10 நிமிட வாசிப்பு

நிதிச் சுதந்திரத்தைப் பற்றிக் கடந்த சில பதிவுகளாகப் பார்த்து வருகிறோம். இதுவரை, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டோம். இந்தப் பதிவு, அவசரகாலத்துக்கான முதலீட்டைக் குறித்தது.

ஏன் நம் சேமிப்பை முதலில் அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் துவங்க வேண்டும்? அவசரத்தேவைகளுக்கு நம்மைத் தயார்செய்துகொள்ளாமல், நீண்டகால முதலீட்டில் இறங்கினால், அசாதாரண சூழ்நிலைகளை நம்மால் சமாளிக்க முடியாமல் போகலாம். நீண்ட காலத் தேவைகளுக்காகச் செய்யப்படும் முதலீடுகளும், இத்தேவைகளால் பாதிக்கப்படும். அதனால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு, நம் குழந்தையின் மேற்படிப்புச் செலவுக்காகச் PPFல் சேமிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த முதலீட்டிலிருந்து அவசரத்துக்கு பணம் எடுப்பது முதலில் நம் இலக்கில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். இரண்டாவது, PPFல் இருந்து பணத்தை எடுக்க முடியாது, ஆனால் அதில் கடன் வாங்கிக்கொள்ளலாம். வாங்கினாலும், அதற்கு வட்டியைக் கட்டிக்கொண்டு சேமிப்பைத் தொடர முடியாமல் போகும்.

சரி, எத்தகைய தேவைகளை நாம் குறுகிய காலத் தேவைகளாகக் கணக்கிடலாம்?

  1. நாம் வேலை செய்யும் நிறுவனம், நம்மை எதிர்ப்பாராத நேரத்தில் வேலையை விட்டு நீக்கிவிடலாம். குறைந்தது 6-9 மாதங்களுக்கு நம்மால் அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள முடியாமல் போகலாம். அல்லது, நாம் நடத்திவரும் தொழில் அடுத்த சிலமாதங்களுக்கு அடிவாங்கி, ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் போகலாம்.
  2. மருத்துவக் காப்பீடு கையில் இருந்தாலும், சில சமயங்களில் நம்மால் cashless claim செய்ய முடியாமல் போகலாம். அத்தகைய சமயத்தில், நம் கையிருப்பில் இருக்கும் பணத்தைச் செலவழித்துவிட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பித்து, 15-30 நாட்களுக்கு அவர்கள் பணத்தை நம் கணக்கில் வரவு வைக்கக் காத்திருக்க வேண்டும்.
  3. வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு சாதனம் பழுதாகிப்போகலாம். ஆனால் அது இல்லாமல், நம்மால் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகலாம்.
  4. ஏதோ ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கலாம். அவை குறிப்பிட்ட காலத்தில் நல்ல தள்ளுபடியில் கிடைக்கும் பட்சத்தில், அதற்காகக் காத்திருக்கலாம்.
  5. நம் சுற்றம், உறவினர், நண்பர்களுக்கு ஏதேனும் அவசரத்துக்குப் பண உதவி தேவைப்படலாம். இந்தியாவில் இதனை முழுவதும் தவிர்த்துவிட முடியாது.
  6. இந்த வருடம் சுற்றுலா செல்லாம் என்று நாம் திட்டமிட்டிருக்கலாம்.
  7. ஏதோ சமூக சேவைகளுக்கோ, இலக்கியம், கலை போன்றவற்றுக்கு நாம் நன்கொடை குறிப்பிட்ட காலத்தில் அளிக்க வேண்டி வரலாம்.
  8. அடுத்த சில மாதங்களில் பங்குச் சந்தையில் பங்குகள் விலை இறங்கலாம் என்று கணக்கிட்டு வைத்திருந்தால், அவற்றை வாங்குவதற்கு சேமிக்கலாம்.

மேலே குறிப்பிட்டவை மட்டுமல்லாமல், ஏதோ ஒரு காரணத்துக்காக அடுத்த ஒரு வருடத்துக்குத் தேவையாகும் பணத்தை நாம் இந்த முறையில் முதலீடு செய்யலாம்.

தேவைகளை எப்படித் தோராயமாகக் கணக்கிடுவது? இது அவரவர் வாழும் ஊர், செய்யும் தொழில், குடும்பச்சூழல், பணவீக்கம் போன்றவற்றைப் பொருத்தது. ஆனால் அவசியமாகச் சேமித்தே ஆகவேண்டியவை, குறைந்தது மருத்துவத் தேவைகளுக்காகச் சில லட்சங்களையும், நம் குடும்பச்சூழலுக்கு ஏற்ப 6-9 மாதத் தேவைகளைக் கட்டாயம் சேமிப்பில் வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் 10% பணவீக்கம் இருப்பதாகக் கணக்கிட்டுக்கொள்வது நல்லது. இதனை எளிதாகக் கணக்கிடவும் சில இணையதளங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வகை முதலீட்டின் முக்கிய இலக்குகள்:

  1. உடனடித் தேவைக்குப் பணத்தை எடுக்க முடிய வேண்டும்.
  2. முதலீட்டின் அபாய அளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும்.
  3. நம் முதலீடு பணவீக்கத்தை ஓரளவுக்காவது சமாளிக்க வேண்டும்.
  4. முதலீடு செய்ய எளிதாக இருக்க வேண்டும்.
  5. முதலீட்டில் வரி அளவு குறைவாக இருக்க வேண்டும்.

எப்படிச் சேமிப்பது? அடுத்த இரண்டு மாதங்களுக்கான தேவைக்கு நாம் வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்வதே நல்லது. மற்ற அனைத்தையும் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. அவர்கள் வெறும் 3% வட்டிதான் வழங்குவார்கள். வந்த வட்டியிலும் நம் வருமானத்தைப்பொருத்து, அரசாங்கம் வரியாக வழித்து எடுத்துவிடுவார்கள். இதற்காக மிகவும் அபாயகரமான முதலீடுகளில் ஈடுபடுவதும் சரிவராது.

நம் தேவை முன்று மாதங்களுக்கு மேலோ, உத்தேசமான இலக்கோ இல்லை என்றால், மற்ற குறுகிய கால முதலீடுகளில் இறங்குவது நல்லது. இவற்றுக்குச் சரியான சில முதலீடுகளை அவற்றின் அபாய அலகின் வரிசையில் அலசுவோம்.

Overnight fund

இந்த வகை முடலீடுகள் mutual fund நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. நம்மிடமிருந்து பெறப்படும் தொகை, மிகவும் குறுகிய கால பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இத்தகைய பத்திரங்கள், தொழில் நிறுவனங்களால், குறுகிய வர்த்தகம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது. அந்தக் காலம் தோராயமாக ஒருநாளில் காலாவதியாகிவிடும். இத்தகைய முதலீடுகளில், AMCகளின் தரகு போக, நம்மால் வங்கிச் சேமிப்பைவிட சற்றே அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

அரசாங்க வரியும் இத்தகைய முதலீடுகளில் வங்கிச் சேமிப்பைவிட குறைவாகவே இருக்கும். முதலீட்டில் அபாயமும் மிகவும் குறைவாக இருக்கும். சில AMC (Asset Management Company)களில் இந்த வகை முதலீடுகளைத் திரும்பப்பெற 30நிமிடங்களில் முடியும். கிட்டத்தட்ட நாம் இவற்றை வங்கி சேமிப்புக் கணக்காகவே பயன்படுத்தலாம். ஆனால் 30 நிமிடங்களில் திரும்பப்பெறப்படும் உடனடித்தொகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். எடுத்துக்காட்டாக 50000ரூ அல்லது 90% முதலீட்டை (இரண்டில் எது குறைந்ததோ) இந்த வகையில் திரும்பப்பெற முடியும். மற்ற தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க, 2-3 பங்குச்சந்தையின் வேலை நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்.

