்டாம் என்று ஓட்டம் எடுப்பதும் உறுதி. எனவே உசாரா இரு குமாரு!.

கடைசியாக, எந்த நிறுவனத்தில் காப்பீடு வாங்குவது என்று பார்ப்போம். இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு வழங்குகின்றன. இதில் காப்பீட்டு நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன, அவர்களின் இலாபம் எந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதும் நல்லது. நம்மிடம் வாங்கும் சந்தாவில் அவர்கள் பல்வேறு வகையில் முதலீடு செய்வார்கள். குறிப்பாக, அரசாங்க பத்திரங்கள், வங்கிப்பத்திரங்கள், பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவை. அவற்றில் வரும் வருமானத்திலேயே காப்பீட்டுத் தொகையை நமக்கு வழங்குகிறார்கள். இத்தகைய முதலீடுகளில் அவர்கள் எந்த அளவுக்குத் திறமையாகச் செயல்படுகிறார்களோ, அவ்வளவு வேகமாக வளரவும், அதிக சந்தாதாரர்களைச் சேர்த்துக்கொள்ளவும் முடியும். ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, கீழ்வரும் படிகளை நாம் நிறுவனங்களைத் தேர்வுசெய்வதற்கு பயன்படுத்தலாம்:

  1. நீண்ட காலமாக சந்தையில் இயங்கும் அதேசமயம், அதிக சந்தாதாரர்களைக் கொண்ட நிறுவனங்களை தேர்வுசெய்யலாம்.
  2. காப்பீட்டு நிறுவனங்கள் சந்தாதாரர்களுக்கு எந்த அளவுக்கு பலனை இதுவரை கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்று IRDAI ஒரு குறியீட்டை வெளியிடுகிறது. அதை claim settlement ratio என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதில் 95%க்கு மேல் இருக்கும் நிறுவனங்களை நாம் கணக்கில் கொள்ளலாம்.
  3. குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட பாலிஸியை வழங்கும் நிறுவனம் நல்லது.
  4. உங்களால் முடிந்தால், நிறுவனம் எந்தவகை முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். இது நம் அறிவுக்கு மட்டுமே. பாலிஸி எடுப்பதற்கு இது அவசியப்படாது.

அவ்வளவுதான். உங்கின் நிதிச் சுதந்திரப் பயனத்தின் முதல் முக்கிய முடிவே எடுப்பதற்கு எனது வாழ்த்துகள். அடுத்த பதிவில், மருத்துவக் காப்பீடு பற்றி விரிவாக பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: