மியூச்சுவல் ஃபண்டுகள்
நமக்கு இருக்கும் வேலைச் சுமையில், நேரடிப் பங்கு வர்த்தகத்திலும், கடன் பத்திரங்களை வாங்குவதிலும் சில சிக்கல்கள் உள்ளன என்று விரிவாகப் பார்த்தோம். அத்தகைய பிரச்சனைகளைச் சமாளிக்க நமக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் எப்படி உதவக்கூடும் என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்(AMC) சில திட்டங்களை முன்வைப்பார்கள். நமக்குத் தோதான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்தால், நம் முதலீட்டை அவர்கள் அதற்கான துறை வல்லுனரைக்கொண்டு நிர்வகிப்பார்கள். திட்டத்தின் மேலாளர், அந்த குறிப்பிட்ட திட்டத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, பங்குகளை/கடன் பத்திரங்களை வாங்கி விற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அதற்குச் சேவையை வழங்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் முதலீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளும்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, நம் முதலீட்டுத்திட்டம் 65% பெரிய நிறுவனங்களின் பங்குகளிலும், மீதமுள்ள 35%ஐ முதல்தர கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இத்தகைய தேவைக்குச் சந்தையில் நிறைய Hybrid திட்டங்கள் கிடைக்கின்றன. அதில் நமக்குத் தோதானதைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் போதும். அந்த முதலீட்டு விகிதத்தை அவர்கள் சராசரியாகப் பொருந்தும்படி பார்த்துக்கொள்வார்கள். இதேபோல நமக்குத் தேவையானபடி முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள் நிறையத் திட்டங்களை வழங்குகிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் உள்ள சில நன்மைகள்.
-
SEBI regulated. முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்க நிறுவனமான SEBIஆல் இந்த ஃபண்டுகளை வழங்கும் AMC நிறுவனங்களும் அவர்களின் திட்டங்களும் கண்காணிக்கப்படுகின்றன. ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், SEBI தலையிட்டு நமக்கு உதவுவார்கள்.
-
நேர மிச்சம். நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடுவதில் விரயமாகும் நேரத்தை நாம் குறைந்த செலவில் மிச்சப்படுத்திக்கொண்டு, நமக்குப் பிடித்த துறையில் கவனத்தைச் செலுத்தலாம்.
-
எளிமை. வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு நமக்குத் தரகு நிறுவனத்திடம் கணக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை வாங்கி விற்கும்போதும் நாம் அவர்களுக்குத் தரகுத் தொகையைச் செலுத்த வேண்டும். இத்தகைய சிக்கல்களை மியூச்சுவல் ஃபண்டுகள் எளிமையாக்கியுள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகளில் நம்மால் எளிய முறையில் முதலீடு செய்ய முடியும். நம் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாதம் ஒருமுறை தானியங்கி முறையில் முதலீடு செய்யும்படி அமைத்துக்கொள்ள முடியும்.
-
options. நமக்கு இப்போதைய தேவை முதலீடு செய்வதுதான் என்றால், growth வகை முதலீட்டைத் தேர்வுசெய்துகொள்ளலாம். முதலீட்டில் வரும் இலாபம் மீண்டும் அதிலேயே முதலீடு செய்யப்படும். நாம் முதலீட்டை வெளியே எடுக்கும்போது அதற்கான வரியைச் செலுத்தினால் போதும். அதேபோல நம் முதலீட்டிலிருந்து வருமானம் வரவேண்டிய தேவை உள்ளது என்றால், divident வகை முதலீட்டைத் தேர்வுசெய்துகொள்ளலாம். நம் முதலீட்டில் வரும் இலாபத்தை அவர்கள் dividentஆக வழங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிறைய வாய்ப்புகளை இந்த திட்டங்கள் வழங்குகின்றன.
நமது நீண்டகால முதலீடுகளைச் சரியான விகிதத்தில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், கனிமங்கள், மற்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் வெவ்வேறு வகையில் உதவுகின்றன. அத்தகைய மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் வகைகள் (சுருக்கமாக).
- Equity funds
கணிசமான முதலீடுகளை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளை Equity fund என்று வகைப்படுத்தலாம். SEBIன் நெறிமுறைகளின்படி, இந்த ஃபண்டுகள் மேலும் சில வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன (சந்தை மூதலனத்தின்படி).
-
largecap funds. இந்தவகை ஃபண்டுகள் குறைந்தது 80% முதலீட்டை எப்போதும் முதல் 100 நிறுவனங்களின் பங்குகளில்தான் முதலீடு செய்வார்கள்.
-
large mid cap funds. குறைந்தபட்சம் 35% முதலீட்டைச் சந்தை மூலதனத்தின்படி முதல் 250 நிறுவனங்களிலும், அடுத்த 30% முதலீட்டை முதல் 250 பட்டியலில் வராத நிறுவனங்களிலோ அல்லது கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வார்கள். மீதமுள்ளவற்றை, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவர்கள் முதலீடு செய்வார்கள்.
-
midcap funds. குறைந்தபட்சம் 65% முதலீட்டை, வரிசையில் 101-250க்குள் வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள்.
-
smallcap funds. குறைந்தபட்சம் 65% முதலீட்டை, வரிசையில் 250க்குப்பிறகு வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள்.
-
multicap funds. குறைந்தபட்சம் 25% முதலீட்டை, வரிசையில் முதல் 100 நிறுவனங்களிலும், அடுத்த 25%த்தை வரிசையில் 101-250 க்குள் வரும் நிறுவனங்களிலும், அடுத்த 25% முதலீட்டை வரிசையில் 250க்குப் பிறகு வரும் நிறுவனங்களிலும் முதலீடு செய்வார்கள்.
-
- Debt funds கணிசமான முதலீட்டை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளை debt fund என்று வகைப்படுத்தலாம். இவற்றில் குறுகிய கால முதலீட்டுக்கு உகந்தவற்றை நாம் ஏற்கெனவே விரிவாக பார்த்துவிட்டோம். நீண்டகால முதலீட்டுக்கு உகந்த சில debt fundகளைப்பற்றி பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வகைகள் இல்லாமல் நாம் ஏற்கெனவே ஒரு எடுத்துக்காட்டில் பார்த்ததுபோல, hybrid fundகள் நிறுனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் முதலீடு செய்வார்கள். இவை இல்லாமல், குறிப்பிட்ட தொழில் வகைகளில் முதலீடு செய்யும் sectoral திட்டங்கள், பல்வேறு நாடுகளின் நிறுவனங்களில் முதலீடு செய்யும் international திட்டங்கள், strategyஐ பின்பற்றும் திட்டங்கள், thematic திட்டங்கள் என்று நிறைய வகையான சேவைகளை AMC நிறுவனங்கள் நமக்கு அளிக்கின்றன.
இவைதவிர்த்து மேலும் வெளிப்படைத்தன்மையை நாம் எதிர்பார்க்கும் பட்சத்தில், equity வகையில் நமக்கு இன்னும் சிறந்த index fundகள் குறைந்த செலவில் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாக பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள சிக்கல்கள்
சரி, மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்டகால முதலீடுகளுக்குச் சரியான முதலீட்டு வழிசெய்யும் என்றாலும், இதிலும் சில சிக்கல்கள் நமக்கு வந்துசேர்கிறது. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதும் அவசியமாகிறது.
-
Fund manager risk. ஒவ்வொரு fundக்கும் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். அவருக்கு இருக்கும் புத்திக்கூர்மையை அந்த ஃபண்டு செயல்படும் விதத்தில் தெரிந்துகொள்ளமுடியும். ஒருவேளை அவர் தன் வேலையை மாற்றிக்கொண்டு வேறு நிறுவனத்துக்குச் சென்றுவிட்டால், அடுத்து வரும் அதிகாரி அதே அளவுக்குச் செயல்படுவாரா என்பது கேள்விக்குறிதான்.
-
Expense ratio. AMC நிறுவனங்கள் தங்களின் திட்டத்தை பராமரிப்பதற்கு ஆகும் செலவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சமீபமாக அவர்கள் கடைபிடிக்கும் ஒரு உத்தி, திட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகையின் அளவு குறைவாக இருந்தால், செலவுத் தொகையை கணிசமான அளவுக்குக் குறைத்துவைப்பார்கள். செலவு குறைகிறது என்று நாம் உடனடியாக அதில் குதிப்போம். ஆனால் போதிய அளவு முதலீட்டுத்தொகை சேர்ந்தபின் விலையை ஏற்றிவிடுவார்கள். நாம் வெளியேற வேண்டுமென்றால், குறைந்த காலத்தில் வெளியேறுவதற்கான தண்டத்தொகையை அந்த நிறுவனத்துக்கும், கிடைத்த இலாபத்தில் வரியை அரசாங்கத்துக்கும் தேவையில்லாமல் செலுத்தியாக வேண்டும்.
-
Liquidity risk. ஒரு இட்டத்தில் முதலீடு செய்திருக்கும் கணிசமான முதலீட்டாளர்கள் ஏதோ காரணத்துக்காக ஒரே சமயத்தில் முதலீட்டை வெளியே எடுக்க முற்பட்டால், நம் முதலீட்டின் மதிப்பும் குறைந்துவிடும் ஆபத்து உள்ளது. அதேபோல குறைந்த அளவு முதலீட்டைக் கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், நாம் வெளியேறும்போது நாம் விற்கும் யூனிட்டுகளை வாங்க ஆளில்லாமல், நட்டம் ஏற்படவோ அல்லது தேவையில்லாமல் பணம் வந்துசேருவதற்கு காலதாமதம் ஆகவோ வாய்ப்புள்ளது. குறிப்பாக ETF வகை முதலீடுகளில் இது அதிகம். எனவே சிலநூறு கோடிகளிலாவது முதலீட்டைக் கொண்டுள்ள திட்டத்தில் முதலீடு செய்வதே நமக்குப் பாதுகாப்பானது.
-
Change of fund’s style. சில நேரங்களில் நாம் முதலீடு செய்துள்ள ஃபண்டு தனது முதலீட்டு ஃபார்முலாவை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் நம் முதலீடும் அத்தகைய எதிர்பாராத மாற்றங்களுக்கு உள்ளாகும். சமீபமாக SEBI இவற்றில் சில வழிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.
-
complexity. நம்மால் நேரடியாக பங்குகளிலோ அல்லது கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வது கடினம் என்று இங்கே வந்தால், இவர்கள் நிறைய வகையான திட்டங்களைச் சந்தையில் விட்டு நமக்குக் குழப்பத்தை அளிக்கிறார்கள்.
ஒருவேளை நம் தேவைக்கு உகந்த திட்டங்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், SEBIல் பதிவுசெய்துகொண்ட ஆலோசகரை அணுகி அவர்களுடைய வழிகாட்டுதலில் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் நம் நீண்டகால மற்றும் குறுகியகால முதலீட்டுத் தேவையை பூர்த்திசெய்யக்கூடும். ஆனால் சந்தையில் கிடைக்கும் திட்டங்களை நம் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. முதலில் நமக்கு என்னென்ன முதலீட்டு இலட்சியங்கள் இருக்கின்றன, அவற்றுக்கு எத்தகைய திட்டங்கள் உதவக்கூடும் என்று அலசுவது ஒரு தெளிவைக் கொடுக்கும். அதேசமயம் நீண்டகால முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் திட்டங்களில் விலை மலிவாகவும் நம் முதலீட்டுக்குச் சிறந்ததாகவும் இருக்கும் Index வகை முதலீடுகளைப்பற்றியும் நாம் அறிந்துகொள்வது அவசியம்.
நிதிச் சுதந்திரத்தின் அடுத்த பதிவில், நமக்கு முக்கியமாகத் தெரிந்திருக்கவேண்டிய Index வகை passive முதலீடுகளைப்பற்றி விரிவாக பார்ப்போம்.