Liquid fund

இதுவும் overnight fundல் உள்ள பெரும்பாலான பண்புகளைக் கொண்டிருக்கும். இதில் வாங்கப்படும் பத்திரங்களின் ஆயுள், 15-91 நாட்களுக்கு இருக்கும். இதில் கிடைக்கும் வருவாய், overnight fundஐ விடச் சற்று அதிகமாக இருக்கும். பெரும்பாலான குறுகிய காலத் தேவைகளுக்கு இந்த வகை முதலீடு சரியாக இருக்கும். அபாய அலகு, கிடைக்கும் பலன், எளிதில் முதலீட்டைத் திரும்பப்பெறும் வசதி போன்றவற்றைக் கணக்கில் கொண்டால், இது ஒரு சமநிலையைக் கொண்டுள்ளது. எங்கள் குடும்பத்தின் பெரும்பாலான அவசரத் தேவைகளுக்கு இந்தவகை முதலீடுகளிலேயே ஈடுபடுகிறோம்.

Ultra short term fund

இந்த வகை முதலீட்டுப் பத்திரங்களின் ஆயுள், 91நாட்கள் முதல் ஒரு வருடம்வரை இருக்கும். liquid fundஐ விட அதிகமான வருவாயை இந்த வகை முதலீடுகள் கொடுக்கும். ஆனால் அவற்றில் கிடைக்கும் நெகிழ்வுத்தன்மை இவற்றில் குறைவு. அபாயமும் சற்று அதிகம். நம்மால் 30நிமிடத்திற்குள் முதலீட்டைத் திரும்பப்பெற முடியாது. வழக்கமான 2-3 பங்குச்சந்தையின் வேலை நாட்களில் நமக்குத் தொகை வங்கிக் கணக்கில் வந்துசேரும். ஒரு வருடம் முதல் 5 வருடம்வரையில் இருக்கும் தேவைகளுக்கு இந்தவகை முதலீடு பயனுள்ளதாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட மூன்று வகை முதலீடுகளும் தொழில் நிறுவனங்கள் வழங்கும் பத்திரங்களில்தான் (bond) முதலீடு செய்கின்றன. பெரும்பாலும் எல்லா AMCகளும் இத்தகைய சேவைகளை வழங்குகின்றன. அவற்றை வாங்கும்போது நான் கணக்கில் கொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிடுகிறேன்.

  1. Risk. பத்திரங்கள் திவாலாகிவிடும் வாய்ப்புதான் இதில் உள்ள அபாயம். அப்படி நம் AMC வாங்கிவைத்திருக்கும் பத்திரங்கள் திவாலாகிவிட்டால், நம் முதலீட்டை இழக்க நேரிடும். ஆனால் நாம் மிகவும் குறுகிய கால அளவில் முதலீடு செய்வதால், நம்மால் ஓரளவுக்குச் சமாளித்துவிட முடியும். தொழில் நிறுவனங்கள் வழங்கும் பத்திரங்கள் S&P, Moody’s போன்ற rating agencyகளால் மதிப்பிடப்படுகின்றன. நாம் முதலீடு செய்ய விரும்பும் AMC fundல், அவர்கள் எந்த வகையான rating உள்ள பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். அதில் AAA rating உள்ள பத்திரங்களில் முதலீடு செய்வதுதான் நல்லது. அதற்குக் கீழ் rating உள்ள பத்திரங்களை வாங்கும்போது அதில் திவாலாகும் அபாயம் அதிகம்.

  2. Asset under management (AUM). AMC வழங்கும் fundல் அவர்கள் எவ்வளவு தொகையைக் கையாள்கிறார்கள் என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏன்? ஒருவேளை நம் முதலீட்டைத் திரும்பப்பெற நினைத்தால், அதனை வாங்குவதற்கு அதிக ஆட்கள் இல்லை என்றால், மிகவும் குறைந்த விலைக்குப் பத்திரங்களை விற்க நேரிடும். அடுத்து, நம்மைப் போல் அதிகம்பேர் ஒரே நேரத்தில் விற்க வந்தாலும், நமக்குக் கிடைக்க வேண்டிய தொகை குறையும். மூன்றாவதும் முக்கியமானதுமானது, வாங்கி வைத்திருக்கும் பத்திரங்களின் அபாயம். ஒருவேளை fundன் கையிருப்பில் இருக்கும் பத்திரங்ளில் ஒருசில பத்திரங்கள் திவாலாகிவிட்டால், எல்லா முதலீட்டாளர்களையும் பாதிக்கும். AUMஅதிகமாக இருக்கும் fundல் அந்த அபாயம் அதிக முதலீட்டாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. எனவே நஷடம் குறைவாக இருக்கும். எனவே, fundன் AUM குறைந்தது 500கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்படி பார்த்து முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம் மிகவும் அதிகமான தொகையைக் கையாளும் fund சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். Fund managerஆல் அவ்வளவு பெரிய தொகையைக் கையாள முடியாமல், வர்த்தகத்தில் சுனக்கம் ஏற்பட்டு, அபாயமும் அதிகரித்து நமக்கு வரும் இலாபமும் குறையும். எனவே 4000 கோடிகளுக்கு அதிகமாகக் கையாளும் fundல் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதும் நல்லது. இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் AMC முதலீட்டுக்கு நல்லது.

  3. Expense ratio. நம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பத்திரங்களை வாங்கி விற்று, வரி, பங்குச் சந்தைக்குச் செலுத்தும் தொகை, அதைச் செய்யும் Fund managerக்கு ஆகும் செலவு என்று எல்லாவற்றையும், AMC தரகுத்தொகையாகக் கழித்துக்கொள்வார்கள். இதில் ஓரளவுக்குக் குறைந்த தொகையைக் கேட்கும் நிறுவனத்தை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சமீபமாக, AMC நிறுவனங்கள் நம்மிடம் சில கண்ணாமூச்சி விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். குறைந்த expense ratioஐ முதலில் வைத்துவிட்டு, ஓரளவுக்கு fundல் முதலீடுகள் குவிந்தவுடன் expense ratioஐ ஏற்றிவிடுவார்கள். எனவே, இதனை அவ்வளவாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

  4. உடனடித் திரும்பப்பெறும் வசதி. நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல, நாம் குறுகிய காலத் தேவைகளுக்காகச் சில அவசரத் தேவைகளையும் சேர்த்து முதலீடு செய்கிறோம். எனவே, நம்மால் விரைவாக முதலீட்டைத் திரும்பப்பெற முடிய வேண்டும். இந்த வசதியை வழங்கும் நிறைய AUMகள் சந்தையில் உள்ளன. அவற்றை நாம் பரிசீலனை செய்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கலாம்.

  5. Returns. பொதுவாக நம் முதலீட்டுக்கு, AMC தனது, தரகுத் தொகையைப் பிடித்துக்கொண்டு இலாபம் எவ்வளவு வழங்குகிறார்கள் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் இத்தகைய குறுகிய கால முதலீடுகளில், நம்மால் பணவீக்கத்தை வெல்லும் returnsஐ எதிர்பார்க்க முடியாது. அப்படியே கிடைத்தாலும், அவற்றில் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இதனை அவ்வளவாகக் கணக்கில் கொள்ளவேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றால், கடைசி அலகாக வைத்துக்கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்து வகை முதலீடுகளும் RBI அல்லது SEBIயால், கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் முதலீடுகள். அரசு மற்றும், சட்டப் பாதுகாப்பு அற்ற எந்த முதலீட்டிலும் நாம் இறங்கக் கூடாது. குறிப்பாக நம் இலக்கு வேரொரு துறையில் இருந்து, நம் நிதிச் சுதந்திரத்துக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தப்போகிறோம் என்றால். அடுத்து வரும் பதிவுகளில், நீண்டகால முதலீடுகளை எப்படு அணுகலாம் என்று பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்டது: